Published:Updated:

``ஓவியங்கள் இன்னும் நாகரிகமாக இருந்திருக்கலாம். ஆனால்..." பேராசிரியர் அருணன்

``கல்வி கற்பதற்கு ஒரு சமூகத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்ட காலத்தில் சூத்திரர்கள், பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகளைப் பட்டதாரிகளாக மாற்றியதுடன் அதற்கு அடித்தளமாக இருந்தது லயலோ கல்லூரி. இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப் பின்புலம் கொண்ட கல்லூரியை மூட வேண்டுமெனச் சொல்லும் அளவுக்கு வன்மம் எங்கிருந்து வந்தது"

``ஓவியங்கள் இன்னும் நாகரிகமாக இருந்திருக்கலாம். ஆனால்..." பேராசிரியர் அருணன்
``ஓவியங்கள் இன்னும் நாகரிகமாக இருந்திருக்கலாம். ஆனால்..." பேராசிரியர் அருணன்

சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மய்யமும் இணைந்து, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லயோலோ கல்லூரி வளாகத்தில் `கலைத் திருவிழா'-வை நடத்தின. நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவம், அந்தக் கலைஞர்களின் உரிமை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற இந்த விழாவில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. அதில் சாதி மற்றும் பாலியல் போன்றவற்றால் ஏற்படும் வன்முறைகள் குறித்த ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததுடன், மத்தியில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவை விமர்சிக்கும் வகையிலான சில ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தன. 

பாரத மாதா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சில ஓவியங்கள் வரையப்பட்டு, அவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டு, அதற்கு பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்திருந்தார். பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் அதுபோன்ற ஓவியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்புக் கடிதம் வெளியிட்டது. இந்தக் கலைத் திருவிழாவில் லயோலோ கல்லூரியுடன் இணைந்து பங்காற்றிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அதிகாரபூர்வமாகத் தனது தரப்பை வெளிப்படுத்தாத நிலையில் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.

``கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் நெல்லையில் லெனின் சிலைத் திறப்பு விழாவுக்காகச் சென்றிருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்துக் கருத்து தெரிவிப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த விஷயம் குறித்து, நான் சொல்ல விரும்புகிற சில விஷயங்கள் என்னவென்றால், காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியங்களில் ஒருசிலவற்றில் வெளிப்பட்ட கருத்து இன்னும் கொஞ்சம் நாகரிகமாக இருந்திருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஓவியக் கண்காட்சியைப் பொறுப்பேற்று நடத்திய காளீஸ்வரன் `இது நிகழ்ந்திருக்கக் கூடாது' என வருத்தம் தெரிவித்திருக்கிறார். இத்துடன் இதை முடித்துக்கொள்ள வேண்டும். 

ஆனால், பி.ஜே.பி. இதை அரசியலாக்க முயல்கிறது. லயோலா கல்லூரியை மூட வேண்டுமென பி.ஜே.பி சொல்கிறது. அவ்வாறு கூறவேண்டிய அவசியம் என்ன? கல்வி கற்பதற்கு ஒரு சமூகத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்ட காலத்தில் பின்தங்கியவர்களின் வீட்டுப் பிள்ளைகளை பட்டதாரிகளாக மாற்றியதுடன், சமூக மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது லயோலா கல்லூரி. இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப் பின்புலம் கொண்ட கல்லூரியை மூட வேண்டுமெனச் சொல்லும் அளவுக்கு வன்மம் எங்கிருந்து வந்தது? லயோலா கல்லூரிக்கு எதிராக இந்துக்களை ஒன்று திரட்டுவதன் மூலம் இந்து, கிறிஸ்தவர்களிடையே பகைமை உணர்வை உருவாக்கி, மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை, குறிப்பாக ஹெச்.ராஜா செய்யப் பார்க்கிறார். தொடர்ந்து இவ்வாறு ராஜா பேசி வருவது எங்குபோய் முடியுமெனத் தெரியவில்லை. 

சொல்லப்போனால் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியங்கள், பி.ஜே.பி ஆட்சியின் மீதும் அவர்களின் கொள்கைகள் மீதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதும் கூறப்படும் விமர்சனங்களே அன்றி இந்துக்களுக்கு எதிரானது அல்ல. ஒரு கலைஞன், தான் வாழ்கிற நாட்டின் மீது இருக்கிற விமர்சனத்தைத் தன் கலையின் வழியாக வெளிப்படுத்துகிறான். அதில் இருக்கிற அவனுடைய கோபம், அக்கறை ஆகியவற்றைப் பற்றி உரையாடுகிற, விவாதிக்கிற ஆரோக்கியமான சூழல் இங்கு இல்லை. மாறாக, அதை இந்துக்களுக்கு எதிரான ஒன்றாக சித்திரிக்க பி.ஜே.பி முயல்கிறது.  

வரையப்பட்ட ஓவியங்கள் அநாகரிகம், அருவருப்பு என்றெல்லாம் கூறும் இவர்கள், இந்த ஓவியங்களுக்காக வருத்தம் தெரிவித்த காளீஸ்வரனையும், அவரின் குடும்பத்தினரையும் எவ்வளவு ஆபாசமாகத் திட்டுகிறார்கள் என்று தெரியுமா? காளீஸ்வரனுக்குக் கொலை மிரட்டல் விட்டிருக்கிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்வது நாகரிக சமூகத்தின் வளர்ச்சி. ஆனால், தங்கள்மீது விமர்சனம் எழும்போதெல்லாம் இந்து அமைப்பினர் வன்முறையையே கையில் எடுக்கின்றனர்" என்றார்.