Published:Updated:

வரலாறு முக்கியம் பிரதமரே!

வரலாறு முக்கியம் பிரதமரே!

பிரீமியம் ஸ்டோரி

சோனியா காந்தியிடம் மன்மோகன்சிங் சரணாகதியான கதையை ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ (தற்செயல் பிரதமர்) என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார் பிரதமர் அலுவலகத்தில் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய பாரு. பிரதமர் அலுவலகத்தில் பிரதமரோடு நெருக்கமாக பணியாற்றியவர் என்பதால் சஞ்சய பாருவின் புத்தகத்துக்கு பெரிய வரவேற்பு இருந்தது. 

வரலாறு முக்கியம் பிரதமரே!

2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பித்து, அடுத்து பத்தாண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த உள் விவகாரங்களைப் புத்தகத்தில் பட்டியலிட்டிருந்தார் சஞ்சய பாரு. இரட்டை அதிகார பீடங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலையீடு, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நெருக்கடி என அத்தனை அக்கப்போர்களையும் தோலுரித்தது ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ புத்தகம்.  ‘பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்பே அரசின் கோப்புகளை சோனியா காந்தி பார்வையிட்டார். அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை சோனியாவே எடுத்தார். சோனியா காந்தியிடமும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடமும் மன்மோகன் சிங் சரணாகதி அடைந்தார்’ என்பதுதான் புத்தகத்தின் மொத்த சாரம்சம். 

வரலாறு முக்கியம் பிரதமரே!

இந்த புத்தகத்தின் தழுவல்தான் அனுபம் கெர் நடித்த ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம். சஞ்சய பாரு கேரக்டரே கதையை நகர்த்திப் போவதாக படத்தை எடுத்திருக்கிறார்கள். புத்தகம் வெளியான போது ஏற்பட்ட எதிர்ப்பைப் போலவே பட ரிலீஸுக்கும் நிகழ்ந்தது. இதே போன்ற இன்னொரு ஒற்றுமையும் உண்டு. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ஐந்தாண்டுகள் கழித்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அதே புத்தகம் திரைப்படமாக இப்போது வெளியாகியிருக்கிறது.

மோடி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்ட கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தப் புத்தகத்தைத் தனது பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது பி.ஜே.பி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த திரைப்படத்தை பி.ஜே.பி. பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு.

புத்தகமும் திரைப்படமும் பேசியது மன்மோகன் சிங்கின் பத்தாண்டு ஆட்சியையும் அதனை ஆட்டிப்படைத்த சோனியாவை பற்றியும்தான். அதன்பிறகு மோடி ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மன்மோகன் சிங்கின் ஆட்சியைப் பற்றிய‌ படத்தை இப்போது மக்களுக்கு கொண்டு செல்வதின் நோக்கம் என்ன? ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ புத்தகம் எழுதி ஐந்தாண்டு கழித்து, அதைப் படமாக எடுக்க வேண்டிய சூழல் என்ன என்கிற கேள்விகளுக்கு விடையாக இருப்பதும் அரசியல்தான்.

நிதி அமைச்சர் பதவியைக் கைப்பற்ற ப.சிதம்பரம் செய்த அரசியல், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் செய்த அதிகாரம், நரசிம்மராவ் உடலை ராஜ்காட்டில் அடக்கம் செய்ய விடாமல் தடுக்க நடந்த மூவ்,  இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாய் காட்டிய மௌனம், பிருதிவிராஜ் சவான் செய்த நம்பிக்கை துரோகம், மன்மோகன் சிங்கின் ராஜினாமா மிரட்டல் என நிறைய விஷயங்களைப் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். 

வரலாறு முக்கியம் பிரதமரே!

புத்தகத்தைவிட திரைப்படத்தில் சோனியாவுக்கு வில்லத்தன்மை அதிகம்.  ராகுல் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பது போல  படத்தின் டீசரில் காட்டியவர்கள் படத்தில் அந்த காட்சியை சேர்க்கவில்லை. ராகுல் , சோனியா ஆகியோர் பக்குவம் இல்லாதவர்கள் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இப்போது ராகுல்முதிர்ச்சி பெற்று  விவரமாக பேச ஆரம்பித்திருக்கிறார்.  2004-2014 காலக்கட்டத்தில் எப்படியிருந்தார்கள் என்பதை இப்போது உலகுக்குசொல்ல நினைப்பதின் நோக்கம் நிச்சயம் அரசியலாகதான் இருக்க முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடனே எம்.பி., எம்.எல்.ஏ பதவிகளை இழப்பார்கள் என மன்மோகன் சிங் ஆட்சியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்து கொண்டிருந்த  லாலு உள்ளிட்டவர்களின் பதவிகள் பறி போயின. இதனை எதிர்த்து அவசர சட்டம் ஒன்றை இயற்ற மன்மோகன் சிங் முடிவு செய்தபோது பிரஸ் மீட்டில் அந்தச் சட்டத்தின் நகலை கிழித்து எறிந்தார் ராகுல் காந்தி. இந்தக் காட்சி படத்திலும் இடம்பெற்றிருக்கிறது. ராகுலின் செயல் பிரதமர் மன்மோகன் சிங் குடும்பத்தினரை வருத்தமடைய செய்வது போல காட்சிகள் இடம்பெற்றன. இந்த இடத்தில் ராகுல் செய்வது சரியான செயல்தான். தண்டனை பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தொடரக் கூடாது என ராகுல் நினைத்தார்.  அதைவிட முக்கியமாக மன்மோகன் சிங் வருத்தமடைந்தார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பது ஏன்  என்கிற கேள்வி எழுகிறது.

‘’ஊழலை ஒழிக்க மன்மோகன் சிங் முயன்றிருந்தால் ஆட்சி கவிழ்ந்திருக்கும். தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகளால் அவருக்கு அச்சுறுத்தல் இருந்தது.ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதில் மன்மோகன் சிங் தோல்வியடைந்ததே ஆட்சியின் சரிவுக்கு காரணம்’’ என்கிறார் சஞ்சய பாரு. எது எப்படியோ, தெரியாத அரசியலில்  எந்தப் பின்புலமும் இல்லாமல் வளர்ந்து பிரதமர் பதவி வரை இரண்டு முறை வந்த மன்மோகன் சிங் ராஜதந்திரிதான்.

ஆனால் புத்தகம், திரைப்படம் இரண்டின் மூலம் எதிர்கால வரலாற்றில் மன்மோகன்சிங் ஹீரோவாகப் பதிவுசெய்யப்படுவாரா, நகைச்சுவைப் பாத்திரமாகப் பதிவு செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறிதான்.

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு