Published:Updated:

குப்பை கிடங்கை இடம் மாற்றக்கோரி 2 லட்சம் பேரிடம் கையெழுத்து

குப்பை கிடங்கை இடம் மாற்றக்கோரி 2 லட்சம் பேரிடம் கையெழுத்து
குப்பை கிடங்கை இடம் மாற்றக்கோரி 2 லட்சம் பேரிடம் கையெழுத்து

கோவை : கோவையை அடுத்த வெள்ளலூரில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கை இடம் மாற்றக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கையெழுத்து இயக்கத்தை நேற்று துவக்கினர். 2 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு அவற்றை தமிழக அரசுக்கு அனுப்ப வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கோவையை அடுத்த வெள்ளலூரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மாநகரட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மற்றும் மாசடைந்த காற்று போன்றவற்றின் காரணமாக வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த குப்பை கிடங்கின் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஈ, கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

##~~##
மாநகராட்சி குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் ஓரு பகுதியாக குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கையெழுத்து இயக்கத்தினை துவங்கியுள்ளனர். கோணவாய்க்கால்பாளையம், வெள்ளலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குப்பை கிடங்குக்கு எதிராக கையெழுத்துகளை பெற்று வருகின்றனர்.
குப்பை கிடங்கால் பாதிக்கப்படும் பொதுமக்கள் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அதை தமிழக முதல்வருக்கும், அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் அனுப்ப இருப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். முதல் நாளான இன்று அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்யக்கோரி கையெழுத்திட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுவதால் இப்பகுதிகளில் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ச.ஜெ.ரவி