Published:Updated:

`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது!' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி

ஆ.விஜயானந்த்

"தினகரனை ஒதுக்கிவிட்டு பன்னீர்செல்வத்தை நம்முடன் சேர்த்துக்கொண்டதற்குக் காரணம், ஜெயலலிதாவிடம் இருந்ததுபோல எடப்பாடி பழனிசாமியிடம் அவர் இருப்பார் என நம்பியதுதான்."

`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது!' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி
`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது!' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் வளர்த்த விவகாரம் அரசியல்ரீதியாக விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. `மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வதற்காக வடதமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலைவரை சந்தித்துப் பேசியுள்ளனர் பன்னீர்செல்வம் தரப்பினர். இந்தத் தகவலை அறிந்து கொதிப்பில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் கடந்த 20-ம் தேதி அதிகாலையில் யாகம் ஒன்றை நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். இந்தத் தகவலை அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், `தலைமைச் செயலகம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஓர் இடம். அங்கு யாகம் வளர்க்க அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார். தனது முதல்வர் பதவி பறி போனபோது ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார் பன்னீர்செல்வம். அவருக்குத் துணை முதல்வர் பதவி கிடைத்தது. அதேபோல் தற்போது கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கொலைக் குற்றவாளியாகச் சிறைக்குச் செல்ல இருக்கிறார். அதனால்தான் மீண்டும் முதல்வர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் எனப் பன்னீர்செல்வம் யாகம் வளர்த்திருக்கிறார்' என்றார்.

ஸ்டாலின் பேச்சுக்குப் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், "யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடுவோம் என்றால் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் யாகம் நடத்துவார்களே. மூடநம்பிக்கைகளை ஸ்டாலின் நம்புகிறாரா? தினமும் தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறைக்குச் சென்றதும் சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால், யாகம் நடத்தினேன் எனப் பரவிய தகவல் சுத்தப்பொய். எந்தப் பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என நினைத்து மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். சமீபகாலமாக ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார். இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது" என்றார் பொறுமையாக. 

அதேநேரம், `` ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்திய விவகாரத்தில் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி’’ என நம்மிடம் விவரித்தார் அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ``கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. `இந்த வழக்கை அரசியல்ரீதியாக அவர் எதிர்கொள்ளும் வகையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தன்னுடைய கையில் உள்ள போலீஸ் இலாகாவை வேறு ஒருவருக்கு வழங்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார் ஓ.பன்னீர்செல்வம். அதாவது, `எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படும்போது, அ.தி.மு.க-வின் இரண்டு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தானே முதல்வர் ஆகிவிடலாம்' என அவர் கணக்குப் போடுகிறார். இதற்காக, வடதமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலைவர் ஒருவரைச் சந்தித்திருக்கிறார் பன்னீர்செல்வத்தின் வாரிசு ஒருவர். ஆன்மிகத் தலைவருடனான சந்திப்பின்போது, `நீங்கள்தான் டெல்லியில் பேசி முடித்துக் கொடுக்க வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். 

இந்தச் சந்திப்பு குறித்த தகவலை உளவுத்துறை மூலமாகக் கண்டுபிடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதன் விவரத்தை அறிக்கையாக முதல்வரிடம் கொடுத்துள்ளனர் அதிகாரிகள். அந்த அறிக்கையைக் கவனித்த எடப்பாடி பழனிசாமி, `என்னை இந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆன்மிகத் தலைவரை சந்தித்துள்ளனர். இந்த ஆட்சியில் என்னுடைய அனுமதியில்லாமல் வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது. நானும் முதல்வராக இருந்துவிட்டேன். அவரும் (பன்னீர்செல்வம்) முதல்வராகப் பதவியில் இருந்துவிட்டார். அப்படியே நான் விலகுவதாக இருந்தாலும் மூன்றாவதாக ஒருவர்தான் இந்தப் பதவிக்கு வருவார். என்னைக் கவிழ்த்துவிட்டு வேறு யாரும் இந்த இடத்துக்கு வருவதை நான் அனுமதிக்க மாட்டேன். ஒன்று நான் பதவியில் நீடிப்பேன் அல்லது என்னுடைய நாமினி இந்தப் பதவியில் இருப்பார். இந்த விவகாரத்தில் அந்த ஆன்மிகத் தலைவர் தலையிட மாட்டார் என நம்புகிறேன். அவர்களுக்கும் இது தேவையில்லாத விஷயம். இதற்கு மேலும் அந்த ஆன்மிகத் தலைவர் தலையிட்டால், அது அவர்களுக்கும் நல்லது கிடையாது' எனக் கொந்தளித்துத் தீர்த்துவிட்டார்’’ என்றார் விரிவாக. 

இதன் பிறகு, நம்மிடம் பேசிய கொங்கு மண்டல நிர்வாகி ஒருவர், ``ஆன்மிகத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகுதான் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியிருக்கிறார் பன்னீர்செல்வம். மீண்டும் பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார். தினகரனை ஒதுக்கிவிட்டு பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டதற்குக் காரணம், ஜெயலலிதாவிடம் இருந்ததுபோல எடப்பாடி பழனிசாமியிடம் அவர் இருப்பார் என நாங்கள் நம்பியதுதான். யாரையும் பகைத்துக் கொள்ளாமல் ஆட்சி நடத்துவதால் தவறான கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். இந்தச் சந்திப்பின் விளைவுகளை அடுத்தடுத்த நாள்களில் பார்க்கலாம்’’ என்றார் கொதிப்புடன்.