Published:Updated:

குக்கர் காலி..! இனி என்ன செய்யப் போகிறார் தினகரன்?

``கட்சி ஆரம்பிக்கும்போதே சசிகலாவுக்கும், தினகரனுக்கும் முட்டிக்கொண்டது. `அ.தி.மு.க-வை மீட்பதை விட்டுவிட்டு, புதிய கட்சி தொடங்கி என்ன செய்யப் போகிறாய்?' என நேரடியாகவே கடிந்துகொண்டார்.

குக்கர் காலி..! இனி என்ன செய்யப் போகிறார் தினகரன்?
குக்கர் காலி..! இனி என்ன செய்யப் போகிறார் தினகரன்?

``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது" என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறிவிட்டது. ``பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்கிற நிலையில், பதிவுசெய்யப்படாத கட்சியான அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை எப்படி நிரந்தரமாகத் தர முடியும்" என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. கூட்டணி தகராறு ஒருபுறம் இருக்க, மறுபுறம் சின்னத்துக்காகப் போராடும் நிலைக்கு டி.டி.வி.தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.

தினகரனுக்கு இருப்பது, இரண்டு வழிகள்தான். ஒன்று, நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் 20 தொகுதி இடைத்தேர்தல்களில் சுயேச்சைகளாக வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டும் அல்லது கட்சியைப் பதிவுசெய்துவிட்டு பொதுச் சின்னத்தைக் கேட்டுப் பெற வேண்டும். தினகரனின் அடுத்த `மூவ்' என்னவென்பதை அவரது கட்சியினர் மட்டுமல்லாது, மற்றக் கட்சியினரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். 

கடந்த 2017 ஏப்ரலில் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது. ஓ.பி.எஸ். அணிக்கு, இரட்டை மின் கம்பத்தையும், சசிகலா அணிக்குத் தொப்பி சின்னத்தையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கடுமையான பணப்புழக்கக் குற்றச்சாட்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அன்று நடைபெறவிருந்த இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்தது. 

மீண்டும் 2017 டிசம்பரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்சிகள் சுறுசுறுப்பாகின. இம்முறை அ.தி.மு.க. அணிகள் ஒன்றுசேர்ந்து, கட்சியின் பெயரும், சின்னமும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். அணிக்குக் கிடைத்தன. இதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இடைத்தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக, தங்களுக்கென்று ஒரு கட்சிப் பெயரும், சின்னமும் ஒதுக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனடிப்படையில், சுயேச்சை வேட்பாளரான தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனும் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கடந்தாண்டு மார்ச் 15-ம் தேதி மதுரையில் தொடங்கியதிலிருந்து இதுவரையில் தேர்தல் ஆணையத்தில் பதியவில்லை. அப்படிப் பதியும் பட்சத்தில், அ.தி.மு.க-வுக்கு உரிமை கோர முடியாது. என்றாவது, ஒருநாள் அ.தி.மு.க-வுடன் இணைந்துவிடுவோம் என்று தினகரன் பின்னால் அணிவகுத்திருக்கும் அ.தி.மு.க-வினர், தங்களது உறுப்பினர்  உரிமையை இழக்க நேரிடும். அ.ம.மு.க-வுக்கு சசிகலாவைத் தலைவராகப் பதிவுசெய்தால், டெல்லியில் நடைபெறும் இரட்டை இலை வழக்கிலும் சிக்கல் எழும். இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் கட்சியைப் பதிவுசெய்யாமல் தினகரன் அமைதி காத்தார். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தியதை அடுத்து, தினகரன் அடுத்த `மூவ்' எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க. நிர்வாகிகள், ``கட்சி ஆரம்பிக்கும்போதே சசிகலாவுக்கும், தினகரனுக்கும் முட்டிக்கொண்டது. `அ.தி.மு.க-வை மீட்பதை விட்டுவிட்டு, புதிய கட்சி தொடங்கி என்ன செய்யப் போகிறாய்?' என நேரடியாகவே கடிந்துகொண்டார். தொடக்கக் காலத்தில் அளித்து வந்த நிதியுதவியையும் சசிகலா பின்னாளில் நிறுத்திவிட்டார். மத்திய அரசின் கழுகுப் பார்வையும் வட்டமடிப்பதால், தினகரனால் எங்கும் பணம் புரட்ட முடியவில்லை. தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்காது என்பது தினகரனுக்குத் தெரியும். சசிகலாவை ஓரங்கட்ட, இதுவும் ஒரு வாய்ப்புதான். கட்சியை, தன் பெயரில் பதிவுசெய்தால் மட்டுமே, டெல்லி இரட்டை இலை வழக்கைத் தொடர்ந்து நடத்திட முடியும் என்று வாதத்தை முன்வைப்பார். இனி அ.ம.மு.க-வைப் பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கும்" என்றனர்.

