Published:Updated:

`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்!’ - ஸ்டாலின் வேதனை

`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்!’ - ஸ்டாலின் வேதனை
`தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்!’ - ஸ்டாலின் வேதனை

'எடப்பாடியிடம் இதனை எதிர்பார்க்கவில்லை'  எனக் கல்யாண மேடையில் ஸ்டாலின் கலக்கமாகp பேசினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் 'தேசம் காப்போம்' மாநாட்டில் சிறப்பு விருந்தினராகk கலந்துகொள்ளவும், கரூர்,பெரம்பலூர்,திருச்சி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் திருச்சியில் இரண்டு நாLகளாகத் தங்கியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ-வைச் சந்தித்து ஆலோசனை நடத்திய ஸ்டாலின், சமீபத்தில் மறைந்த தி.மு.க இணையதள செயற்பாட்டாளர் பாடாலூர் விஜய் என்பவரின் திருஉருவப்படத்தை திறந்து வைத்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.

இதனிடையே, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளி மைதானத்தில் நடைபெற்ற திருச்சி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பரணிகுமார் இல்லத் திருமண விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெரியசாமி, கே.என்.நேரு, வேலூர் மாவட்டச் செயலாளர் காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ ஆகியோருடன் தனது மனைவி துர்கா ஸ்டாலின் சகிதமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். திருமணத்தை நடத்திவைத்து, ஆசீர்வாதம் வழங்கிய ஸ்டாலின் மைக் பிடித்தார்.

“பரணிக்குமார் இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சியை நடத்திவைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்த மணமக்களுடைய பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பரணிக்குமாரின் தந்தை, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய பாலகிருஷ்ணன் தி.மு.க-வின் முன்னோடியாகவும், மறைந்த அன்பிலாருக்கு உற்ற தோழனாகவும் விளங்கியவர். பரணிகுமார், ஒருமுறை நாங்கள் விபத்தில் சிக்கி இருக்க வேண்டிய சூழலில், என் உயிரைக் காப்பாற்றியவர் என உருக்கமாகப் பேசிய ஸ்டாலின்,

``இன்று, நாட்டில் நிலவும் பிரச்னைகள் அனைவருக்கும் தெரிந்தது. அவற்றை எடுத்துச்சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முழுமையான திட்ட அறிக்கையைத் தயார்செய்துள்ளது எனும் தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அதிர்ச்சிதரும் செய்தி இன்று வெளியாகியுள்ளது.

மேக்கே தாட்டூ அணை பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை  உறுப்பினர்கள் 55 பேர் பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். மேலும், அந்தத் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதோடு, கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினோம்.

பதினைந்து நாள்களுக்கு முன்புகூட, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, `காவிரியின் குறுக்கே மத்திய அரசு மற்றும் தமிழகத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. இதுதொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைக் கேட்டு முடிவெடுப்போம். நிச்சயமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நிச்சயமாக எந்தப் பணியும் நடக்காது. தமிழ்நாட்டின் அனுமதி கேட்டுக்கொண்டுதான் நாங்கள் எதையும் செய்வோம்’  எனத் தெளிவாக விளக்கினார். ஆனால், கர்நாடக அரசு தன்னிச்சையாக, மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்கு வரைவுத் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதை மத்திய அரசும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள், தமிழ்நாட்டைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத நிலையில் இருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நீங்கள் எல்லோரும் வரக்கூடிய சூழ்நிலையைப் பயன்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் நல்ல பாடத்தை வழங்குவதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் தமிழகத்தைப் பற்றிச் சிந்திக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வரும் வாய்ப்புகளைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்றவர், மணமக்கள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கக்கூடிய வீட்டுக்கு விளக்காய் நாட்டிற்குத் தொண்டர்களாய் வாழுங்கள் ” என்றார்.