அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

@கிணற்றுத்தவளை, புதுக்கோட்டை.
மிகப்பெரிய கிரேக்கக் குதிரையின் இறக்கைகளைப் பார்த்துவிட்டு, கல்லறைக் கரையில் (மெரினா) நின்றபடிக் கேட்கிறேன், ‘முதல் நபரையே குற்றவாளியாகக் கருதமுடியாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, இரண்டாம் நபரான சசிகலாவையும் விடுதலை செய்துவிட வேண்டியதுதானே?


சட்டம் மட்டுமல்ல, நீதியும்கூட ஓர் இருட்டறையோ என்கிற சந்தேகம் எழத்தான் செய்கிறது. ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் அல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். அடுத்த நிமிடமே நிரபராதிகள் என்றாகிவிட்டனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த நிமிடமே, குற்றப்பத்திரிகை மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்புக்கும் உயிர் வந்துவிடுகிறது. பழையபடி குற்றச்சாட்டில் சிக்கியவர்களாகிவிடுகிறார்கள். அப்போது, ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார். உச்ச நீதிமன்ற விசாரணைகள், வாதப்பிரதிவாதங்கள் எல்லாமும்கூட முடிந்துவிட்டன. தீர்ப்பு மட்டுமே பாக்கி என்கிற நிலையில்தான் ஜெயலலிதா உயிரிழந்தார். இத்தகைய சூழலில், ஒருவர் உயிருடன் இல்லை என்பதற்காக மட்டுமே ‘குற்றவாளி இல்லை’ என்று தீர்ப்பு எழுதுவது எப்படிச் சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. வழக்கில் முதல் குற்றவாளியாகக் காட்டப்பட்டவரே ஜெயலலிதாதான். அவரே குற்றவாளி இல்லையென்றால், மற்றவர்கள் என்கிற உங்களுடைய கேள்வியில் உலக நியாயம் இருக்கவே செய்கிறது!

கழுகார் பதில்கள்!

@கே.முருகேசன், விருதுநகர்.
ஒருவேளை எதிர்க் கட்சிகளின் கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின் பிரதமராகிவிட்டால், தமிழக முதல்வர் பதவிக்கான தி.மு.க-வின் சாய்ஸ் கனிமொழியா... உதயநிதியா?


கழுகார் பதில்கள்!

‘பத்தவெச்சிட்டியே முருகேசு!’.

@பி.எஸ்.ஏ ஜெய்லானி, கடையநல்லூர்.

2003-ம் ஆண்டுடன் அரசுப் பணிக்கான ஓய்வூதியம் முடிந்துவிட்ட பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கேட்டுப் போராடுவது ஏற்புடையதா?

ஓய்வூதியத் திட்டம் மட்டுமல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் தொடங்கி மொத்தமாக 9 கோரிக்கைகளை வைத்துள்ளனர். அவற்றில் இருக்கும் நியாயங்களை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வுகாண வேண்டியது அரசின் கடமையே. அதேசமயம், உரிமைகளைக் கேட்கும் இவர்கள், தங்களுடைய கடமைகள் மீதும் உரிய மரியாதையை வைத்துள்ளனரா என்பதையும் சுயப்பரிசோதனை செய்ய வேண்டும். தங்களின் போராட்டங்கள் எப்போதுமே கடுமையாக விமர்சனத்துக்குள்ளாவது ஏன் என்பதைச் சங்கங்களும் ஊழியர்களும் உணர வேண்டும். லஞ்சம், ஊழலில் திளைக்கும் ஊழியர்கள், பொதுமக்களை உதாசீனப்படுத்துவது, அலைக்கழிப்பது போன்றவற்றை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். இவற்றுக்கு எதிராகவும் இந்தச் சங்கங்கள் பொங்கினால், பொதுமக்களின் ஆதரவையும் பெறமுடியுமே! 

@டி,ஜெய்சிங், கோயம்புத்தூர்.

பா.ம.க எந்தக் கூட்டணியில் சேரும் என்று கூறமுடியுமா?


கொள்கைக் கூட்டணி, கொள்ளைக் கூட்டணி இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல முக்கியமான இரண்டு கூட்டணிகள் அமையவிருக்கின்றன. இரண்டிலுமே கொள்கை, கொள்ளை இரண்டுக்குமே வாய்ப்புகள் உண்டு. வசதிக்கு ஏற்றாற்போல, கடந்த கால அனுபவங்களையும் மனதில் கொண்டு, வழக்கம்போல சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்!

 என்.சுப்பையா, புதுக்கோட்டை.
நடிகர் அஜீத்குமார், அரசியலைப் பற்றி வெளியிட்டிருக்கும் கருத்துக்களை பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்றுள்ளனரே?


ஏற்கெனவே கோடம்பாக்கத்திலிருந்து ஏகப்பட்ட பேர் க்யூவில் நிற்கிறார்கள். இந்நிலையில், ‘எனக்கும் அரசியலுக்குமான தொடர்பு, வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே’ என்று அஜீத் சொல்லியிருப்பது, பாலை வார்க்கும் செய்தியல்லவா அவர்களுக்கு!

கழுகார் பதில்கள்!

@நீலன், கோவை.
இதுவரை ஆட்சி செய்தவர்கள் யாரும் கடனாளியாய் இல்லை. ஆனால், அவர்கள் ஆண்ட தமிழகம் மட்டும் கடனில் சிக்கித்தவிப்பது ஏன்?


தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைத்துக்கொண்டிருக்காதீர்கள். கிட்டத்தட்ட உலகம் முழுக்கவே பணம் பார்ப்பதும், நாடுகளைக் கடனில் தள்ளுவதும்தான் ஆட்சியாளர்களின், அதிகாரவர்க்கத்தினரின் வாடிக்கையாக இருக்கிறது. எத்தனைப் பெரிய பதவிகளில் இருந்தாலும், கேவலம் மனிதர்கள்தானே! சொல்லப்போனால், புத்தனின் பெயரால் ஆட்சி நடக்கும் நாடுகள் சிலவற்றிலும்கூட இந்த அநியாயம்தானே நடக்கிறது!

@ஷி. பஷீர் அலி, பேராவூரணி.
பிரியங்காவின் அரசியல் பிரவேசம், காங்கிரஸின் கடைசித் துருப்புச்சீட்டா?


நபர்களைப் பார்த்து ஓட்டுப்போடுவது என்பதே ஒரு மாயைதான். அது உண்மையாக இருந்தால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் தோல்வியையே சந்தித்திருக்கக் கூடாது அல்லவா. ஏன், சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களில் நரேந்திர மோடிக்குத் தோல்விதானே! ஆக, மனிதக் கவர்ச்சி என்பது ஓரளவுக்குத்தான் வேலை செய்யும். முந்தைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள்தான், அடுத்த ஆட்சியாளரைத் தீர்மானிக்கும். இதற்கு, கூட்டணி பலம் என்பது மிகமிக முக்கியம். எனவே, பிரியங்கா துருப்புச்சீட்டாக இருக்கவே முடியாது. கூடுதல் பலம் என்கிற வகையில் வேண்டுமானால் இருக்கலாம்!

மன்னை கு.ஜோதிமணி, மன்னார்குடி.

ஜெ.தீபா, அ.தி.மு.க-வில் இணைந்தால், இ.பி.எஸ் அல்லது ஓ.பி.எஸ் எந்தக் கோஷ்டியில் இருப்பார்?

ஜெ.தீபா கோஷ்டியில்!

தாராலட்சுமி வேலூர் (நாமக்கல்).
ராகுலை பிரதமராக அறிவித்த மு.க.ஸ்டாலினுக்கு, மம்தாவின் கொல்கத்தா மாநாட்டில் என்ன வேலை?


ஹவுரா பாலம், பலமாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக விசிட் அடித்திருப்பாரோ!

@ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.
‘கூட்டணிசேர பி.ஜே.பி விரும்பினாலும், இணைத்துக்கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும்’ என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?


‘விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைத்ததை விரும்பிவிட வேண்டியதுதான்’ என்பார்கள். ஆனால், ‘கொடுத்ததை விரும்பியே ஆகவேண்டும்’ என்கிற நிலையிலும் கூட, ஜெயக்குமாருக்குத் தான் எத்தனை லொள்ளு!

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.
ஹெல்மெட் போல, பிளாஸ்டிக் தடைக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்புக் கிடைக்காது போலத் தெரிகிறதே?


ஹெல்மெட் என்பது உயிர் சார்ந்த விஷயம். சாலை விதிமுறைகளை மீறுவது கொலைக்குற்றத்துக்குச் சமமான செயல். ஆக, சொந்த உயிர் மீதே பயமற்றுப் போய்விட்ட சமுதாயத்தில், மண்ணையும் சுற்றுச்சூழலையும் பற்றியா கவலைப்படப்போகிறார்கள். ஆனாலும், தடை அமலாகியிருக்கும் சூழலில், உண்மையான உணர்வுடன் சிலரும் பெயருக்காகச் சிலரும் கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள். முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்றால், அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைகளால் மட்டுமே முடியும், லாட்டரி சீட்டு ஒழிப்புபோல!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
ரஜினியால், கட்சி நடத்த முடியாது என்று ஆர்.எம்.வீரப்பன் சொல்கிறாரே?


ஒருவகையில் ரஜினியின் அரசியல் குரு ஆர்.எம்.வீரப்பன். இவரது ‘பாட்ஷா’ படவிழா மேடையில் இருந்துதான் ரஜினியின் அரசியல் ஆசை துளிர் விட ஆரம்பித்தது. ஜெயலலிதாவின் அன்றைய ஆட்சியில் வெடிகுண்டு கலாசாரம் பற்றிப் பேசி, தீயைப் பற்றவைத்தார் ரஜினி. இதனாலேயே, ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்திருந்த ஆர்.எம்.வீரப்பன், அமைச்சர் பதவியிலிருந்தே விரட்டப்பட்டார். அப்படிப்பட்டவர் சொல்கிறார் என்றால், அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கத்தானே செய்யும்!

@காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்-1.
நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராகக் காட்டத் திட்டமிடும் ஏற்பாடே, பி.ஜே.பி-க்கும் மோடிக்கும் பின்னடைவுதானே?


ஊடகங்களில், இப்படியொரு திட்டம் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அந்தக் கட்சியிலிருந்து எவ்விதமான விளக்கமும் வழங்கப்படவில்லை. ‘இல்லாமல் புகையாது’ என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதானோ!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!