அ.ம.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில், சசிகலாவின் படம் பெரியதாகவும், தினகரனின் படம் சிறியதாகவும் பேனர்களில் இருக்கும். பின்னர், இருவரும் சரிசமமான அளவுக்கு வந்தனர். இப்போது வைக்கப்படும் பேனர்களில் தினகரனின் படம் பெரியதாகவும், சசிகலா, ஜெயலலிதாவின் படங்கள் சிறியதாகவும், எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியாரின் படங்கள் ஸ்டாம்ப் சைஸிலும் மாறிவிட்டன. இன்று கட்சியின் நிலையும் இதுதான். தங்க.தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி போன்ற சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள் கட்சியில் டம்மியாக்கப்பட்டு, தினகரனின் விசுவாசிகளான வெற்றிவேல், மாணிக்கராஜா, சேலஞ்சர் துரை போன்றோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்கிற குமுறல் அ.ம.மு.க-வில் எழுந்துள்ளது. 

தினகரனின் இலக்கு நாடாளுமன்றத் தேர்தலைவிட, 20 தொகுதி இடைத்தேர்தலில்தான் கண்ணாக இருப்பதாக மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் ஒருவர் கூறுகையில், ``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க., வி.சி.க. போன்ற கட்சிகள் எங்களோடு இணையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பா.ம.க. எடப்பாடியுடன் அணிசேர்வதை விரும்புவதாகத் தெரிகிறது. `முதல்வர் பதவி விலக வேண்டும்' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதிலிருந்து, அவர் தி.மு.க. கூட்டணியில் உறுதியாகிவிட்டதை உணர்த்துகிறது. தினகரனின் இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, சட்டமன்ற இடைத்தேர்தல்தான்.

20 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து, கமிட்டிக்கு 35 உறுப்பினர்களைப் பணியமர்த்தியுள்ளோம். எங்களுக்குப் போட்டியாக அ.தி.மு.க. மட்டுமே பூத் கமிட்டி அமைத்துள்ளது. இந்த ஆட்சியைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமிக்கு 8 எம்.எல்.ஏ-க்கள் தேவை. எங்களின் தேர்தல் வியூகத்தால் அந்த எண்ணிக்கையில் நாங்கள் வெற்றிபெற்றுவிட்டாலே போதும், ஆட்டம் போடும் அமைச்சர்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய முதல்வருடன் அ.தி.மு.க. அரசைத் தொடர்வோம். அச்சமயத்தில் அ.ம.மு.க. தனிக் கட்சியாகச் செயல்பட்டாலும், செயல்படாவிட்டாலும் பிரச்னை இல்லை. இங்கு யார் ஜெயிக்கிறார் என்பதே கணக்கு" என்றார்.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ``புதுக்கட்சி தொடங்குவதாக முதலிலேயே கூறியிருந்தால், தினகரன் பின்னால் எந்தத் தொண்டர்களும் திரண்டிருக்க மாட்டார்கள். இரட்டை இலையையும், கட்சியையும் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்ஸுக்கு ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுவிட்டது. இதற்கு நீதிமன்றமும் எந்தத் தடையும் விதிக்கவில்லை. பொதுவான சின்னம் வேண்டுமென்றால், தனிக்கட்சி பதிவு செய்தால் மட்டுமே தினகரனுக்கு சாத்தியம். இப்போதிருக்கும் சூழலில், அவரோடு அணி சேர்வதை எந்தக் கட்சியினரும் விரும்பமாட்டார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி கழித்துப் போட்ட கட்சிகளை வேண்டுமானால், தினகரன் எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.

அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் வீர வெற்றிபாண்டியன், ``தேர்தல் ஆணையம் பதிலளித்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்கவில்லையே? அதற்குள் குக்கர் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்று கூறுவது தவறு. ஒருவேளை, நீதிமன்றம் வழங்கத் தவறினாலும், புதிய சின்னத்தை எப்படி மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். ஒரே நாளில் ஆர்.கே.நகர் மக்களிடையே குக்கரையும், தொப்பியையும் கொண்டு சேர்த்தவர் தினகரன்" என்றார்.

தேர்தல் ஆணையம் மறுத்ததை வைத்தே, சசிகலாவை ஓரங்கட்டி அ.ம.மு.க-வை முழுவதுமாகக் கையில் எடுக்க தினகரன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருகட்சியைப் பதிவு செய்ய நான்கு மாதங்களாவது ஆகிவிடும். ஆகவே, இனி அதற்கான முயற்சிகள் வேகப்படுத்தப்படும் என அ.ம.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.