Published:Updated:

அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!

அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!
பிரீமியம் ஸ்டோரி
அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!

- சக்திவேல்

அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!

- சக்திவேல்

Published:Updated:
அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!
பிரீமியம் ஸ்டோரி
அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!

த்தரப் பிரதேசத்தை ஆளுக்குப் பாதியாகப் பங்குபோட்டுக்கொண்டு காங்கிரஸின், ‘மெகா கூட்டணி’ கனவைக் கலைத்துப்போட்டு விளையாடுகிறார்கள் மாயாவதியும் அகிலேஷும். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஆளுக்கு 38 தொகுதிகளைப் பிரித்துக்கொண்டவர்கள், போனால் போகிறது என்று ராகுல் காந்தியின் அமேதியையும் சோனியா காந்தியின் ரேபரேலியையும் காங்கிரஸ் கட்சிக்காக விட்டுவைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் காங்கிரஸுக்கு அவர்கள் காட்டியிருக்கும் கரிசனம்!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்க, பகுஜன் சமாஜும் சமாஜ்வாதியும் ஆதரவு அளித்தன. அதனால், ‘நாடாளுமன்றத் தேர்தலிலும் நம்முடன் கைகோப்பார்கள்’ என்ற நம்பிக்கையில் இருந்தது காங்கிரஸ். ஆனால், அப்படி நடக்கவில்லை. நம்மூரின் தி.மு.க - அ.தி.மு.க போல வட இந்தியாவில் எதிரெதிர் தளங்களில் பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் களம் கண்டுவருகின்றன. இந்தியப் பிரதமர்களை நாட்டுக்கு அனுப்பும் மிக முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை, இருபது ஆண்டுகள் மாறி மாறி ஆண்ட பெருமைக்குரியவை இந்தக் கட்சிகள். ஆனால், கடந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யின் அசுர வளர்ச்சிக்கு முன்னால் இவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆட்சியை இழந்துவிட்டன. எனவே, ‘இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும், பி.ஜே.பி-யின் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும்’ என்ற அஜெண்டாவுடன் புறப்பட்டிருக்கிறார்கள். அதை அடைய அவர்கள் கண்டுபிடித்த வழிதான், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி.

அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!

இந்த முடிவை இவர்கள் எடுக்கத் தூண்டுகோலாக இருந்தது லாலு பிரசாத் யாதவ். இப்போது எதிரும் புதிருமாக இருக்கும் லாலுவும் நிதிஷ்குமாரும் கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்துப் போட்டியிட்டனர். இதனால், அங்கே பி.ஜே.பி ஆட்சியமைப்பது தடுக்கப்பட்டது. இதனால், அப்போது தேசம் முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு லாலு ஒரு வேண்டுகோள் விடுத்தார். “எங்களைப் போலவே மாநிலக் கட்சிகள் பகையை மறந்து ஒன்றிணைந்தால், பி.ஜே.பி-யை வளரவிடாமல் தடுக்கலாம்” என்றார் அவர். குறிப்பாக மாயாவதிக்கும், அகிலேஷுக்கும் இந்த அறிவுரையைக் கூறினார். அதை மனதில் கொண்டே, உ.பி-யில் கோரக்பூர், புல்பூர் இடைத் தேர்தல்களில் சோதனை முயற்சியாக இருவரும் இணைந்து பி.ஜே.பி-யை எதிர்கொண்டார்கள். பி.ஜே.பி வீழ்ந்தது. அடுத்த கட்டமாகத்தான், நாடாளுமன்றத் தேர்தலையும் இணைந்து சந்திக்கும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக ‘சட்டமன்றத் தேர்தலையும் இணைந்தே சந்திப்போம்’ என்று அதிரடியாக இறங்கியிருக்கிறார்கள்.

