Published:Updated:

‘ஹெச்.ராஜாவைக் கைதுசெய்யுங்கள்!’ -எஸ்.பி-யிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்!

‘ஹெச்.ராஜாவைக் கைதுசெய்யுங்கள்!’ -எஸ்.பி-யிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்!
‘ஹெச்.ராஜாவைக் கைதுசெய்யுங்கள்!’ -எஸ்.பி-யிடம் புகார் அளித்த மக்கள் பாதை அமைப்பினர்!

‘குஜராத்தைப் போன்று தமிழகத்திலும் ஒரு மதக்கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தைத் துண்டாக்க சதிசெய்வது போன்று ஹெச்.ராஜாவின் செயல்கள் உள்ளது. எனவே அவரைக் கைது செய்ய வேண்டும்’ என மக்கள் பாதை அமைப்பினர் ஈரோடு எஸ்.பியிடம் புகார் கொடுத்தனர். 

ஜனவரி 19-ம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் மாற்று ஊடக மையம் சார்பில் ‘வீதி விருது விழா’ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேருரையாற்றினார். இதுதொடர்பாக பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘பாரதமாதா, பாரதப் பிரதமர் மற்றும் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் கண்காட்சியைத் திறந்து வைத்த சகாயம் ஐ.ஏ.எஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். இது சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பின் தொடரும் மக்கள் பாதை அமைப்பினரைக் கொதிக்க வைத்திருக்கிறது. அதன் விளைவாக, மதப்பிளவை ஏற்படுத்தி பிரச்னையை உண்டாக்க நினைக்கும் ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும் என ஈரோடு மக்கள் பாதை அமைப்பினர் நேற்று எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து மக்கள் பாதை அமைப்பின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.ஜீவானந்தம், “மாற்று ஊடக மையம் சார்பாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, தமிழ்ச் சமூகத்தின் பொக்கிஷங்களாகக் கருதப்படுகின்ற மரபுக் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கில் சகாயம் ஐ.ஏ.எஸ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். ஆனால், ஹெச்.ராஜா அவருடைய ட்விட்டர் பதிவில், கண்காட்சியைத் துவக்கி வைத்து இந்து மதத்தை அவமதித்தார் என சித்தரித்து ஒரு பதிவினை பதிவிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறானது. அன்றைய தினம் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் அப்படியான எந்த கண்காட்சியையும் திறந்துவைக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல், கோவில்பட்டியில் ஊடகங்களுக்கு ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை தேசவிரோதி, நக்சல் என்று களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியிருக்கிறார். தமிழ்ச்சமூகத்தை மிகவும் நேசிக்கக்கூடிய சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் மீது திட்டமிட்டு ஹெச்.ராஜா அவதூறு பரப்பி வருகிறார். இவருடைய செயல்கள் குஜராத்தைப் போன்று தமிழகத்திலும் ஒரு மதக்கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தைத் துண்டாட சதிசெய்வது போன்று உள்ளது. எனவே, ஹெச்.ராஜா போன்ற சமூக விரோதிகளிடமிருந்து நம்முடைய தமிழ்ச் சமூகத்தைக் காக்க, அவரைக் கைது செய்ய வேண்டுமென எஸ்.பியிடம் புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.