அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

சிறகுகளைப் படபடத்தபடி வந்து இருக்கையில் அமர்ந்த கழுகார், “ம், ஆரம்பிக்கலாம்” என்றார் ராஜதோரணையில்.

“மதுரைக்கு பிரதமர் மோடி வந்து போகும்முன், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே?’’ என்றோம்.

‘‘கூட்டணி விவகாரம் உடனே முடிவுக்கு வராது என்பதுதான், இப்போதைய நிலைமை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்கு வரும்போது, கூட்டணி பற்றி ஏதாவது பேசப்படும் என்றுதான், அ.தி.மு.க., பி.ஜே.பி என இரு கட்சியினரும் எதிர்பார்த்தனர். அது நடப்பதற்கான சூழ்நிலையே அங்கு இல்லை!’’

‘‘ஏன்?’’

‘‘மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியவுடனே, மோடியின் முகத்தில் புன்னகை மாயமாகிவிட்டது. மண்டேலா நகரில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றவர், அங்கும் யாரிடமும் சிரித்துப் பேசவில்லை. பெயருக்கு ஏழு நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார். பிரதமரின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்க்க ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை.”

‘‘ஏதோ வேண்டா வெறுப்பாக விழா நடத்தப்பட்டது போலிருந்ததே!’’

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு விழாக்கள் என்றாலே தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிப்பது மரபு. இங்கு இரண்டுமே இசைக்கப்படவில்லை. சினிமா தியேட்டர்களிலேயே தேசியகீதம் ஒலிக்க வேண்டும், எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும் என்றெல்லாம் கறார் உத்தரவு போட்டவர்கள், அரசு விழாவில், அதிலும் பிரதமர் பங்கேற்ற முக்கிய விழாவிலேயே தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதை எங்குபோய் சொல்ல?’’

‘‘ஒருவேளை, மொத்தமும் படபடப்புடனேயே இருந்ததால் கோட்டைவிட்டிருப்பார்களோ!’’

‘‘அவர்களின் எய்ம்... எய்ம்ஸைவிட கூட்டணிதான். அதுதொடர்பான எந்த விஷயமும் கனிந்துவரவில்லை. கடைசிநேரம் வரையிலும்கூட, அ.தி.மு.க தரப்பிலிருந்து உறுதியான சிக்னல்கள் தரப்படவில்லை. ஒருவேளை அ.தி.மு.க- பி.ஜே.பி கூட்டணி அமையாவிட்டால், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்ததன் பலன், தேர்தலில் யாருக்குப் போகும் என்ற சந்தேகம், இரு கட்சியினருக்குமே உள்ளது. அந்த டென்ஷன்தான் மேற்கண்ட எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறார்கள். அதனால்தான், ஏனோதானோவென்று விழாவை நடத்தியுள்ளனர். தமிழக மருத்துவத்துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லான இவ்விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா வரவில்லை. மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ப்ரீத்தி சுதன் வரவில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் ஏற்றப்படவில்லை.’’

‘‘என்னதான் பிரச்னையாம்?”

‘‘பிரதமர் மோடி மதுரைக்கு வருவதற்கு முன்பாக, கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க-விலிருந்து ‘கிரீன் சிக்னல்’ வருமென்று, பி.ஜே.பி தரப்பில் எதிர்பார்த்தனர். இதற்காகவே கடந்த ஒரு மாதமாக அ.தி.மு.க தரப்புக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தினர். ஆனால், பி.ஜே.பி மேலிடத் தரப்பு நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை.

அ.தி.மு.க-வின் பெரும்பாலான தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பி.ஜே.பி கூட்டணியை விரும்பவில்லை. அதனால்தான், கூட்டணி பற்றி எந்த முடிவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுக்கவில்லை. அதேசமயம் கட்சியில் முழுமையாக ஆளுமை செலுத்தும் முடிவுக்கும் முதல்வர் தரப்பு வந்துவிட்டது என்கிறார்கள்.’’

