அரசியல்
Published:Updated:

பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...

பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...

- சக்திவேல்

துநாள்வரை உறையில் வைத்திருந்த ‘கரிஷ்மாடிக்’ கத்தியைக் கையில் ஏந்தி யிருக்கிறது காங்கிரஸ். உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார், பிரியங்கா காந்தி. காங்கிரஸ்காரர்கள் 28 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அறிவிப்பு இது. அசோக் கெலாட் பெயரில் அந்த அறிவிப்பு அறிக்கை வந்த தருணம், காங்கிரஸ் தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடி விட்டார்கள். அந்தளவுக்கு அவர்களுக்குத் தேவைப் படுகிறது, பிரியங்காவின் அத்தியாவசிய அரசியல் பிரவேசம்!

பிரியங்காவின் பிம்பம் என்ன?

‘அழகானவர். அமைதியானவர். அரசியலில் ஆர்வம் இல்லாதவர்’ இதுவே பிரியங்காவைச் சுற்றிப் பின்னப்பட்ட பிம்பம். அவரும் அதையே விரும்பினார். ஆனாலும், காங்கிரஸின் ‘கிச்சன் கேபினட்’டில் முக்கிய நபராக இருந்தார் அவர். காங்கிரஸின் முக்கிய முடிவுகள் அவரது மேஜைக்கும் அனுப்பப்பட்டன. கட்சி நியமனங் களிலும் பிரசார வியூகங்களிலும் அவரது ஆலோசனைக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அரசியல் கூட்டங்கள் அவருக்கு அயற்சியாகவே இருந்தன. தீவிர அரசியல் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். பிள்ளைகளுடன் விளையாட்டு, கணவரின் வியாபாரம், அன்றாட உடற்பயிற்சி, தியானம் என்று வழக்கமாகக் கழிந்தன அவரது நாள்கள். அதேசமயம் தமையனின் அமேதி, தாயின் ரேபரேலி தொகுதிகளில் மட்டும் - அதையொரு கடமை என்று கருதியதால் பிரசாரம் செய்தார். இவ்வளவுதான், பிரியங்காவின் நேரடி அரசியல் பங்களிப்பு.

பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...

ஆனால், காலம் நேரு குடும்பத்து இளவரசியை யும் அரசியலுக்கு இழுத்து வந்துவிட்டது. காங்கிரஸ் சந்தித்துவரும் வீழ்ச்சிகள், ராகுலைச் சூழ்ந்திருக்கும் பிரச்னைகள், இந்தியாவின் ஏகபோக நாயகராக மாறிவரும் மோடி ஆகியவை இதற்கான காரணிகள். பிரியங்கா நியமனத்துக்குப் பிறகு, ‘பிரியங்கா திறமையான வர். அவரை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பொதுச் செயலாளராக நியமிப்பதில் மகிழ்கிறேன். இதன் மூலம் உத்தரப் பிரதேச அரசியலே மாறப்போகிறது. இங்கே காங்கிரஸும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியமைக்கும்’ என நம்பிக்கையாகப் பேசியதுடன் நிற்கவில்லை ராகுல்... ‘பிரியங்காவின் வருகையால் பி.ஜே.பி அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, அவர் சிரித்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் அர்த்தங்கள் ஏராளம்.

காங்கிரஸ் குடும்பத்துக்கு உத்தரப் பிரதேசம் உணர்வுப்பூர்வமானது. நேரு காலத்திலிருந்தே தொடரும் பந்தம் அது. அமேதியும் ரேபரேலியுமே அதற்கான சாட்சிகள். அப்படியான மாநிலத்தில், இன்று கையறு நிலையில் இருக்கிறது காங்கிரஸ். இன்றைக்கு அங்கே அவர்களுக்கு இரண்டு மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ராகுல், இன்னொருவர் சோனியா. சட்ட மன்றத்திலோ வெறும் ஏழு உறுப்பினர்கள். காங்கிரஸ் அங்கு எழுந்துநிற்க வேண்டிய கட்டாயத்தில்தான், அங்கு மாயாவதியுடனும் அகிலேஷுடனும் கூட்டணி அமைக்க விரும்பினார் ராகுல். இருவரும் புறக்கணித்து விட்டார்கள். இது போதாதென்று இருவரும் கூட்டணி அமைத்து, காங்கிரஸின் மனக்கோட்டையில் பெரும் ஓட்டைகளைப் போட்டனர். இது, ராகுலை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது. பிரதமர் அரியணையைப் பிடிக்கவும், பி.ஜே.பி-யை வீட்டுக்கு அனுப்பவும் ராகுலுக்கு உத்தரப் பிரதேசம் மிகவும் முக்கியம். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், பிரியங்காவைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் ராகுல்.