நாடாளுமன்றக் கூட்டணி அறிவிப்புக் கூட்டத்திலேயே, “காங்கிரஸைச் சேர்த்துக்கொள்வதால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அப்புறம் எதற்கு காங்கிரஸைத் தூக்கிச்சுமக்க வேண்டும்?” என்று கேட்டார் மாயாவதி. அதை ஆமோதித்தார் அகிலேஷ். இதனால் கடுப்பான காங்கிரஸ், “80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடு கிறோம்’’ என்று, அதிரடியாக அறிவித்தது. ஆனால், பின்வாங்கிவிட்டது. ஏனெனில் ஏற்கெனவே, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஓர் இடத்தைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, அங்கு கணிசமான பட்டியலின சமூக ஓட்டுகளை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மடைமாற்றிக்கொடுத்திருந்தது. அந்த நம்பிக்கையில் உ.பி-யில் அகிலேஷையும் அழைத்துவந்துவிட்டால், காங்கிரஸ் அணி அசுரபலம் பெறும் என்று கணக்குப் போட் டனர். இதையெல்லாம் மனதில் கொண்டே காங்கிரஸ், சூழ்நிலையை உணர்ந்து, ‘கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்கவும் தயாராக இருக்கிறோம்’ என்றது. ஆனால், மாயாவதியும் மதிக்கவில்லை, அகிலேஷும் அக்கறைக் காட்டவில்லை. 

இன்னொரு பக்கம், உ.பி-யை உயிர்நாடி யாகப் பார்க்கிறது பி.ஜே.பி. அயோத்தி முதல் கங்கைநதிவரை அந்தக் கட்சியின் ஆணிவேர் படர்ந்திருக்கும் மாநிலம் அது. இந்தியாவிலேயே அதிகளவு முஸ்லிம்கள் வாழும் மாநிலமும்கூட. அப்படிப்பட்ட மாநிலத்தில், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தாமல், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சாகசம் புரிந்தது பி.ஜே.பி. அதற்கு முன்னால் நடந்த நாடாளுமன்றத்  தேர்தலிலும், 70 இடங்களைப் பெற்றது பி.ஜே.பி. அதனால்தான், வாரணாசியை வைத்துக் கொண்டு வதோதராவைத் தாரைவார்க்கும் அளவுக்குத் துணிந்தார் மோடி. இதனால், வரும் தேர்தலிலும், உ.பி-யில் இமலாய வெற்றிக்கு வியூகம் வகுத்து நிற்கிறது பி.ஜே.பி. கோத்ரா கலவரத்தில் பங்கு வகித்த கோர்தான் ஜடாஃபியா தேர்தல் பொறுப்பாளராக களமிறக்கப்பட்டிருக் கிறார். ‘80-ல் 74 தொகுதிகளை வெல்வோம்’ என்று சவால் விட்டிருக்கிறார், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா.

ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்... உ.பி-யில் மாநிலக் கட்சிகள் பலம் இழந்த போதுதான் பி.ஜே.பி வளர்ந்தது. இப்போது கூட்டணி சேர்ந்தாலும், எப்போதேனும் அடித்துக்கொள்வார்கள் என்று காத்திருக்கிறது பி.ஜே.பி. கடந்தகால வரலாறு அப்படி.

1995-ம் ஆண்டு, மாயாவதி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கினார் முலாயம். மாயாவதி தங்கியிருந்த விடுதி, சமாஜ்வாதி கட்சியினரால் தாக்கப்பட்டது. எதிரியின் பலவீனத்துக்காகக் காத்திருக்கிறது பி.ஜே.பி. அப்படித்தான் பீகாரில் லாலு - நிதிஷ் கூட்டணியை பி.ஜே.பி சிதறடித்தது. 2007-2012 ஆட்சிக் காலத்தில் மாயாவதி ‘ஆடம்பர அரசி’ என்று பட்டம் பெற்றார். தனக்குத்தானே சிலை திறந்தார். அதிகார மட்டத்தில் உயர் சாதியினரின் ஆதிக்கம் அதிகரித்தபோது, வேடிக்கை பார்த்தார். அவரது கட்சியின் அடித்தளமான தலித் வாக்கு வங்கி ஆட்டம் கண்டது. ‘இந்திய ஜனநாயகத்தின் அதிசயம்’ என்று நரசிம்ம ராவால் பாராட்டப்பட்டவர், ஒரு மக்களவை தொகுதியில்கூட வெல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தன் தலையில்தானே மண்வாரி போட்டுக்கொண்டது ‘யானை’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!

