Published:Updated:

பிரியங்கா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தை விவரிக்கும் ராகுல்!

பிரியங்கா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தை விவரிக்கும் ராகுல்!
பிரியங்கா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தை விவரிக்கும் ராகுல்!

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைப்பதோடு, உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி.

கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர், அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் அமோக வெற்றிபெற்று, பி.ஜே.பி-யிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில் இருக்கிறார் ராகுல் காந்தி. மூன்று மாநிலங்களில் வெற்றிபெற்ற கையோடு, அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்ற நிலையில், ராகுல் காந்தி தன் சொந்தத் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாகச் சென்ற ராகுல், செய்தியாளர்களிடம் பேசுகையில் பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் குற்றம்சாட்டத் தவறவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசின் பல்வேறு சறுக்கல்களையும், தவறான செயல்பாடுகளையும் எடுத்துக்கூறி, இப்போதே அமேதி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கத் தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது. இதன்மூலம் மீண்டும் அவர், அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுதி தவிர்த்து, மேலும் ஒரு தொகுதியிலும் ராகுல் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். மத்திய பி.ஜே.பி. அரசு, அமேதி தொகுதியில் நிறைவேற்றாமல் கைவிட்ட பல்வேறு திட்டங்களை, காங்கிரஸ் அரசு பதவியேற்றதும் கண்டிப்பாக நிறைவேற்றும் என்றார் அவர். மேலும் அமேதி தொகுதிக்கு வரவேண்டிய பல திட்டங்களை பிரதமர் மோடி, வேறு தொகுதிகளுக்கும், வேறு மாநிலங்களுக்கும் கொண்டுசென்று விட்டதாக, ராகுல் குறைகூறினார். 

மேலும் அவர், ``அமேதி தொகுதியில் மீண்டும் உணவுப்பூங்கா அமைக்கப்படும். பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், இந்த மாநிலத்துக்கு எந்தத் திட்டங்களையெல்லாம் மறுத்தார்களோ, அவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கொண்டுவரும். பி.ஜே.பி-யினர் உங்களிடம் வாக்குகேட்டு வரும்போது, பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் மாநிலத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று கூறுங்கள்.

அமேதி மக்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார். உணவுப் பூங்கா அமைக்கப்பட்டிருந்தால் 40-க்கும் மேற்பட்ட உணவுப் பதப்படுத்தும் பிரிவு தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், அத்திட்டத்தை மத்திய அரசு அமேதியில் நிறைவேற்றவில்லை. இதுபோன்ற ஏராளமான திட்டங்களை இங்கிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டுசென்று விட்டது பி.ஜே.பி. இதன் மூலம் அமேதி மக்களுக்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதுடன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெறும். பிரியங்காவையும், ஜோதிராதித்ய சிந்தியாவையும் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர்களாக நியமித்துள்ளோம். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த விரும்பிய நேரத்தில், அதன் இயக்குநர் பணிநீக்கம் செய்யப்படுகிறார். உச்ச நீதிமன்றம் தலையிட்டு சி.பி.ஐ. இயக்குநரை மீண்டும் அதே பணியில் நியமிக்கிறது. சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்தவரை அவசரகதியில் நீக்க வேண்டிய அவசியம் என்ன? 

பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மத்திய அரசின் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ஏழை மக்கள் மட்டும்தான், வங்கிகளின் வரிசையில் காத்திருந்தனர். தொழிலதிபர்கள் 
யாராவது வரிசையில் காத்திருந்ததைப் பார்த்தீர்களா? தொழிலதிபர்களுக்காக மட்டுமே அனைவரும் வேலைபார்க்க வேண்டும் என்று இந்த அரசு விரும்புகிறது. 

தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. ஆனால், சிறு வணிகர்கள் கடன் செலுத்தத் தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கிறது. இதன்மூலம் சிறு வணிகர்கள் கடைகளை மூட வேண்டும் என்ற அடிப்படையில் பி.ஜே.பி. அரசு செயல்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியையும் நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி, இந்த மாநிலத்தில் தனக்கான இடத்தைத் தக்கவைக்கும் வகையில், தொடர்ந்து செயலாற்றி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும். 

குஜராத் மாநிலத்திலிருந்து உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளியேற்றப்படுகிறார்கள். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பி.ஜே.பி. செயல்படுகிறது" என்று வரிசையாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ராகுல் காந்தி.