Published:Updated:

முடிந்து போனதா கிரானைட் நாடகம்?-மினி தொடர்: பாகம் - 6

முடிந்து போனதா கிரானைட் நாடகம்?-மினி தொடர்: பாகம் - 6
முடிந்து போனதா கிரானைட் நாடகம்?-மினி தொடர்: பாகம் - 6

- கே.கே.மகேஷ்

படங்கள்: 
எஸ்.கிருஷ்ணமூர்த்தி & பா. காளிமுத்து
 

 

ல ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் வளங்களை கொள்ளையடித்த பி.ஆர்.பி.யை போலீஸார் கைது செய்தார்கள். அவர்கள் மீது சுமார் 40 வழக்குகளைப் பதிவு செய்தார்கள்.குவாரி செயல்பாடுகளை முடக்கினார்கள். கம்பெனிக்கு சீல் வைத்தார்கள்.

முடிந்து போனதா கிரானைட் நாடகம்?-மினி தொடர்: பாகம் - 6

எல்லாம் சரி...அரசின் இந்த நடவடிக்கையால் அந்தப் பகுதி மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன? தங்களிடம் இருந்து அடித்துப் பிடுங்கப்பட்ட விவசாய நிலங்கள் திரும்பக் கிடைக்கும், நீர்நிலைகள் மீள் உருவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்த்தார்கள் விவசாயிகள். ஆனால் இதுவரையில் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எதுவுமே தொடங்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை
   
விவசாய நிலங்கள்

பூமிக்கடியில் எங்கெல்லாம் கிரானைட் இருக்கிறது என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் அடிமாட்டு விலைக்கு இடங்களை வாங்கிப் போடுவது பி.ஆர்.பி. நிறுவனத்தின் வழக்கம். கொடுக்க மறுத்தால், மிரட்டப்படுவார்கள். அதற்கும் அடிபணியவில்லை என்றால், அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களை எல்லாம் வாங்கி, மொத்தப் பாதையையும் அடைத்து, இடம் தரம் மறுத்தவரின் நிலத்தை தனித்தீவு போல ஆக்கிவிடுவார்கள். கடைசியில் அவர்கள் தங்கள் நிலத்தை ஆண்டு அனுபவிக்கவும் முடியாது, பி.ஆர்.பி.யைத் தவிர வேறு யாருக்கும் விற்கவும் முடியாது என்கிற நிலை வரும். இன்னும் சில இடங்களை உரிமையாளர்களுக்கே தெரியாமல், போலி பட்டா, பத்திரம் தயாரித்து ஆக்கிரமித்துவிடுவதும் இவர்களது ஸ்டைல்.

இப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் அப்போதே, போலீஸில் புகார் செய்தார்கள். ஆனால் பி.ஆர்.பி.யின் 'அன்புக்குக்' கட்டுப்பட்வர்களாயிற்றே போலீஸார். எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? குவாரியில் கிளம்பும் புழுதி போல, பி.ஆர்.பி. மீதான புகார்களும். எழுவதும், அமுங்கிப் போவதும் சகஜம்.

போலி பட்டா


முடிந்து போனதா கிரானைட் நாடகம்?-மினி தொடர்: பாகம் - 6

ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமோகூர் அருகே உள்ள பூலாம்பட்டியில், 2 ஏக்கர் நிலம் அபகரிப்புப் புகாரில், துணிச்சலாக பி.ஆர்.பி.யின் மகன் சுரேஷ்குமார் மீதே வழக்குப் பதிவு செய்தார் எஸ்.பி. ஆஸ்ரா கர்க்.

