Published:Updated:

`விளம்பர செலவு ரூ. 4,000 கோடி...! - அமேசானை முந்திய பா.ஜ.க

தேர்தல் பிரசாரத்துக்கான அனைத்து வளங்களையும் பாரதிய ஜனதா தன்வசப்படுத்தியுள்ளது. பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் இடையேயான சமமற்ற போட்டி நிலவுகிறது.

`விளம்பர செலவு ரூ. 4,000 கோடி...! - அமேசானை முந்திய பா.ஜ.க
`விளம்பர செலவு ரூ. 4,000 கோடி...! - அமேசானை முந்திய பா.ஜ.க

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அனைத்து சார்ட்டர் விமானங்களையும் ஆளும் பா.ஜ.க தன் வசப்படுத்திவிட்டதாகவும் 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

`விளம்பர செலவு ரூ. 4,000 கோடி...! - அமேசானை முந்திய பா.ஜ.க

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் விரைவிலேயே வெளியிட உள்ளது. அநேகமாக வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் பிரசார வியூகங்களை ஒவ்வொரு கட்சியும் வகுத்து வருகின்றன. 

இந்தத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை எப்படியும் வீழ்த்தியே தீருவது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாகத்தான் அண்மையில், கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட எதிர்க்கட்சிப் பேரணி  நடந்தது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவ கவுடா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பா.ஜ.க அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்தப் பேரணி பா.ஜ.க-வுக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிப்பதில் அக்கட்சித் தீவிரமாக உள்ளது. இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளைக் கவர்வதற்காக கவர்ச்சிகரமான கடன் திட்டங்கள், நடுத்தர வர்க்கத்தினரை ஈர்க்க வருமான வரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது எனப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் பாஜக-வுக்கு ஆதரவாக சில பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பிரசாரகர்களைக் களமிறக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. கூடவே கட்சியின் முன்னணி தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த முன்னணி தலைவர்களையும் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது. 

அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், அவர்கள் சார்ட்டர் விமானம் எனப்படும் தனி விமானத்தில் சென்றால்தான் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் செல்ல முடியும். இத்தகைய சார்ட்டர் விமானங்கள் தனியாரிடம்தான் அதிக அளவு உள்ளன. 

`விளம்பர செலவு ரூ. 4,000 கோடி...! - அமேசானை முந்திய பா.ஜ.க

இந்த நிலையில் பா.ஜ.க, தனது பிரசாரகர்களுக்கென இந்த சார்ட்டர் விமானங்கள் அனைத்தையும் முன்பதிவு செய்துவிட்டதாகவும், தங்கள் தலைவர்கள் பிரசாரத்துக்கென இந்த தனி விமானங்களைப் பெறுவதில் மிகுந்த போராட்டத்தைச் சந்திப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

``தேர்தல் பிரசாரத்துக்கான அனைத்து வளங்களும் பா.ஜ.க வசம் உள்ளது. பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் இடையேயான சமமற்ற போட்டி நிலவுகிறது. எங்கள் பயன்பாட்டுக்காக ஒரு சில தனி விமானங்களைப் பெறுவதற்குக்கூட முடியாமல் உள்ளோம். இப்படி இருந்தால் எங்கள் தலைவர்கள் எப்படிப் பிரசாரத்துக்குச் செல்வார்கள்? 

ஆளும் பா.ஜ.க கட்சி 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது. இது நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் விளம்பரத்துக்காகச் செலவழிக்கும் தொகையைவிட அதிகமானது. இவ்வளவு தொகை செலவழித்துச் செய்யப்படும் இதுபோன்ற விளம்பரங்களும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன. 

இத்தனைக்குப் பிறகும் மக்களின் அன்பு மற்றும் ஆதரவுடன் பா.ஜ.க-வை நாங்கள் தோற்கடிப்போம்" என்று ஆனந்த் சர்மா மேலும் தெரிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை, வருகிற பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.