Published:Updated:

பா.ஜ.க மீது ஏன் இந்த திடீர் பாய்ச்சல்?- தம்பிதுரையின் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு!

கலிலுல்லா.ச
பா.ஜ.க மீது ஏன் இந்த திடீர் பாய்ச்சல்?- தம்பிதுரையின் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு!
பா.ஜ.க மீது ஏன் இந்த திடீர் பாய்ச்சல்?- தம்பிதுரையின் நாடாளுமன்றத் தேர்தல் கணக்கு!

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால் அது நாடாளுமன்றத் தேர்தலில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கணக்குப்போட்டு வருகிறார் தம்பிதுரை. கட்சி இசைவு தெரிவித்தாலும், தம்பிதுரை உடன்படுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக் கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றன. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கான வேட்பாளர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க எம்.பி-க்கள் தயக்கம்காட்டி வருகின்றனர். குறிப்பாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, ஊடகங்களில் பேசிவருகிறார். அவரின் இந்தப் பேச்சுக்கு கட்சித்தலைமை இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தம்பிதுரையின் இந்தக் கருத்துகள் குறித்து பா.ஜ.க-வினர் அவரது சொந்த கருத்து என்று மழுப்பினர்.

இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜாரானபோதும்கூட அவர்,`பா.ஜ.க தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும்போது வாயை மூடி அமைதியாக இருக்கமுடியாது. எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது' என்று கடுமையாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அ.தி.மு.க-வினர், ``ஆரம்பத்தில் பா.ஜ.க கூட்டணி குறித்து எம்.பி-க்கள் தயக்கம் காட்டியது உண்மை தான். அவர்கள் ஓரளவு சமாதானம் ஆனபோதிலும் தம்பிதுரை தன் முடிவை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை. காரணம் நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வி பயம்தான். கரூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை கவுண்டர்கள் சமுதாயத்தினர் வாக்குகள் தான் பிரதானம்.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத்தேர்தலும் சரி, 2014-ம் ஆண்டு நடைந்த மக்களவைத் தேர்தலிலும் செந்தில்பாலாஜியின் மூலம் கவுண்டர் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு கிடைத்தன. இதனால் தம்பிதுரையின் வெற்றி சுலபமானது. ஆனால், இந்த முறை செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குச் சென்றுவிட்டார். எப்படியும் பெரும்பான்மையான வாக்குகளை அவர் பறித்து விடுவார். இதனால் அடுத்தபடியாக இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என எண்ணுகிறார் தம்பிதுரை. கரூரில் கவுண்டர்களுக்கு அடுத்து இஸ்லாமியர்களின் வாக்குகள்தான் அதிகம். இப்படியிருக்க பா.ஜ.க-வுடன் கைகோத்தால். இஸ்லாமியர்கள் வாக்கும் பறிபோய்விடும். நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் தோல்விதான் என்று கணக்குப்போடுகிறார் தம்பிதுரை. இதுதான் பா.ஜ.கவை அவர் வெறுப்பதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல், முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக அவர் பேசியதும் இதன் ஒருபகுதிதான்'' என்கிறார்கள்.