Published:Updated:

’பி.ஜே.பி கூட்டணிக்கு 247, காங்கிரஸ் கூட்டணிக்கு 166’ -கருத்துக்கணிப்பு சொல்லும் கணக்கு

’பி.ஜே.பி கூட்டணிக்கு 247, காங்கிரஸ் கூட்டணிக்கு 166’ -கருத்துக்கணிப்பு சொல்லும் கணக்கு
’பி.ஜே.பி கூட்டணிக்கு 247, காங்கிரஸ் கூட்டணிக்கு 166’ -கருத்துக்கணிப்பு சொல்லும் கணக்கு

நாடாளுமன்றத் தேர்தல் அருகில் வந்துவிட்டது. அதற்கான அணி சேர்க்கும் வேலைகளை, கட்சிகள் கனஜோராக செய்து வருகின்றன. 

பி.ஜே.பி-யை வீழ்த்த ’மெகா கூட்டணி’ அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது காங்கிரஸ். தி.மு.க, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள், காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டன. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டார். ‘அணியின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பது மட்டுமே அவருக்கு பிரச்னை. இன்னொரு புறம், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோர், ’பி.ஜே.பி-யும் வேண்டாம், காங்கிரஸும் வேண்டாம்’ என்று தனி அணி அமைத்துவிட்டார்கள். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் அதே எண்ணம் கொண்டுள்ளார். இந்தச் சூழலில், இன்றைய தேதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், ’எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்’ என்று, இந்தியா டுடே தொலைக்காட்சியும், கார்வி இன்சைட்ஸ் நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி, கடந்த முறை 340 (பி.ஜே.பி 282) தொகுதிகளில் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, இம்முறை 237 இடங்களுக்குப் பின் தங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 99 இடங்களை இழக்கிறது தே.ஜ.கூ. கடந்த முறை 60 (காங்கிரஸ் 44) தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இம்முறை 166 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. 106 இடங்களை அதிகம் பெறுகிறது ஐ.மு.கூ. 

இரண்டு கூட்டணியிலும் அங்கம் வகிக்காத மாநிலக் கட்சிகள், 140 இடங்கள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும், மத்தியில் இரண்டு பெருங் கூட்டணிகளும் தனிப்பெரும்பான்மை பெறாது என்பதையே கருத்துக்கணிப்பு காட்டுகிறது. மாநிலக் கட்சிகளே அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என்று அடித்துச்சொல்கிறது, அந்த கருத்துக்கணிப்பு. 

வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணி 35 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 32 சதவிகித வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 32 சதவிகித வாக்குகளைப் பெறுமாம். 

அதேபோல, ’அடுத்த முறையும் மோடி பிரதமராக வர வேண்டுமா?’ என்ற கேள்வியை முன்வைத்தும் கருத்துக் கேட்பு நடத்தியிருக்கிறார்கள். அதில், மோடிக்கு ஆதரவாக 60 சதவிகிதம் பேரும், எதிராக 32 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவிகிதம் பேர் ’கருத்துக்கூற விரும்பவில்லை’ என்று கூறியுள்ளனர்.