அலசல்
Published:Updated:

ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா?

ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா?

கே.சந்துரு முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்ஓவியம்: பாரதிராஜா

‘மறைந்த ஜெயலலிதாவுக்காக அரசு செலவில் நினைவு இல்லம் கட்டுவதற்குத் தடை இல்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில், அவர் சட்டப்படி குற்றவாளியல்ல என்று கருதுவதாக இரு நீதிமன்ற அமர்வு முடிவுசெய்துள்ளது அதைவிட அதிர்ச்சியளிக்கிறது. இது தவறான கருத்தாகும். இதற்காக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் செய்த முடிவு சரிதானா என்று ஆராய்வதற்கு முன்பு, முந்தைய சில வழக்குகளைப் பார்ப்போம்.

‘ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுக்காக நடத்தப்பட்ட திருமண விழாவில், அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது’ என்ற பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, ‘திருமண நிகழ்ச்சியை அரசு செலவில் நடத்துவது முறைகேடான செயல்’ என்று கூறுவதற்குப் பதிலாக, திருமணம் நடந்துமுடிந்த பிறகு அந்தச் செலவீனங்களை அரசு நிறுவனங்களுக்குச் செலுத்தும்படி உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘பிளசென்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில், அந்த ஹோட்டல் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டது என்று கூறியதுடன், அதை இடிக்கவும் உத்தரவிட்டார் நீதிபதி சீனிவாசன். ஹோட்டல் கட்டடம் இடிக்கப்பட்டதே தவிர, ஜெயலலிதா மீது நடவடிக்கை இல்லை. மாறாக, அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் வீட்டின் குடிநீர், மின்சார இணைப்பைத் துண்டித்துப் பழிவாங்கினார்கள். அரசு நிறுவனமான டான்சியின் நிலத்தை, பொது ஊழியரான முதலமைச்சர் ஜெயலலிதா தன் தோழியுடன் ஏலத்தில் வாங்கியது தவறு என்று போடப்பட்ட வழக்கிலும் தப்பினார் ஜெயலலிதா. அதில் தீர்ப்பு அளிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டதுடன், டான்சி நிலத்தை அவர் விலையின்றி திருப்பிக்கொடுத்துவிடுவதாகக் கூறியதும் தீர்ப்பில் பதிவுசெய்யப்பட்டது. இப்படி நீதிமன்றத்தில் ஜெயலலிதா எப்போதுமே ‘ஜெயித்தே’ வந்துள்ளார். அதன் மைல்கல்தான் அவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்கு.

ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா?

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியரோ பொது ஊழியரோ ஊழல் செய்தால் மட்டுமே வழக்குத் தொடுக்க முடியும். அரசு ஊழியர் அல்லாதவர்கள், கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக மட்டுமே தண்டிக்க முடியும். அந்த அடிப்படையில் ஜெயலலிதாவை முதல் குற்றவாளியாக்கி, சசிகலா இரண்டாவது குற்றவாளியாகவும், சுதாகரன் மூன்றாவது குற்றவாளியாகவும், இளவரசி நான்காவது குற்றவாளியாகவும் 1996-ம் வருடம் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு பல்வேறு திருப்பங்களைக் கொண்டதுடன், முடிவதற்கே 21 வருடங்கள் ஆகின. ‘காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்பார்கள். ஆனால், காலதாமதப்படுத்துவதே வெற்றி என்று, அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பெரும் செலவில் வழக்கறிஞர்களை அமர்த்தி, வழக்கை இழுத்தடித்தார்கள். வக்கீல் வாதங்களைக் கேட்டு முடித்து, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளிப்பதற்கே ஒரு வருடம் ஆனது. பின்னர் ஓர்= உச்ச நீதிமன்ற நீதிபதியே, ‘காலதாமதம் முறைகேடான செயல்’ என்று விமர்சிக்க நேரிட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 2017, பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அது சட்டப் புத்தகங்களில் ஏறத்தாழ 400 பக்கங்களில் உள்ளது. 583 பத்திகள் கொண்ட அந்தத் தீர்ப்பில், 570 பத்திகளில் ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை நடத்திய ஆட்சியில் முறைகேடாகச் சேர்த்த சொத்து விவரங்கள், அவை ஊழலினால் மட்டும் பெறப்பட்டவை என்பவையெல்லாம் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 571-வது பத்தியில், ‘ஜெயலலிதா ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மற்ற குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்தார்’ என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 571.4-வது பத்தியில், ‘மற்ற மூன்று குற்றவாளிகளும் அவருடன் சமூக வாழ்க்கை நடத்தவில்லை. அவர்களுக்குத் தன் இல்லத்தில் மனிதாபிமான அடிப்படையில் இலவச வாழுமிடம் கொடுக்கவில்லை. வழக்கிலுள்ள சாட்சியங்களைப் பார்க்கும்போது முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் வீட்டில், மற்ற மூன்று குற்றவாளிகளும் குற்றச்சதி புரிவதற்காகத் தங்கிச் செயல்பட்டு, அத்தனை சொத்துகளையும் நிர்வகித்து வந்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 572-வது பத்தியில், ‘விசாரணை நீதிமன்றம் தன் தீர்ப்புக்கு சரியான காரணங்களைக் கொடுத்துள்ளது. அதை நாங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா?

