Published:Updated:

``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிலேயே கருத்து வேறுபாடு உள்ளது!’’ - தமிழிசை

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டதாக ஒரு தோற்றத்தை உருவாகியுள்ளதாகக் காட்டிக்கொள்பவர்களே கருத்து வேறுபாட்டுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது.

``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிலேயே கருத்து வேறுபாடு உள்ளது!’’ - தமிழிசை
``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிலேயே கருத்து வேறுபாடு உள்ளது!’’ - தமிழிசை

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க பி.ஜே.பி வியூகம் வகுத்து வருவதாகக் கடந்த சில மாதங்களாகத் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், பி.ஜே.பி-யின் வியூகம் முழுமை அடையுமா என்பதுதான் தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆரம்பத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பி.ஜே.பி-க்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக, காவிரி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்துப் பேசிய முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியை நீக்குமளவுக்குப் பாசத்தை வெளிப்படுத்தினர். அப்படி, பி.ஜே.பி ஆதரவாக இருந்த அவர்கள் இருவருமே நாளடைவில் அந்தக் கட்சியை எதிர்த்துப் பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது அ.தி.மு.க எம்.பி-க்கள் தம்பிதுரை, குமார் ஆகியோரும், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் எதிர்த்துப் பேசி வருகின்றனர். இப்படியான பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார், மாநில பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

 இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு, பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி மையமாகத் தமிழகம் இருக்கிறது’’ என்றார். அவருடைய இந்தக் கருத்துக்கு அ.தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``பி.ஜே.பி ஆளும் மாநிலத்தைவிடத் தமிழகம் சிறப்பாக உள்ளது’’ எனப் பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் 

ராஜு, ``பி.ஜே.பி-யுடன் இணக்கமாக இருந்துதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்தோம். இனி, அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) பாணியில் பி.ஜே.பி-யுடன் ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம். அதனால் எந்த மதவாதச் சக்திகளுடனும் கூட்டணி இல்லை’’ என்றார்.

அதேபோல், மக்களவைத் துணை சபாநாயகரான தம்பிதுரை, ரஃபேல் ஊழல் பற்றிய கடுமையான விமர்சனத்தை வைத்தார். மேலும், 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அதுகுறித்து சில தகவல்களைச் சுட்டிக்காட்டிய தம்பிதுரை, ``மோடி வாக்குறுதியளித்த 15 லட்ச ரூபாயைக் கொடுத்திருந்தால், இடஒதுக்கீடு தேவையே இருந்திருக்காது’’ என்றார். மேலும், ``பிற மாநிலங்களில் பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள்கூடச் சாதிப் பெயரைத் தங்களுடைய பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்கிறார்கள். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தெலங்கானாவில் முதல்வர் சந்திர சேகர ராவ் எனப் பல தலைவர்களும் தங்களுடைய பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக்கொள்கிறார்கள். ஏன், `படேல்' என்பதையும் சேர்த்துக்கொள்கிறார்கள். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியே, `நரேந்திரன்’ என்ற தனது பெயருக்குப் பின்னால் `மோடி’ என்று போட்டுக்கொள்கிறார். இப்படி, பலரும் சாதியைச் சேர்த்துக்கொள்ளும் நிலை பல மாநிலங்களில் இன்னுமிருக்கிறது’’ என்று மோடியின் பெயர் குறித்து நேரிடையாகவே விமர்சனம் செய்திருந்தார். அதற்கும் மேலே ஒருபடி போய், ``பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை’’ என்றும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் அ.தி.மு.க-வின் மற்றோர் எம்.பி-யான அன்வர் ராஜா ஜி.எஸ்.டி மசோதா மற்றும் முத்தலாக் சட்ட மசோதா குறித்து விமர்சனம் செய்திருந்தார். அந்தச் சமயத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி, ``அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால்தான் பி.ஜே.பி தமிழகத்தில் காலூன்ற முடியும்’’ என்று சொல்ல... அதற்குப் பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ``அது, அவருடைய ஆசையாக இருக்கலாம். அதற்காக நாங்கள் கூட்டணி  வைக்கமாட்டோம்’’ என்று அ.தி.மு.க சார்பில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.  

இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி திருச்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ``ராணுவ இடம் ஒதுக்குவது தொடர்பான கோப்புகள் என்னிடம் வந்து சேரவில்லை’’ என்றார். அப்போது குறுகிக்கிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் எம்.பி குமாரும், ``அந்தக் கோப்பு அனுப்பப்பட்டு ஆறுமாதம் ஆகிறது’’ என்றனர் ஒருமித்த குரலில். 

இப்படி அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே கருத்து மோதல்கள் வலுத்துவரும் நிலையில், இருகட்சிகளிடையே கூட்டணி உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்னவென்பதை அறிய அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பேசினோம்.

``இன்னும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி முடிவாகவில்லை. நாங்கள் எங்கள் கருத்தைப் பேசி வருகிறோம். அவர்கள் கருத்தை, அவரவர் பேசி வருகிறார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரும் பேசி வருகிறார்கள். குறிப்பாக, தம்பிதுரை தொடர்ந்து மூன்று மாதமாக பி.ஜே.பி-க்கு எதிராகப் பேசி வருகிறார். சில விஷயங்களை சிலர் எதிர்மறையாகப் பேசி வருகின்றனர். அதற்கு, நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிகாரபூர்வமாகக் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதுபற்றித் தெரியவரும். கூட்டணி முடிவான மாதிரியான ஒரு தோற்றத்தைவைத்து அ.தி.மு.க-வினர் இவ்வாறு பேசுவது சரியல்ல.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டதாக, ஒரு தோற்றத்தை உருவாகியுள்ளதாகக் காட்டிக்கொள்பவர்களே கருத்து வேறுபாட்டுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, 10 சதவிகித இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக இல்லை. அதேபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இங்கிருந்துகொண்டு பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவருகிறார். கொல்கத்தா கூட்டத்துக்குப் போன ஸ்டாலின், அங்கே ஏன் இதை அறிவிக்கவில்லை? அதனால் கருத்துகள் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. இதனால், மற்றவர்கள் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றார். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ``நாடாளுமன்றத் தேர்தலுக்கு பி.ஜே.பி - அதி.மு.க கூட்டணி அமையும். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற அ.ம.மு.க துணைச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வோடு இணைய வேண்டும்" என்றார்.

கட்சிகளிடம் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.