மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)

என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)

“மத்திய அரசு கண்டுகொள்வதில்லை!’’

#EnnaSeitharMP
#MyMPsScore

ரணி தொகுதியின் எம்.பி ‘சேவல்’ வெ.ஏழுமலை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக அ.தி.மு.க பிரிந்தது. அப்போது நடைபெற்ற 1989 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பில், சேவல் சின்னத்தில் மேல்மலையனூர் தொகுதியில் ஏழுமலை நிறுத்தப்பட்டார். வெற்றிப் பெறவில்லை. எனினும், இவரது பெயருடன் சேவல் மட்டும் ஒட்டிக்கொண்டது. 2001 சட்டசபைத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றவர், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வில் எம்.பி-யாகவும் வெற்றிபெற்றார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட ஏழுமலை, தொகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அப்பாசாமி, கண்ணன் ஆகியோரிடம் பேசினோம். “திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை, ஆரணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆரணியில் அரசுக் கலைக் கல்லூரி எனத் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார் ஏழுமலை. இவற்றில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. தேசிய அளவில் புகழ் பெற்றது ஆரணி, களம்பூர் அரிசி. இங்குள்ள அரிசி ஆலைகள், ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதாக ஏழுமலை சொன்னார். அதையும் செய்யவில்லை. ஆரணியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் கழிவுநீர் காரணமாகக் கமண்டல நாகநதி ஆறும், இரும்பேடு ஏரியும் சீரழிந்துவிட்டன. அரிசி ஆலைகளால் ஏற்படும் கழிவுநீர் பிரச்னையைத் தீர்க்க எம்.பி நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆரணி கைலாசநாதர் கோயில் குளத்தில் இதுவரை நான்கு குழந்தைகள் தவறிவிழுந்து இறந்துபோயிருக்கிறார்கள். அந்தக் குளத்தைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைத்து இரும்பு வேலி போடுமாறு பலமுறை முறையிட்டும் அதை அவர் செய்யவில்லை. ஒன்னுபுரம் அரசுப் பள்ளியில் 11, 12-ம் வகுப்புகளில் கைத்தறி தொழிற்பாடம் இருக்கிறது. அந்த மாணவர்கள், கைத்தறி நெசவுத் தொழில்நுட்பம் குறித்த மேற்படிப்பு படிக்க வேண்டுமென்றால், கோவை அல்லது சென்னைக்குச் செல்ல வேண்டும். எனவே, மாணவர்களின் நலன் கருதி இங்கே கைத்தறி நெசவுத் தொழிற் கல்லூரி அமைக்க வேண்டும். எஸ்.வி நகரத்தில் ஜாகிர் அரண்மனை பாழடைந்துள்ளது. அதைப் சீரமைத்தும், ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரண்மனைக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என்று எம்.பி-யிடம் கோரிக்கை வைத்தோம். அவர் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமான நோயாளிகள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு வருகிறனர் ஆனால், அங்கு ஸ்கேன் கருவிகூட இல்லை” என்றார்கள் வேதனையுடன்.

என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)

“ஆரணிப் பட்டுக்கு இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தனி மதிப்பு உண்டு. குறைந்த விலையில் கலைநயத்துடன் தயாரிக்கப்படும் ஆரணிப் பட்டுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2018-ல் விருது வழங்கிக் கௌரவித்தார். இங்கு நான்கு பட்டுக் கூட்டுறவு சொசைட்டிகள் உள்ளன. இந்தச் சங்கங்களிலிருந்து நெசவாளர் களுக்கு மானிய விலையில் பட்டு நூல்கள் வழங்கப்படுகின்றன. இதில் உறுப்பினர்களாக இருக்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசு தரும் தரமான பட்டு நூல்களைப் பதுக்கிவிட்டு, போலியான நூல்களை விற்பனை செய்கிறார்கள். முதல் ரக பட்டு நூல்களைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, மொத்தமாக கமிஷன் வைத்து விற்றுவிட்டு, மற்றவர்களுக்குக் கைவிரித்துவிடுகிறார்கள். இதனால், பட்டுத்துணி நெய்யும் நெசவாளர்கள் நலிவடைந்து வருகின்றனர். எங்கள் பகுதியில் பட்டுப்பூங்கா அமைத்தால் நெசவாளர்கள் வளம் பெறுவார்கள். அதையும் எம்.பி செய்யவில்லை” என்று புகார் வாசிக்சின்றனர், பட்டு நெசவாளர்கள்.

தென்னிந்தியக் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார். “சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி, நெல் கொள்முதலில் தமிழக அளவில் 2-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு ஐயாயிரம் மூட்டைகள்வரை நெல் கொள்முதல் செய்யப் படுகிறது. மணிலா, கேழ்வரகு, மிளகாய் உள்ளிட்ட விளைபொருள்களையும் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவருகின்றனர். ஆனால், இங்கு வரும் வியாபாரிகள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, அரசு நிர்ணயிக்கும் விலையைவிடக் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். இதனால், போதிய விலை கிடைப்பதில்லை. ‘வியாபாரிகள் சிண்டிகேட் அமைப்பதைத் தடுக்க வேண்டும். ஆரணி தொகுதிக்கு உட்பட்ட சந்தவாசலில் அதிக அளவு வாழை பயிரிடப் படுகிறது. அங்கு வாழை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்’ என்பது இந்தப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை. அதுவும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
போளூர் அடுத்த கரைப்பூண்டியில் இருக்கும் தரணி சர்க்கரை ஆலை, கடந்த ஐந்தாண்டுகளில் அறுபது கோடி ரூபாயைக் கரும்பு விவசாயிகளுக்குக் கடன் பாக்கி வைத்துள்ளது. அதை வாங்கித் தர எம்.பி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாகநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட செண்பகத்தோப்பு அணை, கட்டிய ஆறு மாதத்துக்குள் ஷட்டர் உடைந்துவிட்டது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர், ஆரணியைக் கடந்து எந்தப் பயனும் இல்லாமல் போகிறது. ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதால், நிலத்தடி நீர் வளமும் குறைந்துவிட்டது” என்றார் கவலையுடன்.

