Published:Updated:

வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!

வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!
பிரீமியம் ஸ்டோரி
வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!

ரசுப்பள்ளிகளில், இரண்டு மாணவர்கள் தவறு செய்து விட்டால், இருவரையும் எதிரெதிரே நிற்கவைத்து, ஒருவருடைய காதுகளை மற்றவரைப் பிடிக்க வைத்து, இருவரையும் சேர்ந்து தோப்புக்கரணம் போடச் சொல்வார் ஆசிரியர்.  இருவரும் ‘உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்டே’ என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும். 

வளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க!

தமிழகத்தில், அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் கூட்டணி வைத்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு, இப்படித்தான் நடக்கும். இது, இரு தரப்புக்கும் நன்கு தெரியும். ஆனால், தெரிந்தே, இப்படி ஒரு கூட்டணியை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான், இரண்டு ஆளுங்கட்சிகளும் இருக்கின்றன.

திரும்பிய திசையெல்லாம் தமிழகத்தில் பா.ஜ.க. மீது அதிருப்தி நிலவுகிறது.  தமிழகத்தை மத்திய அரசு, எப்படியெல்லாம் புறக்கணிக்கிறது என்பதை பள்ளிக்கூட மாணவன் கூட சொல்லி விடுவான். கஜா புயல் நிவாரணமாகத் தமிழக அரசு கோரியது ரூ. 17,610 கோடி. இணக்கமாக இருப்பதால், நிச்சயமாக அள்ளிக் கொடுக்குமென்று எதிர்பார்த்த தமிழக அரசை எள்ளி நகையாடுவது போல, மோடியின் அரசு கிள்ளிக் கொடுத்தது, ரூ.1146 கோடி.

பிஜேபி அரசு பதவியேற்ற பின், கடந்த 2015லிருந்து 2019 வரை, தமிழகத்தில் ஏற்பட்ட புயல், பெருமழை, வெள்ளம் மற்றும் வறட்சி என இயற்கைப் பேரிடர்களுக்காக மத்திய அரசிடம் தமிழகம் கோரியது, ரூ.97, 352 கோடி. கஜா புயல் நிவாரணத்தையும் சேர்த்து, மத்திய அரசு கொடுத்துள்ளது, ரூ.5383 கோடி மட்டுமே.

எதிர்கால வளர்ச்சிக்குத் தேவை என்று, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில், சென்னை–சேலம் எட்டு வழிச்சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கத் தயாராகவுள்ள மத்திய அரசு, கஜா புயலால் இன்று வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தைத் துாக்கி நிறுத்த 1,146 கோடியை மட்டும் ஒதுக்குவது என்ன விதமான தேசியம் என்று சமூகவலைதளங்களில் கேட்கிறார்கள் தமிழக இளைஞர்கள்.

ரஜினியை நம்பியது பலன் தரவில்லை. புதுப்புது படங்களுக்கு பூஜை போடும் அவர், புதுக்கட்சி துவக்குவதில் பூஜ்யத்திலேயே நிற்கிறார். கமல், கருப்புச்சட்டைக்காரர். அதனால், ‘வாஜ்பாய் காலத்து கூட்டணி; பழைய நண்பர்களுக்கு வரவேற்பு’ என்றெல்லாம் தி.மு.க.,வுக்கு மோடி நுால் விட்டுப் பார்த்தார்.

ஆனால், சென்னையில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தாலும், கொல்கத்தாவில் மம்தா முன்னிலையில், அதைப்பற்றி வாயே திறக்காமல் இருந்தாலும், இரு இடங்களிலும் மோடியை வெளுத்து வாங்குவதில் மு.க.ஸ்டாலின் குறையே வைக்கவில்லை. நேர்மையான ஆட்சி என்று மார் தட்டும் மோடி அரசு, ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க. ஆட்சியை பல விதங்களிலும் காப்பாற்றியதை எளிதில் மறக்க முடியாது என்கிறார்கள் தி.மு.க.வினர்.

ஓ.பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிச்சாமியையும் கவர்னர் கை கோத்து வைத்ததும், அ.தி.மு.க. அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்களைப் பற்றி, ஒன்றுமே தெரியாதது போல, பிஜேபி அரசு அமைதி காப்பதும் நாடாளுமன்ற கூட்டணிக்காகவே என்பது அவர்களின் ஆணித்தரமான குற்றச்சாட்டு.