‘‘வரட்டும் வரட்டும்!’’

‘‘கூட்டணி எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகளின் விருப்பம். எப்போதும் டெல்லி மேலிடம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பேன் என நினைக்க வேண்டாம் என்று கொங்கு பகுதி அமைச்சர்கள் சிலரிடம் காட்டமாகக் கூறிய எடப்பாடி, ‘பெரும்பாலானோர் கூட்டணியை எதிர்க்கிறார்கள்’ என்று சொல்லியே பி.ஜே.பி தரப்புடன் சடுகுடு ஆட்டம் ஆடிப்பார்க்கவும் தயாராகிவிட்டாராம்.’’

‘‘ஏன் இந்தச் சடுகுடு... அவர்தான், டெல்லியின் செல்லப்பிள்ளையாயிற்றே?’’

‘‘ஆனால், இதை எடப்பாடி தரப்பு முழுமையாக நம்பவில்லை. அடிக்கடி எதையாவது செய்து செக் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கண்கொத்திப்பாம்பாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்ற கோபம் அவர்களுக்கு உள்ளது. கொடநாடு விஷயம் தொடங்கி, பல பிரச்னைகளிலும் டெல்லி தரப்பிலிருந்து உறுதியான நம்பிக்கை வழங்கப்படவில்லை என்ற கோபமும் இருக்கிறது. ஆனால், ஓவராக பகைத்துக்கொண்டால், உடனடி ஆபத்து இருக்கிறது. ஓவராக ஒட்டி உறவாடினால், இஷ்டம் போல ஏறி மிதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதையெல்லாம் கணக்குப்போட்டுத்தான், தற்போது சமயம் பார்த்துச் சடுகுடு.’’

‘‘பலே பலே...’’

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

‘‘ஆனால், எடப்பாடி தரப்பு இப்படி ஆட்டம் காட்டும் விஷயத்தைக் கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர் தரப்பிலிருந்து பி.ஜே.பி-க்கு பாஸ் செய்ய... மோடி கடுகடு ஆகிவிட்டார் என்கிறார்கள். அத்துடன், கடந்த தடவை ராணுவத் தளவாடப் பொருள்காட்சிக்கு வந்தபோது காட்டப்பட்டது போலவே இம்முறையும் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமையில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில், மோடி வருகையை எதிர்த்துக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது, ‘கோ பேக் மோடி’ ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கியது போன்றவை மேலும் கடுப்பேற்றிவிட்டதாம்! இதையெல்லாம் முன்கூட்டியே மோப்பம் பிடித்துத் தடுத்திருக்க வேண்டாமா, என்று பி.ஜே.பி தரப்பிலிருந்து தமிழக அரசுத் தரப்பினரைக் கடிந்துகொண்டதாகவும் கேள்வி.’’

‘‘விமான நிலையத்தில்கூட, பிரதமரும் முதல்வரும் இதைப்பற்றிப் பேசிக் கொள்ளவில்லையா?’’

“அமைச்சர்கள் சிலர், எடப்பாடி தரப்பிடம்,  ‘பி.ஜே.பி-யிடம் ரொம்பவும் இறுக்கம் காட்ட வேண்டாம்... கூட்டணிபற்றி பிரதமரிடம் பேசுங்கள்’ என்று கெஞ்சாத குறையாக வலியுறுத்தியுள்ளனர். ஒருவழியாக இறங்கிவந்த எடப்பாடி தரப்பு, கூட்டணி பற்றிப் பேசுவதற்காக, மொழிபெயர்ப்பு உதவிக்கு அமைச்சர் ஜெயக்குமாரை, மதுரை விமான நிலையத்திலேயே இருக்கச் சொல்லியிருக்கிறது. பிளான்படி விமான நிலையத்தில் எடப்பாடி தரப்பு பேச ஆரம்பித்ததும், ‘கூட்டணி குறித்தெல்லாம் அமித் ஷாவிடம் பேசிக் கொள்ளுங்கள்’ என்று முகத்தில் அடித்ததுபோல சொல்லிவிட்டாராம் மோடி.’’

