அலசல்
Published:Updated:

ரஜினியிடம் இளவரசன் பற்றவைத்த பொறி!

ரஜினியிடம் இளவரசன் பற்றவைத்த பொறி!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினியிடம் இளவரசன் பற்றவைத்த பொறி!

- சூரஜ்

“குழுவாகச் செயல்பட மறுக்கிறார் இளவரசன். தனக்கென கோஷ்டியை உருவாக்கினார். ரஜினியின் நண்பரும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான ராஜசேகர், தூத்துக்குடி மாவட்ட மன்றத் தலைவர் ஸ்டாலின்... இருவரும் எதிர் கோஷ்டிகளாக மாறினர். இருதரப்பும் நேரடியாகவும் சமூகவலைதளங்களிலும் மோதிக்கொண்டனர். இதை இளவரசன் கண்டுகொள்வதில்லை. இந்தப் புகார்கள் எல்லாம் ஆதாரத்துடன் ரஜினியின் பார்வைக்குச் சென்றது” இதைத்தான் 20.01.19 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் “ரஜினியின் ‘சீக்ரெட் சிக்ஸ்’ ஆபரேஷன்!” என்கிற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த ஆபரேஷனை முடித்து, நடவடிக்கையில் இறங்கிவிட்டார் ரஜினி.

கடந்த வாரத்தில் இரண்டு முக்கியச் சந்திப்புகள் ரஜினி வீட்டில் நடந்தன. ஜனவரி 23-ம் தேதியன்று கஜா புயல் மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட நான்கு மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்துப் பேசினார் ரஜினி. அடுத்து, 24-ம் தேதியன்று மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் என்.இளவரசனை அழைத்துப் பேசினார். மறுநாளே, ‘ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் என்.இளவரசனின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினி மன்றத்தில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்’ என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

ரஜினியிடம் இளவரசன் பற்றவைத்த பொறி!

இதுகுறித்துப் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “முதல்நாள் கூட்டத்தில், கஜா புயல் பாதித்த நான்கு மாவட்டச் செயலாளர்களை மட்டுமே நேரில் அழைத்திருந்தார் ரஜினி. ஆனால், இவர்களுடன் வேறு சில மாவட்டங்களின் முக்கியப் பிரமுகர்களும் வந்துவிட்டார்கள். வீட்டில் 25 பேருக்கு மேல் திரண்டுநின்றதைத் பார்த்து அப்செட் ஆன ரஜினி, ‘அரசியல் எல்லாம் எப்படியிருக்கு?’ என்று ஜாலியாகத்தான் பேச்சைத் தொடங்கினார். அதற்கு, ஒரு மாவட்டச் செயலாளர், ‘கட்சியைச் சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அதைக்கேட்ட ரஜினி, ‘நிச்சயமாகச் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஆரம்பிச்சிடலாம். அதுக்குள்ள நாம் முழுமையாக ரெடியாகணும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் மாவட்டச் செயலாளரான தாயுமானவன் திடீரென, ‘பேட்ட’ படம் திருவாரூரில் எப்படி வரவேற்பைப் பெற்றது என்று பேச்சை மாற்றியிருக்கிறார். லேசாக புன்முறுவல் செய்த ரஜினி, மீண்டும் அரசியல் பற்றி ஏதோ சொல்ல... மீண்டும் தாயுமானவன் குறுக்கிட்டார். இதனால் ரஜினி பயங்கர அப்செட். ஆனாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி விடைகொடுத்து அனுப்பினார். வெளியில் வந்ததும், முக்கிய நிர்வாகிகள் தாயுமானவனை வறுத்தெடுத்துவிட்டார்கள். ‘ரசிகர் மன்றத்தினர் இன்னும் அரசியல் பிரவேசத்துக்குத் தயாராகவில்லை. சினிமா பட மூடில்தான் இருக்கிறார்கள்’ என்பதுதான் இந்த சந்திப்பில் வெளிப்பட்டது” என்றார்கள்.

இரண்டாம் நாள் கூட்டம் இளவரசன் தொடர்பானது. இதுகுறித்து பேசிய நிர்வாகிகள் சிலர், “அன்றைய தினம் இளவரசன் தன்னிலை விளக்கம் கொடுக்க ரஜினியைச் சந்தித்து, சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். அப்போது ரஜினி, ‘நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். ராஜசேகருடன் இணைந்து செயல்படுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதற்கு இளவரசன் மறுத்துவிட்டார். மேலும் அவர் ரஜினியிடம், ‘என்னை மணல் மாஃபியா என்றெல்லாம் அவதூறு பரப்பக் காரணமானவர்கள் யார் என்று ஏற்கெனவே உங்களிடம் சொல்லிவிட்டேன். இந்த நிலையில், அவருடன் நான் இணைந்து செயல்பட விரும்பவில்லை. என் மீது அவதூறு பரப்பியவர்களின் திட்டம் தெரியாமல் சிறு தவறுகள் செய்த 15 பேர்மீது நடவடிக்கை எடுத்தேன். அவர்களைக் கொஞ்சம் காலம் கழித்து, சேர்த்துக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். இப்போது என்னுடைய ஒரே வேண்டுகோள்... அந்த 15 பேரை மீண்டும் அமைப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று ரஜினியிடம் கோரிக்கை வைத்தார். இளவரசன் கொடுத்த பட்டியலை ரஜினி வாங்கி வைத்துக்கொண்டார். இளவரசன் கொளுத்திப்போட்ட பொறி, ரஜினி மனதில் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. அடுத்த சில நாள்களில் மன்றத்தில் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்” என்றார்கள்.