Published:Updated:

`தவறான தகவல் பரப்பப்படுகிறது!’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்

கலிலுல்லா.ச
`தவறான தகவல் பரப்பப்படுகிறது!’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்
`தவறான தகவல் பரப்பப்படுகிறது!’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என, அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள இந்தியரான தொழில்நுட்ப வல்லுநர் சையது சுஜா, ஸ்கைப் மூலம் கருத்துகளை தெரிவித்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்துதான் மோடி பிரதமரானார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், லண்டனில் இருக்கும் பத்திரிகையாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில், இந்தியரான தொழில்நுட்ப வல்லுநர் சையது சுஜா, ஸ்கைப் மூலம் உரையாடினார். அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் கலந்துகொண்டிருந்தார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படியெல்லாம் ஹேக் செய்ய முடியும் என்பதுகுறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார் சையத். தொடர்ந்து அதிரவைக்கும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர்,` 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்துதான் மோடி பிரதமரானார். இயந்திரங்களை ஹேக் செய்வதற்கு பா.ஜ.கவுக்கு உதவியது ரிலையன்ஸ் நிறுவனம்தான். இந்த மோசடியால் கிட்டத்தட்ட 201 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக்கொண்ட கவுரி லங்கேஷ் கொலையானார்'' என்று கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம், ``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெல் (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) மற்றும் ஈ.சி.ஐ.எல் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) நிறுவனங்களில், மிகுந்த பாதுகாப்புடனும் தீவிர கண்காணிப்புடனும் தயாரிக்கப்படுகின்றன.

அவற்றை ஹேக் செய்வது என்பது நடக்க முடியாத ஒன்று'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதோடு, ``லண்டனில் நடந்த அந்தக் கூட்டம், எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாக தேர்தல் ஆணையம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யமுடியும் என்று தவறான தகவல் பரப்பியவர்கள் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.