உ.பி-யில் அகிலேஷின் ஆட்சியிலும் ஏகப் பட்டப் பிரச்னைகள். தந்தைக்கும் மகனுக்கும் ஆகவில்லை. அதிகார மோதலில் கட்சியைக் கைப்பற்றினார் மகன். தந்தையின் பிரிவினையில் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தார் மகன். முசாபர் நகர் கலவரம் போன்ற வகுப்புவாத அட்டூழியங்களை அகிலேஷ் தடுத்திருந் தால், யோகியை முதல்வராகப் பார்க்கவேண்டிய நிலைமையெல்லாம் உத்தரப் பிரதேச மக்களுக்கு வந்திருக்காது. இப்படித் தனித்தனித் தோல்விகளால் பாடம் கற்ற இருவரும்தான் இப்போது, அங்கே ஓர் ஆரோக்கிய அரசியலை ஆரம்பித்து வைத்திருக் கின்றனர். இந்த முறை இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறது பி.ஜே.பி. “கசப்புகளை மறந்துவிட்டுக் கைகோத்திருக்கிறோம்” என்று மகிழ்கிறார் மாயாவதி. ‘மாயாவதியை அவமதிப்பது என்னையே அவமதிப்பதைப்போல’ என்று நெகிழ்கிறார் அகிலேஷ். ‘அத்தை - மருமகன்’ என்று அவர்களை அன்புடன் அழைக்கிறார்கள் கட்சியினர். ஆச்சர்யம்தான்!

கூடுதலாக மாயாவதியை, “எங்கள் அணியின் பிரதமர் வேட்பாளர்” என்றும் அறிவித்திருக்கிறார் அகிலேஷ். ஏற்கெனவே, பிரதமர் ஆசை கொண்ட தலைவர்களின் வரிசை நிறைந்து வழிகிறது. “மோடி என்னைவிட ஜூனியர். மோடியே பிரதமர் ஆகும்போது, நான் ஆகக்கூடாதா?” என்கிறார் சந்திரபாபு நாயுடு. “இரண்டுமுறை தொடர்ந்து வென்றிருக்கிறேன். இது என் நிர்வாகத் திறனுக்குக் கிடைத்த வெற்றி. எனக்கு இல்லையா தகுதி?” என்கிறார்  சந்திரசேகர் ராவ். “மோடியே என்னைக் கண்டு பயப்படுகிறார். நானே அடுத்த பிரதமர்” என்கிறார் மம்தா. இந்தச் சதுரங்க ஆட்டத்தில் ‘யானை’யை நகர்த்திவைத்து, ராஜாக்களுக்கு ‘செக்’ வைத்திருக்கிறார் அகிலேஷ். சொல்லப்போனால் மாயாவதி இவர்கள் அனைவருக்குமே சீனியர். “என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமர் ஆவேன். அதற்குரிய தகுதி எனக்கு இருக்கிறது” என்று, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தபோதே அதிரடி காட்டியவர். இப்போது அவரது பிரதமர் கனவுக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறார் அகிலேஷ்.

உ.பி-யில் பகுஜன் சமாஜும் சமாஜ்வாதியும் கைகுலுக்குவது முதன்முறை அல்ல. கன்ஷிராம் காலத்திலேயே இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. பாபர் மசூதி இடிப்பு விவகாரம் பற்றியெரிந்த காலத்தில், அந்த அதிசயம் நிகழ்ந்தது. அப்போது, மத அரசியல் பிரசாரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த பி.ஜே.பி-க்கு, முலாயமும் கன்ஷிராமும் அணைக் கட்டினார்கள். அப்புறம் அங்கே பி.ஜே.பி எழுந்துவர பல ஆண்டுகள் பிடித்தது. அப்போது கன்ஷிராம் - முலாயம் என்றால், இப்போது மாயாவதி - அகிலேஷ். அத்தையும் மருமகனும் அரசியல் அதிசயம் நிகழ்த்துவார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism