Published:Updated:

மொழிப்போர் தொடங்கியது எதற்கு? - மொழிப்போர் தியாகிகள் தின சிறப்புப் பகிர்வு!

அந்நாளில் கல்வி என்பதே கேள்வியாக இருந்த நிலையில் பிறமொழிக் கல்வியும், அதைப் போதிக்கச் சரியான ஆசிரியர் இல்லா நிலையும், இரண்டாம் பட்சமாக்கப்பட்ட தாய்மொழிக் கல்வியும் மக்களை வெகுண்டெழச் செய்தது.

மொழிப்போர் தொடங்கியது எதற்கு? - மொழிப்போர் தியாகிகள் தின சிறப்புப் பகிர்வு!
மொழிப்போர் தொடங்கியது எதற்கு? - மொழிப்போர் தியாகிகள் தின சிறப்புப் பகிர்வு!

நீங்களோ... நானோ, ஒரு 10 நாள்கள் தமிழ் மொழி பேசாத ஒரு நகரத்தினுள் விடப் படுவதாக வைத்துக்கொள்வோம். நமக்கோ, தமிழ் -ஆங்கிலம் தவிர்த்து ஏதும் தெரியாது. அங்கு இருப்பவர்களுக்கோ தமிழும் ஆங்கிலமும் தெரியாது. இந்த நிலையில், நீங்கள் அந்த நகரத்தில்தான் 10 நாள்களைக் கழிக்க வேண்டுமெனில், உங்களின் மனநிலை எப்படித் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, இன்று நடக்கும் அரசுப் பணித் தேர்வில் நீங்கள் இந்தியில்தான் தேர்வெழுத வேண்டுமெனில், நீங்களோ... நானோ என்ன செய்திருப்போம்? வெறும் 10 நாள்களுக்கு மட்டுமல்ல, இனிவரும் நாளையெல்லாம் இந்தி மொழியோடுதான் கழிக்க வேண்டும் என்று திணிக்கப்பட்டபோது, `பள்ளிப்படிப்பில் இனி, உங்களின் தாய் மொழி கூடாது; இந்தி மட்டுமே' என்று சொன்னபோது, இந்தி பேசாத அனைத்து இந்தியரும், ஒருகணம் இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகவே நினைத்தனர். இந்தப் போராட்டமே ஜனவரி 25-ம் நாள் நினைவுகூரப்படும் மொழிப்போர் தியாகிகள் தினம்

இதற்கான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பெருமை தமிழினத்தையே சாரும். விடுதலைப் போராட்டத்துக்கு முன்னரே தொடங்கிய இந்த மொழிப்போர், விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்த, கிட்டத்தட்ட 20 வருடகாலத்தில் இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்துக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே கருதப்பட்டது.

பன்முகத்தன்மையை இயல்பாகவே கொண்ட இந்தியர் அனைவரின் குரலும் அரசவையில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்தியா மக்களாட்சியை ஏற்றுக்கொண்டதற்கு முக்கியக் காரணம் ஆகும். அப்படித் தொடங்கியதுதான் இந்த மொழிப்போரும்.
இது, ஓர் உரிமைப் போராக மட்டுமல்ல... தங்கள் தாய்மொழியான தமிழை, ஒருவேளை இழப்போமெனில், சொந்த நாட்டிலே அந்நியமாக்கப்படுவோம் என்னும் பயத்தில் நிகழ்ந்த வாழ்வைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டம்தான் இந்த மொழிப்போரும்.
ஓர் இனத்தின் மொழி அழிக்கப்படுமானால், நாளடைவில் அந்த இனமும் அழிந்துவிடும் என்பதை வரலாற்றுச் சான்று மெய்ப்பித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஆம், அதற்கு எதிராகத் தொடங்கியதுதான் இந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப்போர்! எங்கே தொடங்கியது இந்தப் போர்?

முன்னர் சொன்னது போன்ற இந்தியாவின் பன்முகத்தன்மை ஆட்சிக்கு இந்தித் திணிப்பு மொழிப்போர் என்பது மிகப்பெரும் சவாலே. அதை இந்தியா (இந்தியன்) என்னும் உணர்வைக் கொண்டே இந்திய விடுதலைப் போராட்டம் வரலாற்றில் அரங்கேற்றியது. ஆனால், இந்தியா என்னும் உணர்வில் ஒன்றுபட்ட இந்தியர்கள், மொழி என்னும் உணர்வினால் பிரிந்து போய்விடுவார்களோ என்னும் நோக்கில் இந்தியை ஆட்சி மொழியாக்கத் திட்டமிட்டார்கள். இந்நிலையில், அப்போதைய மதராஸ் மாகாணத் தலைவர் ராஜகோபாலாச்சாரி, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கினார். அந்நாளில் கல்வி என்பதே கேள்வியாக இருந்த நிலையில் பிறமொழிக் கல்வியும், அதைப் போதிக்கச் சரியான ஆசிரியர் இல்லா நிலையும், இரண்டாம் பட்சமாக்கப்பட்ட தாய்மொழிக் கல்வியும் மக்களை வெகுண்டெழச் செய்தது. தான் உயிர் இழப்பினும், தன் எதிர்காலச் சந்ததியினராவது தமிழோடு வாழட்டும் என்று மாண்டனர், மொழிப்போர் தியாகிகள் நடராஜனும், தாளமுத்துவும். போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டுமெனில், மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைக்கு மறுத்து, சிறையிலே வாழ்வைத் துறந்தனர்.

இந்திய விடுதலைக்கு முன்னரே, 1940-களில் தொடங்கிய இந்தப் போரை 1950-லிருந்து 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் அலுவல் மொழியாக்கப்படும் என்ற நேருவின் வாக்கு சற்றுத் தள்ளிப்போட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆம், இந்தி மொழி பேசா பிற பிராந்திய மக்கள் அனுமதிக்கும்வரை, இந்தி ஆட்சி மொழியாக்கப்படாது என்னும் வார்த்தை இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 15 ஆண்டுக்காலக் கெடுவும் கொடுக்கப்பட்டது.

15 ஆண்டுகள் முடிந்த நிலையில், 1965-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்த, நேருவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பணியில் அமர்ந்த லால் பகதூர் சாஸ்திரி இந்தியை ஆட்சி மொழியாக்கச் சட்டம் இயற்ற, மீண்டும் மொழிப்போர் ஆரம்பமானது. இதை, அப்போது மதராஸ் மாகாண முதல்வர் பக்தவத்சலமும் ஆதரிக்கத் தமிழக இளைஞர்கள் கொதித்துப் போனார்கள். வீறுகொண்டு எழுந்தனர். 

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என எல்லோரும் ஒருசேரப் போராட ஆரம்பித்தனர். இதை வெறும் கொந்தளிப்பாகக் கண்ட காங்கிரஸ் ஆட்சி, இந்த இளைஞர்களை ஒடுக்கக் காவல் படையையும், `அது போதவில்லை' என்று ராணுவப் படையையும் கொண்டுவர சூடுகண்டது, போராட்டக்களம். இதைச் சரியாக எதிர்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் போராட்டத்தில் களம்காண, அதன் தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைவர்கள் மட்டுமல்ல, மாணவர்கள் பலரும் அரசியல் கட்சிகளைச் சாரா பொதுமக்கள் பலரும் சிறை செல்லத் துணிந்தனர். 50 நாள்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல தபால் நிலையங்கள், ரயில் பெட்டிகள் சூறையாடப்பட்டன. கிட்டத்தட்ட 400 பேர் உயிர்ப்பலி அடைந்தனர். 2,000 பேர் காயப்படுத்தப்பட்டனர். இப்படியாகத் தொடர்ந்த போர், உச்ச நிலையை எட்டியதாலும் பெரும் சேதத்தைத் தவிர்க்கும் வகையிலும் மொழிப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி, இந்தியுடன் ஆங்கிலமும் தற்போதுவரை அலுவல் மொழியாக நீடித்துவருகிறது. 

இந்திய வரலாற்றிலும், தமிழக அரசியல் சகாப்தத்திலும் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த இந்த மொழிப்போர்தான் காங்கிரஸ் என்னும் சொல்லைத் தமிழக அரசியலிலிருந்து நீக்கியது. அந்த மொழிப்போரே, திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக்கால ஆட்சிக்கு அடித்தளமிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது, ஒரு மொழியின் மீதான காழ்ப்புஉணர்வினால் ஏற்பட்ட போராட்டமல்ல... திணிக்கப்பட்ட மொழியின் மீதான எதிர்ப்புஉணர்வு மட்டுமே! இது மொழிவெறி போராட்டமல்ல... தாய்மொழியை விட்டுக்கொடுக்க முடியா உரிமை வாழ்வுக்கான போராட்டம் மட்டுமே!