Published:Updated:

தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?

தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?

ஊர் ஊராக பயணம்... மக்களுடன் செல்ஃபி!

தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?

ஊர் ஊராக பயணம்... மக்களுடன் செல்ஃபி!

Published:Updated:
தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?

“நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் கனிமொழி போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது” - இப்படி உற்சாகமாகச் சொல்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள். அதற்கேற்ப கடந்த ஓர் ஆண்டாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களிடம் குறைகளைக் கேட்பதும், உடனடித் தீர்வுகளுக்காக நடவடிக்கைகள் எடுப்பதுமாகச் சுற்றிச்சுழன்று வருகிறார் கனிமொழி!

எம்.பி-க்களின் கிராமத் தத்தெடுப்பு திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெங்கடேசுவரபுரம் கிராமத்தைத் தத்தெடுத்துள்ள மாநிலங்களவை எம்.பி-யான கனிமொழி,  அந்தக் கிராமத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மேலும், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக் குரல் கொடுத்தது, ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கண்டித்துக் குரல் கொடுத்தது, மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தது, மீனவர்களுக்கு மீன்பிடி வலைப்பின்னல் கூடம் கட்டித்தந்தது என்று பல திட்டங்களைத் தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் செய்துவருகிறார். இந்நிலையில், தி.மு.க நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள கனிமொழியை தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுப்பியிருக்கிறது கட்சித் தலைமை. இதனால், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள் தி.மு.க-வினர்.

தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?

இதைத் தொடர்ந்து பிரசாரப் பயணம் போல, ஜனவரி 18-ம் தேதி முதல் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் பேசிவருகிறார் கனிமொழி. முதல்நாள் கூட்டத்தில் குறுக்குச்சாலை ஊராட்சிக்கு உட்பட்ட கக்கரம்பட்டியைச் சேர்ந்த அகிலா என்ற பெண், “எங்க கிராமத்துல நூலகம் இருக்கு. ஆனா, புத்தகங்கள் இல்லை” என்று கூற, மூன்று நாள்களில் அங்கு மீண்டும் நேரில் சென்ற கனிமொழி, தனது வீட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 300-க்கும் அதிகமான புத்தங்களைக் கொடுத்தார். அதேபோல செல்லுமிடம் எல்லாம் கனிமொழியைச் சூழந்துகொண்ட கிராமப் பெண்கள், “டாஸ்மாக்கை ஒழிங்க மேடம். கூலிக்கு நடவு செய்யறப்பகூட கால்ல பாட்டில் சில்லு குத்துது. வீட்டுல அப்பனும் மகனும் சேர்ந்துக் குடிச்சுட்டு, எங்களை அடிக்குறாங்க” என்று கண்ணீர் விட்டு அழுதார்கள். அவர்களிடம் கனிமொழி, “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்த விஷயத்துல நீங்க நினைக்குறது நடக்கும். கவலைப்படாதிங்க” என்று கூறினார்.

கோட்டூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு பெண், “எம்.பி தேர்தல்ல தூத்துக்குடியில நீங்க நிற்கப்போறதாச் சொல்றாங்க. நீங்க நிக்குறதுல சந்தோஷம். எல்லா கிராமங்கள்லயும் குறைகளைக் கேட்டு எழுதிட்டுப்போறீங்க. ஜெயிச்சு எம்.பி ஆயிட்டா, அதுல பாதியாச்சும் நிறைவேத்துவீங்களா. இல்ல நீங்களும் வாக்குறுதிகளைக் காத்துல பறக்கவிட்ருவிங்களா?” என்று துணிச்சலாகக் கேட்டார். அவருக்குப் பதில் அளித்த கனிமொழி, “நிச்சயமாக நிறைவேற்றுவேன். இல்லைன்னா நீங்க என்ன நடுரோட்டுல நிறுத்திக் கேள்வி கேட்கலாம்” என்றார்.

அனைத்து கிராம சபைக் கூட்டங்களின் இறுதியிலும், “உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தா உங்க பிரச்னைகள் சரிசெய்யப்பட்டிருக்கும். உங்க கோரிக்கைகளைக் குறித்துக்கொண்டேன். கட்சித் தலைமையிடம் பேசி, என்னென்ன பிரச்னைகளை உடனடியாகத் தீர்க்க முடியுமோ... தீர்த்து வைக்கிறோம்” என்றார் கனிமொழி. கூட்டங்களின் நிறைவில் கனிமொழியுடன் பெண்கள் குரூப்பாக செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம்காட்ட, அவரும் சலிக்காமல் போஸ் கொடுத்தார்.

தூத்துக்குடியில் களமிறங்குகிறாரா கனிமொழி?

கனிமொழியின் சுற்றுப்பயணம் குறித்து அவரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். “கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுறதுக்கான கிரீன் சிக்னலை கட்சித் தலைமை சில மாதங்களுக்கு முன்பே கொடுத்துடுச்சு. ராஜாத்தி அம்மாள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்தச் சமூகத்தினரின் ஆதரவு அவருக்குக் கிடைக்கும். அதேசமயம், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ கீதாஜீவனின் தம்பி ஜெகன், தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஆகியோரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியைக் குறிவைத்துக் காய்நகர்த்திவருகின்றனர். தவிர இங்கு கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் என்று தி.மு.க-வில் இரண்டு கோஷ்டிகள் இருக்கு. இதுல யாரை வேட்பாளரா அறிவிச்சாலும், மாற்று அணியில் உள்ளவங்க வேலைசெய்ய மாட்டாங்க. ஆனா, ‘தலைவரின் மகள்’ என்ற வகையில கனிமொழியை நிறுத்தினால் இரண்டு தரப்பினருமே வேலைசெய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்படும். அந்த வகையில், கனிமொழியை வரவேற்கிறோம்” என்றார்கள்.

கனிமொழி சார்பாக நம்மிடம் பேசியவர்கள், “ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியைத் தலைமை ஒதுக்கியுள்ளது. அப்படிதான் கனிமொழிக்கும் தூத்துக்குடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் கட்சிப் பணி செய்துவருகிறார். தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டால் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் அனைத்துக்குமே அவர் மாநிலங்களைவையில் அழுத்தமாகக் குரல் கொடுத்துவருகிறார். எனவே, தூத்துக்குடியில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தால், தூத்துக்குடியின் துயரங்களைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பார்” என்றார்கள். 

- இ.கார்த்திகேயன்,
படங்கள்: ப.கதிரவன்