உடன் பிறப்புகளும் ஒதுங்கி விட, தமிழகத்தில் பிஜேபிக்குச் சவாரிக்குக் கிடைத்ததில் சிறந்த குதிரையாகத் தெரிவது அ.தி.மு.க.மட்டுமே. ஆனால், தமிழக வாக்காளர்களின் மனநிலையை ஆய்வு செய்துள்ள உளவுத்துறையின் அறிக்கைகளும், சமீபத்திய கருத்துக்கணிப்புகளும், இந்த கூட்டணி ஆசைக்கு வேட்டு வைப்பதாகவே உள்ளன.

நிர்வாகச்சீர்கேடு, அளவற்ற லஞ்சம், மாநிலத்தின் உரிமைகளை தங்களது சுயநலத்துக்காக விட்டுக்கொடுப்பது போன்ற காரணங்களால் அ.தி.மு.க. அரசின் மீதும், பெரும்பான்மை வாக்காளர்கள், கடும் கோபத்தில் இருப்பதையே இந்த கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பிஜேபியுடன் கரம் கோர்த்தால், அடி பலமாக இருக்குமென்பதை உணர்ந்தே, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அதை வேண்டாமென்கின்றனர். தம்பிதுரை, பிஜேபியை பிரித்து மேய்வதும், இதனால் தான்.

யார் என்ன சொன்னாலும், கூட்டணிக்குத் தயாரில்லை என்று சொல்லுகிற துணிச்சல், இன்றைய அ.தி.மு.க.தலைமைக்குத் துளியும் கிடையாது. பிஜேபி தலைமையுடன் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துவதில்தான், ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

கஜா புயலுக்கு உரிய நிவாரணம் கொடுக்காவிட்டாலும், ஜி.எஸ்.டி. பங்கைத் தராவிட்டாலும், உள்ளாட்சிகளுக்குரிய நிதியை மறுத்தாலும் பிஜேபிக்கு எதிராக, இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிகள் எதுவுமே வாய் திறக்க மாட்டார்கள். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநில அரசின் உரிமைகளையும், அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தின் தன்மானத்தையும் மோடியிடம் மொத்தமாய் அடகு வைத்து விட்டதாக எதிர்க்கட்சியினர் மட்டும் குற்றம்சாட்டவில்லை; ஆளும்கட்சியினரும் அதை அறிந்தேவைத்துள்ளனர்.

சேகர் ரெட்டி டைரி விவகாரம், அமைச்சர் விஜய பாஸ்கரிடம் பலகட்ட விசாரணை, தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை என்று அவ்வப்போது பூச்சாண்டி காட்டுவதும், அதன் பின் அப்படியே கிடப்பில் போடுவதும் அ.தி.மு.க., ஆட்சியாளர்களைத் தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் வித்தைதான். பிஜேபியைக் கழட்டிவிட்டு, பா.ம.க., தே.மு.தி.க., கொ.ம.க., மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளைச் சேர்த்துப் போட்டியிட்டால் கூட, அதிக இடங்களைப் பிடிக்கலாம் என்பது அ.தி.மு.க.தலைமைக்குத் தெரிந்தாலும், பிஜேபியைக் கழற்றி விடுகிற தைரியம் இப்போதைக்கு இல்லை.

போதாக்குறைக்கு, கொடநாடு மர்ம மரணங்கள் குறித்த வீடியோவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஏகப்பட்ட சிக்கலை ஏற்படுத்தி விட்டன. ஆக மொத்தத்தில், பிஜேபியுடனான அ.தி.மு.க.,கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. நாற்பதில் பாதியை பிஜேபியிடம் கொடுத்து, கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளச் சொல்லி விட்டு, மீதி இடங்களில் போட்டியிட அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் தயாராகி விட்டதாகவே தெரிகிறது.

ஊழல் எதிர்ப்பையே உறுதிமொழியாகச் சொல்லும் பிஜேபியும், ஊழல் குற்றச்சாட்டுகளில் உழன்று கொண்டிருக்கும் அ.தி.மு.க.வும் இணையும் இந்தக் கூட்டணி, தாமரை–இலைத் தண்ணீர் போலத்தான் இருக்குமென்றே அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

ஒருவேளை அ.தி.மு.க.,வும் கழற்றி விட்டால் என்ன செய்வதென்று நினைத்தாரோ என்னவோ, தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்று கேட்ட பிஜேபி நிர்வாகிக்கு, ‘மக்களுடன் தான் கூட்டணி’ என்றும் பதில் சொன்னார் மோடி. மக்களுடன் கூட்டணி வைப்பதெல்லாம் இருக்கட்டும். முதலில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள் மாண்புமிகு பிரதமரே!.

சே.சேவியர் செல்வகுமார்