Published:Updated:

‘மோடியை  வீட்டுக்கு அனுப்புவோம்’ - தேசம் காப்போம் மாநாட்டில் முழங்கியத் தலைவர்கள்

‘மோடியை  வீட்டுக்கு அனுப்புவோம்’ - தேசம் காப்போம் மாநாட்டில் முழங்கியத் தலைவர்கள்
‘மோடியை  வீட்டுக்கு அனுப்புவோம்’ - தேசம் காப்போம் மாநாட்டில் முழங்கியத் தலைவர்கள்

'தேசம் காப்போம்' எனும் தலைப்பில், திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநாட்டில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வி.சி.க தொண்டர்கள் குவிந்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தி.க தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சமீபத்தில் படுகொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஸ், கோவிந்த் பன்சாரே, தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாநாட்டில் முதலில் பேசிய வைகோ,“நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மலரப் போகிற அரசு, மாநிலக் கட்சிகளின் ஆட்சியை உறுதி செய்கிற தேசிய இனங்களின் வலிமையைப் பறை சாற்றும் அரசாக தி.மு.க., தலைமையில் அமையும். சமூக நீதி நமது கனவு. அந்தக் கனவு நனவாகியிருக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்கு தாழ்த்தப் பட்ட மக்கள் வர வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதனைக் கருணாநிதி, பெரியார் சமத்துவபுரம் வழியாக நனவாக்கினார். நம் சமூகத்தை ஆரியம் சீரழிக்கிறது. அதைத் தீர்க்கவேண்டிய நேரம் இது. மோடி தமிழகத்தை வஞ்சித்தார். கஜா புயல் நிவாரண நிதி,  காவிரி விவகாரத்தில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்து துரோகம் இழைத்தார்.

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைக் கொண்டுவருகிறது... பெட்ரோலிய மண்டலங்களை உருவாக்குகிறது. எங்கள் உரிமைகளை இழந்தால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநிலத்துக்குச் சொந்தம் என அறிவிக்கும் நிலை ஏற்படும். சமூகநீதிக்கு விரோதமான மத்திய அரசு. மாநில உரிமைகளை நசுக்குகிறது மத்திய அரசு. தமிழக அரசு சூடு, சுரணை, வெட்கம், முதுகெலும்பு இல்லாமல் இருக்கிறது. மிஸ்டர் மோடி, நீங்களும் உங்கள் ஏஜென்ட்டுகளும் மீண்டும் பதவிக்கு வர முடியாது . வாக்குச் சீட்டுகந்த் தாருங்கள் இந்தியாவைக் காப்போம்” எனப் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, “சனாதன் சன்ஸ்தா அமைப்பைத் தடைசெய்யும் தீர்மானத்தை வரவேற்கிறேன். அந்த அமைப்பு முற்போக்குவாதிகளான தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றோரைக் கொலை செய்தது. மத்திய அரசு நிதி ஆணையம், சிபிஐ உள்ளிட்ட மத்திய நிறுவனங்களை அழிக்கிறது. பொருளாதார அடிப்படையிலான உயர் சாதியினருக்கான இடஒதிக்கீடு சட்ட விரோதமாக ஓட்டு வங்கிக்காக இரண்டு நாளில் விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி அரசின் தேர்தல் நேர வாக்குறுதிகளான கறுப்புப் பண மீட்பில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது” என முடித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மோடி அரசைத் தூக்கி எறிய முன்னணியில் நிற்கும். பா.ஜ.க-வை தோற்கடிக்கும், மதச்சார்பற்ற சக்திகளை அதிக அளவில் பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். மோடிக்கு எதிராக யார் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். இப்படித்தான் 2004-ம் ஆண்டு வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது கேட்டார்கள். தோற்கடிக்கப்பட்டார். அதுபோல மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள். மதச்சார்பற்ற அரசு அமைய பாடுபடும்வோம். மிகப் பெரிய பாரதப் போர் நடைபெறுகிறது. இதில் தங்களை  கௌரவர்கள் எனப் பா.ஜ.க கூறுகிறது.  பா.ஜ.க-வில் மோடி, அமித் ஷா தவிர யார் இருக்கிறார்கள். சனாதன ஆட்சி வீழ்த்தப் படும். “ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு” என அரசியல் சட்டம் வரையறுத்திருக்கிறது. சனாதன தர்மா அதை மறுக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்திய பணக்கார மனிதர்களின் மதிப்பு தினமும் உயருகிறது. விவசாயிகள் மோசமான நிலையைச் சந்திக்கிறார்கள்.

மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின்,சனாதனத்தை வேரறுத்தாலே புரட்சிகர ஜனநாயகம் உருவாகும். நடக்க இருக்கிற நாடாளு மன்றத் தேர்தல், சனாதனத்துக்கும்  ஜனநாயகத்துக்குமான தேர்தல். ஜோதிராவ் பூலே, அம்பேத்கர், பெரியார் ஆகியோர் சனாதன தர்மத்துக்கு எதிராக நடத்திய போர்தான் இன்றும் தொடர்கிறது. தேசம் காப்போம் என ஏன் முழக்கம் எழ வேண்டும். பாகிஸ்தான், சீனா நம் மீது போர் தொடுக்குமா என்ன?இல்லை. தேசத்தை ஆளுகிறவர்களால் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவேதான் இந்த மாநாடு.

பா.ஜ.க-வை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள். ரபேல் போர் விமானங்களில் 41 சதவிகிதம் ஏன் அதிகரித்து உள்ளது என ஆதாரத்தோடு எழுதிய என்.ராம் மீதும் தேசத் துரோகப் பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான்  கேட்பது ரபேல் விமானத்தில் பேரம் நடக்கவில்லை என்பதை ஆதாரத்தோடு கூறுங்கள். பா.ஜ.க-வை எதிர்க்க நாங்கள் தயார். மோடி அரசு கார்ப்பரேட் அரசு. பொருளாதார இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. மனுநீதி சமூக நீதிக்கு எதிரானது. உண்மையான ஏழைகளுக்கு மோடி துரோகம் செய்துள்ளார். இது இட ஒதுக்கீடு மற்றும் அம்பேத்கர் கொள்கைகளுக்கு எதிரானது. சமூக நீதிக்கான உதாரணம் திமுக. அநீதிக்கு உதாரணம் மோடி அரசு. 100 சதவிகிதம் நாட்டை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விற்றுவிடுவார். மோடி மற்றும் எடப்பாடியை வீழ்த்துவதே நம் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

இறுதியாகப் பேசிய தொல் திருமாவளவன்,“இந்த மாநாட்டைத் தடைசெய்ய சனாதன சக்திகள் காவல் துறையை அணுகி மனு அளித்தார்கள். இவ்வளவு தடைகளையும் தாண்டித்தான் விடுதலைச் சிறுத்தைகள் திரண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாநாடு, தி.மு.க தேர்தல் கூட்டணியின் முதல் பிரசார கூட்டம். தி.மு.க மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சனாதனிகள் வாய் பேசவில்லை. மோடி அரசில்  அவர்கள் கொட்டமடிக்கக் களம் அமைத்துத் தந்திருக்கிறார்கள். தலித், கிறித்துவர், இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வளர்ச்சி அடைந்தது யார் சனாதனிகள், அதானி, அம்பானி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஆளுகிற நிலை வந்தால், இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஹெச்.ராஜாவுக்கு இந்த மாநாடு ஒரு பாடம். இது அம்பேத்கர், பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தை பெரியாரும், அம்பேத்கரும் முன்னெடுத்தார்கள். புத்தர் சனாதனத்தை எதிர்த்தார். புத்தரின் காலத்திலிருந்து சமத்துவத்துக்கான, சகோதரத்துவத்துக்கான  போராட்டம் தொடங்கியது. சகோதரத்துவத்தால் சமத்துவம், சமத்துவத்தால் ஜனநாயகம் உருவாகும். சமத்துவத்தை வெறுப்பது சனாதனம். எல்லா ஜாதிக்குமிடையில் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது சனாதனம். கம்யூனிஸ்ட்டுகள் பயங்கரவாதிகளாகவும்,  வி.சி.க-வை வன்முறையாளர்களாக சித்திரிக்கிறார்கள். அவற்றை எல்லாம் கடந்து, வரும் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றிபெறுவோம். அதன்மூலம், மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு செயல்படுவோம் “ என்று முடித்தார்.