இரண்டாம் இந்திரா?

பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...

பிரியங்காவின் பலம், ‘இரண்டாம் இந்திரா’ இமேஜ். தோற்றம், நடை, உடை, பேச்சு என்று சகலத்திலும் பாட்டியைப் பிரதிபலிப்பவர் பிரியங்கா. அதனால்தான், அவரை அப்படி ஆராதிக்கிறார்கள் மக்கள். ஆனால், இந்திராவின் அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது பிரியங்காவின் அரசியல். பாட்டியைப்போல பாதுகாவலர்கள் சூழ வலம்வந்தாலும், மக்களிடம் நெருக்கமாக இருப்பதையே விரும்புவார் பிரியங்கா. தேர்தல் பிரசாரங்களுக்குப் பயணிக்கும் போது, எப்போது வேண்டுமானாலும் காரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்குவார். மக்கள் அவரது கையைப் பிடித்தும், கன்னத்தைத் தொட்டும் கோரிக்கை வைப்பார்கள். இதுபோன்ற செயல்களை இந்திராவிடம் பார்க்க முடியாது. பிரியங்கா புள்ளிவிவரப் புலியும் அல்ல. எளிய பேச்சுநடையிலான வெகுஜன உரையாடல் அவருடையது. அது, எளிய மக்களை எளிதில் அவர் பக்கம் திருப்பும். ஆனால், அரசியலில் இன்னொருவரைப் பிரதிபலிக்கும் இமேஜ் ஒரு கட்டம் வரை மட்டுமே கைகொடுக்கும். அதற்குப் பிறகும் அதையே நம்பினால், காலை வாரிவிடும்.

இன்னொரு பக்கம் ‘பிரியங்காவின் வளர்ச்சி... ராகுலின் வீழ்ச்சி’ என்கிற பதமும், இப்போது அதிகமாகப் பகிரப்படுகிறது. ‘ராகுல் அரசியலுக்கு வந்தபோது ஒபாமா, அமெரிக்க அதிபர் ஆகியிருக்கவில்லை. பிரான்ஸ் அதிபர் மெக்ரான் அப்போதுதான் அரசியல் அரிச்சுவடியே கற்றுக் கொண்டிருந்தார். ஆனால், ராகுல் அப்போதிருந்து அரசியல் செய்தும் இன்னமும் பிரதமர் பதவியை அடைய முடியவில்லை’ என்று சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அவர்கள் இப்போது முன்வைக்கும் முக்கியக் கேள்வி, ‘ராகுலின் கவர்ச்சி குறைகிறதா?’ என்பதுதான். பதில், ‘இல்லை’ என்பதே. கவர்ச்சி இருந்தால்தானே குறைவதற்கு? ராகுலின் பிம்பம் நிறைகுறைகளுடன் கூடிய அரசியல்வாதி என்பதே தவிர நிச்சயமாகக் கவர்ச்சியால் ஆனதல்ல.

போதாக்குறைக்கு எதிர்த்தரப்பின் ‘பப்பு’ பிரசாரம், ராகுலை அறியாச் சிறுவன் பிம்பத்துக்குள் உருட்டிவிட்டது. ராகுலும் அதைப் பெரியளவில் கண்டுகொள்ளாததால், அந்தப் பிம்பம் நீடித்துவிட்டது. இப்போதும் சமூக வலைதளங்களில் அந்த வார்த்தையைச் சொல்லியே, ராகுலை அடையாளப் படுத்துகிறார்கள். அதன் தாக்கம், சமூக வலைதளத்துக்கு வெளியேயும் பரவி நிற்கிறது. இந்தச் சூழலில்தான், காங்கிரஸுக்கு ராகுலை மீறி, பிரியங்கா தேவைப்படுகிறார்.

மோடிக்கு ஆபத்து?

பிரியங்கா பற்றிய அறிவிப்பு, கண்டிப்பாக மோடியின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். பிரியங்காவின் வருகையால் களத்தில் ஏற்படும் மாற்றங்களை, ஓர் அரசியல்வாதியாக மோடி உணர்ந்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. உண்மையில், இப்போதைய இந்திய அரசியலை மோடி அளவுக்குப் புரிந்துகொண்ட மற்றொரு அரசியல்வாதி இங்கில்லை. கடந்த பத்தாண்டு களில், அரசியலில் அவர் பெற்ற உச்சம், அவரே எதிர்பார்க்காதது. முழுக்க முழுக்கப் பிம்பத்தைச் சார்ந்த அரசியல் அவருடையது. ஆட்சியின்மீது இவ்வளவு அதிருப்தி இருக்கும்போதுகூட, வேறு பிரதமர் வேட்பாளரை பி.ஜே.பி தேடாமல் இருக்கிறதென்றால், அங்குதான் ஜெயிக்கிறார் மோடி. இந்துக்களின் ‘சாம்ராட்’ பிம்பமும் அவருக்குக் கூடுதல் பலம்.

