Published:Updated:

சிறுபான்மையினர் நலன் என்னும் பி.ஜே.பி அரசின் தராசு இரட்டை அளவுகோல்களைக் கொண்டதா?

அஸ்ஸாம் பேரணி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ``குடியுரிமைச் சட்ட பிரிவினைக் கால தவறுகளுக்கான பிராயச்சித்தம்” என்று குறிப்பிட்டிருந்தார். ``என்.ஆர்.சி-யை நிறைவேற்ற பிஜேபி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என பிஜேபி தலைவர் அமித் ஷாவும் குறிப்பிட்டிருந்தார்.

சிறுபான்மையினர் நலன் என்னும் பி.ஜே.பி அரசின் தராசு இரட்டை அளவுகோல்களைக் கொண்டதா?
சிறுபான்மையினர் நலன் என்னும் பி.ஜே.பி அரசின் தராசு இரட்டை அளவுகோல்களைக் கொண்டதா?

ஸ்ஸாம் மாநிலத்தில் தற்போது நீறு பூத்த நெருப்பு போல எரிந்துகொண்டிருக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) சர்ச்சை முடிவுறாத சூழலில் பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு, 2016-ம் ஆண்டு, 1955--ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தைத் திருத்த முயன்று பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றாமல் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. 

காங்கிரஸ், சமாஜ்வாடி, சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவுக்கு பி.ஜே.பி. எம்.பி சத்யபால் சிங் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். பல்வேறு கால நீட்டிப்புகளுக்கு இடையே இந்தக் குழு அனைத்துத் தரப்பினருடனும் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் டிசம்பர் 2017-ல் குழுத் தலைவர் சத்யபால், மத்திய அமைச்சராகப் பதவி ஏற்றதால் பி.ஜே.பி. எம்.பி ராஜேந்திர அகர்வால் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் விசாரணை மேற்கொண்டுவந்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு, தனது அறிக்கையைச் சமீபத்தில்  அரசிடம் சமர்ப்பித்தது. மற்ற கட்சி உறுப்பினர்களின் முழு ஒப்புதலின்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் சி.பி.எம். கட்சி எம்.பி-க்கள் எதிர்க்கருத்தை எழுத்துபூர்வமாகப் பதிவு செய்திருந்தனர்.

குடியுரிமைச் சட்டத்திருத்தம்:

1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தில், ``பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்த இந்து, சீக்கியம், பௌத்த, சமண, கிறித்துவ மற்றும் பாரசீக மதங்களைச் சேர்ந்த, இந்திய அரசால் குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள், இனி சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அவ்வாறு இந்தியாவில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் இயல்புரிமையின் மூலம் குடியுரிமை பெறுவதற்கான கால அளவும் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளிலிருந்து மேற்குறிப்பிட்ட சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமைச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவின்படி, அவர்களுடைய வம்சாவளியை நிரூபிக்க முறையான ஆதாரங்கள் இல்லாததால், பிரிவு 6-ன்படி, இந்தியாவில் 12 ஆண்டுகள் தங்கிக் குடியுரிமையைப் பெற்று வருகின்றனர். இதனால், அவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அதைப் போக்கவே இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 12 ஆண்டுகள் என்கிற கால அளவும் 7 ஆண்டுகளாகக் குறைக்கப்படவுள்ளது.

எதிர்ப்பு:

இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பி.ஜே.பி-யின் முக்கியக் கூட்டணிக் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அஸ்ஸாம் மாநில பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சியான அஸ்ஸாம் கன பரிஷத், குடியுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. 

பி.ஜே.பி. கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தம் இந்திய அரசு 1985-ம் ஆண்டு அஸ்ஸாம் தலைவர்களுடன் கையெழுத்திட்டுள்ள அஸ்ஸாம் ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளது என்று தெரிவித்து, அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் இறங்கியுள்ளன. மேலும் ``குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாக வைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் எதிரானதாக அமைகிறது” எனக் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உட்படப் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். 

அஸ்ஸாம் ஒப்பந்தம்:

1980-களில் அஸ்ஸாமில் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. வங்கதேசத்திலிருந்து பெருமளவில் அகதிகளாக வந்து, அஸ்ஸாமில் குடியேறுவது பூர்வீக அஸ்ஸாமியர்களின் கலாசாரத்துக்கும் வாழ்க்கைமுறைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக அந்தப் போராட்டங்கள் நடந்தன. இதற்குத் தீர்வுகாணும் பொருட்டு 1985-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்திய அரசு அஸ்ஸாம் இயக்கத்தினருடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

அஸ்ஸாம் ஒப்பந்தம் என அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையின்படி, ``மார்ச் 25, 1971-க்குப் பின்னர் இந்தியாவில் குடியேறிய அண்டை நாட்டவர்கள் (வங்கதேசத்தவர்கள்) எவருக்குமே குடியுரிமை வழங்கப்படாது, அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தது.