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட நான்கு குற்றவாளிகளும் குற்றம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டு, அதற்கான தண்டனையையும், அபராதத்தையும் விதித்துள்ளார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இந்தத் தீர்ப்பை ரத்து செய்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்ற மேல்முறையீடு வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு அளிப்பதற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டார். இதனால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, அவரது தண்டனை ரத்தின் மீது போடப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டனர். அப்படி தள்ளுபடி செய்யும்போது, ‘நான்கு குற்றவாளிகளும் பிரிக்க முடியாத அளவுக்கு கூட்டுச்சதியில் ஈடுபட்டது சாட்சியத்தின் வாயிலாகத் தெரியவருகிறது. ஆனாலும், அதில் முதல் குற்றவாளி இறந்துவிட்டதால், அவர்களின் தண்டனை ரத்துக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு குற்றவாளிகளும் சேர்ந்து வசித்து, கூட்டுச்சதி செய்த போயஸ் தோட்ட வீட்டைத் தான் இன்று நினைவிடம் ஆக்குகிறார்கள். அந்த வீடு இன்று வருமானவரி செலுத்தாததால் அந்த இலாகாவின் பற்றுதல் அறிக்கைக்கு உட்பட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது. மேலும், ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அந்தச் சொத்தை   1944-ம் வருடக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின் கீழ், அரசு பறிமுதல் செய்து அரசின் சொத்தாக்க முடியும். தவிர, நீதிபதி குன்ஹா அளித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை மற்ற மூன்று குற்றவாளிகளும் செலுத்த மறுக்கும் பட்சத்தில், அந்த வீட்டை ஏலமிட்டு அந்தப் பணத்தை அரசுக் கணக்கில் செலுத்த முடியும்.

இப்படியான நிலையில்தான், போயஸ் தோட்ட வீட்டை அரசு 60 கோடி ரூபாய் செலவில் கையகப்படுத்தி, மேலும் சில கோடிகள் செலவு செய்து, நினைவு இல்லமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இது சரியா என்ற கேள்வி உயர் நீதிமன்றத்தின் முன், பொதுநல வழக்கில் எழுப்பப்பட்டதை துரதிர்ஷ்டவசமாக நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உடல்நிலை குன்றியதால், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார். அதற்கான செலவுத் தொகையான ஐந்து கோடி ரூபாயை ஆளுங்கட்சியான அ.தி.மு.க தனது கட்சிப் பணத்திலிருந்து கொடுக்க முன்வந்துள்ளது. அதுபோல் கட்சியின் சார்பில் நினைவு இல்லம் அமைத்தால், அதை யாரும் கேட்கப்போவதில்லை.

ஆனால், ‘கிரிமினல் சதியில் அங்கம் வகித்தார். அதற்கு தன் இருப்பிடத்தையே பயன்படுத் தினார்’ என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் கூறியிருந்தபோதும்,  உயர் நீதிமன்றம் கிரிமினல் நடைமுறை சட்டப்படி, ‘ஜெயலலிதா குற்றவாளி அல்ல’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பது முறையல்ல. மக்கள் வரிப்பணத்தில் நினைவு இல்லம் அமைப்பதற்குத் தகுதி வேண்டும். அதற்கு தார்மீக உரிமை வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 99 சதவிகிதப் பகுதி அவர் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அவர் முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களை அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், இறந்துவிட்டார் என்ற நுட்பமான காரணத்திற்காக, அவர்மீது போடப்பட்ட மேல்முறையீடு மனுத் தள்ளுபடி செய்யப்பட்டது என்று தெரிந்தும், நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது வருத்தத்தை அளிக்கிறது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கருதும் நீதித்துறைக்கு, மிகப்பெரும் அதிர்ச்சி இந்தத் தீர்ப்பு.