மயிலம் தொகு தி.மு.க எம்.எல்.ஏ-வான மாசிலாமணி, “திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதைத் திட்டங்களை நிறைவேற்ற எம்.பி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 79 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ‘விபத்துகளைத் தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படும்’ என்று 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். அதை நிறைவேற்ற ஏழுமலை ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. எம்.பி என்ற முறையில், மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சரிடமோ, அதிகாரிகளிடமோ அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார் வருத்தத்துடன்.

எம்.பி தத்தெடுத்த மேல்வைலாமூர் கிராமத்துக்குச் சென்றோம். அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், “எங்கள் ஊரை எம்.பி தத்தெடுத்ததாக அறிவிப்பு வந்துச்சு. ஆனால், ஒரு திட்டமும் நிறைவேற்றப்படலை. குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் நடந்துபோய் தண்ணி எடுத்துட்டுவர்றோம். இங்கிருக்கிற ஏரியில் தண்ணீர் எடுக்கும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துக்கொடுத்தால், குடிநீர் பிரச்னைத் தீரும். அதை எம்.பி நிறைவேற்றல. 700 குடும்பங்கள் இருக்கிற இந்த ஊரில், ஆரம்பச் சுகாதார நிலையம் கிடையாது. மருத்துவமனைக்குப் போக 10 கி.மீ தூரத்துல இருக்கிற அவலூர்பேட்டைக்குதான் போகணும். ஊருக்குள் இருக்கும் ரோடுகள், குண்டும் குழியுமாகக் கிடக்குது. எங்க ஊருக்கு ஒரேயொரு மினி பஸ்தான் வருது. ஒரேயொரு தொடக்கப் பள்ளி மட்டுமே இருக்கு. அதிலும் சமையலறை, கழிப்பிட வசதிகள் இல்லை. எம்.பி-யை இதுவரை நாங்க பாத்ததுகூட இல்லை” என்றார் வேதனையுடன்.

செய்யாறு வட்டத்தில் பள்ளி என்கிற கிராமத்தையும் ஏழுமலை தத்தெடுத்திருக்கிறார். அந்தக் கிராமத்துக்கும் சென்றோம். “கிராமத்தைத் தத்தெடுக்கும்போது ஒருமுறை இங்கே எம்.பி வந்தார். அதோடு சரி. பள்ளிமேட்டு நகரிலிருந்து வடபூண்டிபட்டு ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. டூவீலர்கூட போக முடியாத அந்தச் சாலையைப் புதுப்பிக்க, எம்.பி நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி மேட்டு நகரில் ஒழுகும் தண்ணீர் டேங்குகளைச் சரிசெய்து தரும்படி எம்.பி-யிடம் கேட்டோம். அதைக்கூட அவர் செய்து தரவில்லை” என்றனர் ஊர் மக்கள்.

சேவல் ஏழுமலையை செஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். “எந்தக் கோரிக்கை வைத்தாலும் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. மேல்வைலாமூர், பள்ளி என்று இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்தேன். ஆனால், ‘அதற்காக எந்த நிதியையும் தர மாட்டோம்’ என்று மத்திய அரசு சொல்லிவிட்டது. கிராமத்தைத் தத்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்கவில்லை. வெறும் கண்துடைப்புக்காக நடக்கும் விழாவில் எதற்குப் பங்கேற்க வேண்டும் என அந்த நிகழ்ச்சிக்கு  நானும் செல்லவில்லை. ஆரணியில் பட்டுப்பூங்கா அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய பின்னர், மத்தியக்குழு வந்து ஆய்வு செய்தது. மொத்தச் செலவில் 50 சதவிகிதத்தை உற்பத்தியாளர்கள் தரவேண்டும் என்று சொன்னதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. அதனால், அந்தத் திட்டம் காஞ்சிபுரத்துக்குப் போய்விட்டது.

திண்டிவனம்-நகரி ரயில் பாதைத் திட்டம் குறித்து அவையில் பேசினேன். ஒன்றும் நடக்க வில்லை. வியாபாரிகள் சங்கத்தினரை நேரில் அழைத்துச்சென்று, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் மனுக் கொடுத்தும் பலன் இல்லை. திருவண்ணாமலை ரயில்வே தபால் பிரிவை விழுப்புரத்துக்கு மாற்றும் உத்தரவைத் தடுத்து நிறுத்தினேன். இதனால், 500 ஊழியர்கள் அன்றாடம் விழுப்புரம் சென்றுவரும் சிரமம் தவிர்க்கப்பட்டது. போளூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும். ஆரணி மருத்துவமனை ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. மற்றபடி, நான் எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை” என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஜெ.முருகன், கா.முரளி
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)
என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)
என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

தொ
குதி முழுவதும் தேடிவிட்டோம். எம்.பி அலுவலகம் இல்லை. ஆரணியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஏராளமானவர்கள் வருகிறார்கள். ஆனால், அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் மக்கள் அன்றாடம் அவதிப்படுகின்றனர். அதனால், ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தரும்படி ஆரணியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் மூலம் எம்.பி வீட்டு முகவரிக்குப் பதிவுத்தபால் அனுப்பினோம். அதற்கு பதிலே இல்லை.

என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)
என்ன செய்தார் எம்.பி? - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)