தேசத் துரோக வழக்கு:

இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதற்காக அஸ்ஸாமைச் சேர்ந்த கல்வியாளர் ஹிரன் கோகெயின், செயற்பாட்டாளர் அகில் கோகாய் மற்றும் பத்திரிகையாளர் மஞ்சித் மஹந்தா ஆகியோர் மீது தேசத் துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசியல் விமர்சகர் பேராசிரியர் மணிவண்ணன் பேசுகையில், ``அஸ்ஸாம் போராட்டங்களைப் பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேசுகையில் `இந்தச் சட்டம் இந்தியா முழுமைக்குமானது' என்றார். ஆனால், இது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் அரசியலுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைதான். உண்மையாகவே அண்டை நாடுகளில் பாதிக்கப்படுகிற சிறுபான்மையினர் மீது நலன் இருந்தால் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றி, இதில் ஏன் ஒரு குறிப்புகூட இல்லை? இந்திய வம்சாவளி அகதிகள் எனக் கூறுகிறார்கள். ஆனால், குடியுரிமை வழங்குவதில் முஸ்லிம்களை ஒதுக்கியுள்ளது முரணாக உள்ளது. மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்குவது சரியாக இருக்காது. மியான்மரின் ரோஹிங்யா அகதிகளைப் பற்றி இங்கு விவாதங்கள்கூட இல்லை. தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மூலம் விலக்கப்படுபவர்களைக் குடியுரிமைக்குத் தகுதியுடையவர்களாக ஆக்குவதற்கே இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன” என்றார்.

தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மற்றும் குடியுரிமைச் சட்டத்திருத்தம் இரண்டும் ஒரு புள்ளியில் இணைவதாகவே பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் இந்த இணைப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், ``ஆரம்பம் முதலே பி.ஜே.பி., குடிபெயர்ந்த முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான கருவியாகவே என்.ஆர்.சி-யைப் பார்த்துவந்தது. தற்போது இந்தக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தின் மூலம் எந்த இந்துக்களும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறது” என்றார்.

அனைத்து அசாம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த உட்பல் சர்மா நம்மிடம் பேசுகையில், “சுதந்திரத்திற்கு பிறகு, காங்கிரஸ், பாஜக எந்தக் கட்சி மத்தியில் ஆட்சி செய்தாலுமே வடகிழக்கு மாநிலங்கள் டெல்லியில் இருந்து அரசியல் அநீதியை மற்றுமே பெற்று வந்துள்ளது. வங்காளத்திற்கு கிழக்கே இந்தியாவின் ஒரு பகுதி இருப்பதையே டெல்லியில் உள்ளவர்கள் மறந்துவிடுகிறார்கள். காங்கிரஸ் மீது இருந்த அதிருப்தியின் காரணமாகத் தான் கடந்த தேர்தலில் பாஜக வலுவான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. மாநில பாஜக-வினருக்கு இடையுமே இதற்கு எதிர்ப்பு வலுவாக உள்ளது. ஆனால் மத்திய அரசு இதை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்து பூர்வகுடி மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. ஏழு வடகிழக்கு மாநிலங்களுமே இதற்கு எதிராக ஒன்றாக இருக்கின்றன” என்றார்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் மற்றும் பேராசிரியர் அபூர்பா பருஹா பேசுகையில், ``இந்தச் சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. பி.ஜே.பி. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. அஸ்ஸாம் மாநில மக்களின் அடையாளத்துக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடிய செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. மாணவர் அமைப்பு, அரசியல் கட்சிகளையும் தாண்டி பொதுமக்களும் வீதிகளில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டனர். எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க மாநில பி.ஜே.பி. அரசு, அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் கையாண்டு வருகிறது. அஸ்ஸாம் மாநில மக்களின் அடையாளத்தைக் குறிவைத்து இந்திய அரசு எடுக்கிற எந்தவொரு நடவடிக்கையும் மிகவும் பலமான எதிர்வினைகளைச் சந்திக்கும். மக்களை மொழிரீதியாக மட்டுமல்லாமல், மத ரீதியாகவும் பிரிக்க பி.ஜே.பி. முயல்கிறது. அஸ்ஸாம் மட்டுமல்லாமல் பல்வேறு வடகிழக்கு மாநிலக் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன” என்றார்.

அஸ்ஸாம் பேரணி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ``குடியுரிமைச் சட்ட பிரிவினைக் கால தவறுகளுக்கான பிராயச்சித்தம்” என்று குறிப்பிட்டிருந்தார். ``என்.ஆர்.சி-யை நிறைவேற்ற பிஜேபி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்” என பிஜேபி தலைவர் அமித் ஷாவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்யா அகதிகள் எதிர்கொண்டுள்ள மிகக் கொடுரமான அடக்குமுறை, இனப்படுகொலை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அண்டை நாடுகளில் பாதிக்கப்படும் சிறுபான்மையினர் நலன் பற்றிப் பேசி வரும் மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் ஏழு ரோஹிங்யா அகதிகளைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மியான்மருக்கு நாடு கடத்தி அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைத்தது. இதன்மூலம் சிறுபான்மையினர் நலன் என்னும் பி.ஜே.பி. அரசின் தராசு, இரட்டை அளவுகோல்களைக் கொண்டதா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.