Published:Updated:

`கோவை, கன்னியாகுமரிக்கு நாங்கள் கியாரண்டி!'  - பா.ஜ.க மேலிடத்துக்கு உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

கூட்டணி இல்லாமல் செல்வதுதான் நல்லது. ஆனால், கூட்டணி வேண்டும் என்று பா.ஜ.க ஸ்டேட் கமிட்டித் தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

`கோவை, கன்னியாகுமரிக்கு நாங்கள் கியாரண்டி!'  - பா.ஜ.க மேலிடத்துக்கு உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி
`கோவை, கன்னியாகுமரிக்கு நாங்கள் கியாரண்டி!'  - பா.ஜ.க மேலிடத்துக்கு உறுதி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

`உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு 3,00,000 கோடிக்கான முதலீடுகள் வர உள்ளது' எனப் பெருமைப்பட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், `பா.ஜ.க-வுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் முடிவாகவில்லை. கூட்டணி வேண்டாம் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் பணியில் ஆளும் பா.ஜ.க அரசும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அணி உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், ` வாஜ்பாய் பாணியில் தமிழகத்தில் கூட்டணி அமைப்போம். பழைய நண்பர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்' என அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த அறிவிப்புக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அவர் வெளியிட்ட அறிக்கையில், `பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் அல்ல - அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல' எனக் கூறியிருந்தார். 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை தமிழிசையும் பொன்னாரும் அடுத்தடுத்த நாள்களில் நேரில் சந்தித்துப் பேசினர். இதனால் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி உருவாவது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதை ரசிக்காத தம்பிதுரை, `பா.ஜ.க-வைத் தோளில் தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்திருக்கிறோம்?' என்றார். இந்தப் பேச்சு பா.ஜ.க வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. `கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தம்பிதுரைக்கு வழங்கப்பட்டுள்ளதா?' எனக் கேள்வி எழுப்பினார் பொன்னார். 

அதேநேரம், அ.தி.மு.க அமைச்சர்களும் பா.ஜ.க குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மதுரையில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, `பி.ஜே.பி-யுடன் இணக்கமாக இருந்ததால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்தோம். இனி, ஜெயலலிதா பாணியில் பி.ஜே.பி-யுடன் ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம். அதனால் எந்த மதவாதச் சக்திகளுடனும் கூட்டணி இல்லை’ என்றார். 

`இன்னும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி முடிவாகவில்லை. நாங்கள் எங்கள் கருத்தைப் பேசி வருகிறோம். அவர்கள் கருத்தை, அவரவர் பேசி வருகிறார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரும் பேசி வருகிறார்கள். குறிப்பாக, தம்பிதுரை தொடர்ந்து மூன்று மாதமாக பி.ஜே.பி-க்கு எதிராகப் பேசி வருகிறார். சில விஷயங்களை சிலர் எதிர்மறையாகப் பேசி வருகின்றனர். அதற்கு, நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிகாரபூர்வமாகக் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும்போது அதுபற்றித் தெரியவரும்' எனப் பொறுமையாகப் பதில் அளித்தார் தமிழிசை. 

இந்த நிலையில், முதலீட்டாளர் மாநாட்டுக்காக சென்னை வந்த மத்திய அமைச்சர் ஒருவரிடம் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சந்திப்பின்போது, `கூட்டணி இல்லாமல் செல்வதுதான் நல்லது. கூட்டணி வேண்டும் என்று பா.ஜ.க ஸ்டேட் கமிட்டித் தலைவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி போல உங்களுடன்தான் வருவோம். எங்களுடைய எதிரியான ஸ்டாலின் இருக்கக் கூடிய அணி பக்கம் செல்ல மாட்டோம். பா.ஜ.க அரசின் மீது எங்கள் எம்.பி-க்களுக்கு கோபம் உள்ளது. தொகுதிப் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் பா.ஜ.க தான் என நினைக்கின்றனர். சிறுபான்மை வாக்குகளும் இந்த அணிக்கு வந்து சேரப் போவதில்லை. கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திப்போம். 

ஒரு சில தொகுதிகளில் உங்கள் வாக்குகள் எங்களுக்கு வந்து சேரட்டும். கோவை, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் எங்கள் கட்சியின் சார்பில் சாதாரண வேட்பாளரைப் போட்டு உங்கள் வெற்றிக்காகப் பாடுபடுகிறோம். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிதான் சரியாக இருக்கும்' எனக் கூறியிருக்கிறார். அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டார் அந்த மத்திய அமைச்சர். 

இதே கருத்தில் மத்திய அமைச்சர்கள் சிலரும் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக பா.ஜ.க மேலிடத்தில் பேசிய அவர்கள், `அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.பி-க்கள் என அனைவரும் நமக்கு எதிராகப் பேசி வருகின்றனர். இந்தக் கூட்டணி அமைந்தாலும் அது உருப்படப் போவதில்லை. `40 தொகுதிகளிலும் தோற்றுப் போகும்' என தம்பிதுரை சொல்கிறார். `2004 ரிசல்ட் தான் இந்தக் கூட்டணிக்கு வரும்' என பொன்னையன் சொல்கிறார்.

`நோட்டாவுக்கும் கீழே உள்ள கட்சி' என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சிக்கிறார். அ.தி.மு.க எம்.பி-க்கள் அனைவரும் நமக்கு எதிராகப் பேசுகின்றனர். இப்படிப் பேசுகிறவர்களுடன் கூட்டணி வைத்தால் அது தி.மு.க அணிக்குத்தான் சாதகமாகப் போகும். தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர், எப்படியாவது இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என நினைக்கின்றனர். 40 தொகுதிகளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குப் போகும் அளவுக்கு நாம் சான்ஸ் எடுக்கக் கூடாது' என விவரித்துள்ளனர். 

`இதே மனஓட்டத்தில்தான் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக வட்டாரத்தில்.