‘‘முதல்வரிடம் மனுவை வாங்கினாரே பிரதமர்?’’

‘‘அது வேறு விஷயம்... தமிழகம் சார்ந்த 16 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மட்டும் கொடுக்க, சற்று தூரத்திலிருந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்-யையும் அழைத்து, இருவரும் சேர்ந்துகொடுக்கச் சொல்லி, மனுவை வாங்கியிருக்கிறார் மோடி. இது, எடப்பாடி தரப்பை டென்ஷனாக்கிவிட்டதாம்.’’

‘‘சரி, கோரிக்கைகளைப் பற்றி என்ன சொன்னாராம் பிரதமர்?”

‘‘இதையேதான், சீனியான அமைச்சர் ஒருவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டிருக்கிறார்; அதற்கு, ‘ஒண்ணும் கிடைக்காது’ என்பதை வேறுமாதிரியான வார்த்தையில், கொஞ்சம் காரமாகவே சொல்லிவிட்டுக் கிளம்பினாராம் எடப்பாடி. கேள்வி கேட்ட அமைச்சர், ரோமங்கள் சிலிர்க்க ஆடிப்போய் நின்றுவிட்டாராம்.’’

மிஸ்டர் கழுகு: கூட்டணி ஜல்லிக்கட்டு... எடப்பாடி சடுகுடு... மோடி கடுகடு!

‘‘மதுரை என்றதும் நினைவுக்கு வருகிறது... ஜனவரி 30-ல் வழக்கம்போல விசேஷம் இருக்கிறதா?’’

‘‘மு.க.அழகிரியின் பிறந்தநாளைப் பற்றிக் கேட்கிறீர். தன் தந்தையின் மறைவு காரணமாக, இந்த ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடப்போவதில்லையாம். ஒருகாலத்தில் மதுரையே குலுங்கியதெல்லாம் உண்டு. இப்போது, தி.மு.க-வில் அவர் சாதாரண உறுப்பினர்கூட கிடையாது. அதேசமயம், ‘அழகிரியின் பிப்ரவரி புரட்சி’ என்பதை முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் அவரின் ஆதரவாளர்கள். அநேகமாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், ‘கலைஞர் தி.மு.க’ என்கிற பெயரில் கருணாநிதியின் சமாதியில் வைத்துப் புதுக்கட்சி ஆரம்பிப்பது அழகிரியின் திட்டமாம்!’’

‘‘கூட்டம் கூடுமா?’’

‘‘தேர்தல் நேரத்தில் ஸ்டாலினின் அதிருப்தியாளர்கள் வரலாம். தி.மு.க முகாமில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஸ்ரீபெரும்புதூருக்கு டி.ஆர்.பாலு, வேலூருக்கு துரைமுருகனின் மகன், விழுப்புரத்துக்கு பொன்முடியின் மகன், தஞ்சைக்கு பழனிமாணிக்கம், நீலகிரிக்கு ஆ.ராசா... இப்படி சிலரின் பெயர்கள் அடிபடுகின்றன. ‘அவர்களுக்கே தொடர்ந்து பதவிகளை வழங்கினால், நாங்கள் எத்தனை வருடங்களுக்கு டம்மியாக இருக்கமுடியும்?’ என்று ஒருதரப்பு முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டதாம். ‘இந்த அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு முடிவு கட்டுவேன்’ என்று சொல்லியிருக்கிறாராம் அழகிரி!’’ என்ற கழுகார்,

‘‘அநேகமாக இந்த வாரத்தில், தமிழகத்தில் முக்கியமான சில இடங்களில், வருமானவரித் துறையின் ரெய்டு நடக்கலாம்!’’ என்று சொல்லிவிட்டு, சிறகுகளை விரித்தார்.

அட்டை: வீ.சதீஷ்குமார்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

திருத்தம்
27
.1.19 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘கனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐ.ஏ.எஸ்-கள்!’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், அந்த கட்டுரைக்குத் தொடர்பில்லாத கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுவிட்டன. தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்