இதுபோன்ற சூழ்நிலையில், மோடி போன்ற பலசாலியை எதிர்க்க, ராகுலைவிட, இந்திராவைப் போன்ற பிரியங்காவே அவசியம் என்பதை காங்கிரஸ் தாமதமாகவேணும் உணர்ந்திருக்கிறது. முக்கியமாக, மோடியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். அதற்காகவே, பிரியங்கா என்னும் பிரம்மாஸ்திரத்தை எடுத்திருக்கிறார்கள். ஒருவகையில், காங்கிரஸின் கடைசி ஆயுதம் பிரியங்கா.

பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...

மோடியை வீழ்த்தும் அளவுக்கு பிரியங்காவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று கூறுவதும் முன்முடிவாகவே இருக்கும். ஆனால், மோடியை அச்சுறுத்தும் அளவுக்கு பிரியங்காவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அவரது செல்வாக்கைப் பார்க்க வேண்டுமென்றால், வட இந்தியா செல்ல வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் சொல்லவே வேண்டாம். ‘இந்திரா கீ கூன், பிரியங்கா கமிங் சூன் (இந்திராவின் ரத்தம் பிரியங்கா விரைவில் வருகிறார்) என்ற முழக்கம், பல ஆண்டுகளாக அங்கே இருக்கிறது. இங்கே எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘முகம் காட்டுத் தம்பி, அது போதும்’ என்று அண்ணா சொன்னாரே, இது அப்படியே வடக்கில் பிரியங்காவுக்குப் பொருந்தும். இதனால் தான் மோடி, பிரியங்காவின் பதவி தொடர்பான அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே, ‘அவர்களுக்குக் குடும்பமே கட்சி, எங்களுக்குக் கட்சியே குடும்பம்’ என்று பேச ஆரம்பித்துவிட்டார். அடுத்தடுத்த நாள்களில், வார்த்தைப் போர் அதிகரிக்கலாம். ராபர்ட் வதேரா மீதான வழக்குகளும் சூடுபிடிக்கலாம்.

அமேதியில் பிரியங்கா போட்டியிடக்கூடும் என்றும் சொல்கிறார்கள். ‘உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த முதல்வர் அமேதியில் இருந்து வருவார்’ என்று ராகுல் சொல்லியிருப்பதைக் கவனித்தால், அங்கு பிரியங்கா போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்றே தெரிகிறது. அப்படி அவர் அமேதி யில் போட்டியிட்டால், ராகுல் ரேபரேலிக்கு மாறக்கூடும். தொடர் பிரசாரங்களுக்கு ஒத்துழைக் கும் வகையில் சோனியாவின் உடல்நிலை இல்லையென்பதால், அவர் மாநிலங்களவை உறுப்பினராக விரும்புவதாகவும் சொல்லப் படுகிறது. ஆக, பெரும் எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் பிரியங்கா. அவரது சிறிய நகர்வுகூட இனிமேல் பெரிதாகப் பேசப் படும். அவரது உரைகள், ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக மாறும். பிரியங்கா என்னும் பெயர் இந்திய அரசியலில் இனி தவிர்க்க முடியாதது.

1999-ம் ஆண்டின் ஒரு சமயத்தில், அரசியலிலிருந்து முழுமையாக விலகியிருக்கும் முடிவை எடுத்தார் பிரியங்கா. அப்போது, ஆனந்த் பவன் தோட்டத்தில் வண்ணக் கனவுகளுடன் உலாவிய இளம்பெண் அவர். இப்போது 2019. இடையே, இருபது வருடங்கள் ஓடிவிட்டன. மீண்டும் அதே ஆனந்த் பவனிலிருந்து, அரசியல் பயணத்தைத் தொடங்கு கிறார் பிரியங்கா. ‘இந்திராவின் பேத்தியே வருக!’ என்கிற உற்சாகக் குரல் காங்கிரஸில் கேட்கிறது. காலமும் பிரியங்காவின் அரசியல் சித்தாந்தங் களுமே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்.