Published:Updated:

“நீங்கள் மக்களவையின் சபாநாயகர் என்பதை மறக்க வேண்டாம்” - சர்ச்சையில் சுமித்ரா மகாஜன்!

“நீங்கள் மக்களவையின் சபாநாயகர் என்பதை மறக்க வேண்டாம்” - சர்ச்சையில் சுமித்ரா மகாஜன்!
“நீங்கள் மக்களவையின் சபாநாயகர் என்பதை மறக்க வேண்டாம்” - சர்ச்சையில் சுமித்ரா மகாஜன்!

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியை விமர்சித்துப் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

கடந்த 23-ம் தேதி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு முக்கியமான நாளாக அமைந்தது. அன்றுதான், பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் அதிகாரபூர்வமாக நிகழ்ந்தது. அவருக்கு, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளார் ராகுல் காந்தி. அந்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகம், பிரியங்காவை வரவேற்க புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. “உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் இனி மாயாஜாலம் நிகழ்த்தும்” என்று காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், “வாரிசு அரசியல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். இப்போது இன்னொரு காந்தியை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்” என்று பி.ஜே.பி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பிரியங்கா நியமனம் குறித்துப் பேசிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ``தன்னால் தனியாக அரசியல் செய்ய முடியாது என்பதை ராகுல் உணர்ந்துவிட்டார். அதற்காகவே, சகோதரி பிரியங்காவை உதவிக்கு அழைத்து வந்திருக்கிறார்” என்று விமர்சித்தார். இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. 

“அரசியல் பேசுவது மக்களவை சபாநாயகருக்கு அழகல்ல” என்று, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். “சுமித்ரா மகாஜன் மக்களவையின் சபாநாயகர். அவர் பாரபட்சம் பார்க்காதவராகவும் அரசியல் சார்பற்றவாராகவும் இருக்க வேண்டும் என்பதையே மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் கருத்துகளை வெளியிடுவது, அவர் மீது தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கும்” என்று அவர் கூறியுள்ளார். 

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவும், சுமித்ரா மகாஜனை சாடியுள்ளார். “மேடம்... நீங்கள் மக்களவையின் சபாநாயகர் என்பதை மறக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.