அந்த நிலத்திற்குச் சொந்தக்காரரான இலங்கிப்பட்டியைச் சேர்ந்த ராஜனிடம் பேசினோம். "மேலூர் தாலுகாவில் பெரும்பாலான இடங்களை வாங்கிவிட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தினர், அவர்களது பூலாம்பட்டி குவாரி பக்கத்தில் இருக்கும் 2.20 ஏக்கர் பரப்புள்ள எங்கள் நிலத்தையும் கேட்டார்கள். அது எங்கள் பாட்டி வீரம்மாளின் பெயரில் உள்ள பூர்வீகச் சொத்து என்பதால் கொடுக்க மறுத்துவிட்டோம். தர மறுப்பவர்களின் இடங்களை அபகரித்துக் கொடுப்பதற்கென்றே அவர்களிடம் நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள்.அந்த நபர்கள், 1969 லேயே இறந்து போன எங்கள் பாட்டி வீரம்மாளே உயிரோடு வந்து நிலத்தை விற்பது போல போலி ஆவணங்களைத் தயாரித்து 2004ல் 'பி.ஆர்.பி.' பழனிச்சாமியின் மகன் சுரேஷ்குமார் பெயரில் நிலத்தைப் பதிவு செய்துவிட்டார்கள்.

வங்கிக் கடன் வாங்குவதற்காக நிலத்தின் வில்லங்கச் சான்று பெற்றபோதுதான் இந்த விஷயமே எங்களுக்குத் தெரியும். யார் விற்றார்கள் என்று கேட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒருவர் கூட வாய்திறக்கவில்லை. கடைசியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களைப் பெற்றோம். வி.ஏ.ஓ., தாசில்தார் கையெழுத்துக்களைப் போலியாகப் போட்டு, போலி பட்டா தயாரித்து, என் சகோதரிகளில் ஒருவரான ஜானகியின் போட்டோவை ஒட்டி நிலத்தை மோசடி செய்திருப்பது புரிந்தது. தாசில்தாரிடம் கேட்டால், இந்தப் பட்டாவை நாங்கள் கொடுக்கவே இல்லை என்றார். இதுதொடர்பாக 2005ல் முதல் தொடர்ந்து போலீஸில் புகார் செய்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியாக 2012ல் எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தான் வழக்குப் பதிந்து நிலப் புரோக்கர்கள் 4 பேரை கைது செய்தார்" என்றார்.

சந்தேக மரணம்


கீழையூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கலெக்டரிடம் கொடுத்த புகாரில், ''எங்க நிலத்துக்குப் பக்கத்துல பி.ஆர்.பி. குவாரி இருந்துச்சி. எங்க இடத்தையும் வாங்கிட்டா சுற்று வட்டாரம் முழுக்க அவங்க ராஜாங்கமா இருக்கும்னு நினைச்சாங்க. அது பூர்வீகமா நாங்க விவசாயம் பண்ற இடங்கிறதாலும், அதில் எங்களோட முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்ததாலும் அதைக் கொடுக்க மறுத்துட்டோம். அந்தக் கோபத்துல இன்னொரு சொத்து விவகாரத்தில் எங்களுக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
   
 

முடிந்து போனதா கிரானைட் நாடகம்?-மினி தொடர்: பாகம் - 6
##~~##

இந்தப் பிரச்னைக்கு நடுவுல பி.ஆர்.பி. குவாரியில வேலை பார்த்துக்கிட்டு இருந்த என்னோட தம்பி கிருஷ்ணன் போன வருஷம் மே 5ம் தேதி திடீர்னு செத்துப் போயிட்டான். கேட்டா 'ஹார்ட் அட்டாக்'குன்னு சொல்லிட்டாங்க. அவசர அவசரமாக போஸ்ட்மார்ட்டம் செய்ய வெச்சி, பாடியை அனுப்பிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்தச் சாவுல எங்களுக்கு சந்தேகம் இருக்கு" என்று கூறப்பட்டிருந்தது.

இப்படி நூற்றுக்கணக்கான விவசாயிகளின் புகார்கள் லோக்கல் போலீஸ் நிலையம், தாலுகா அலுவலகம் தொடங்கி எஸ்.பி. ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ் வரை தேங்கிக் கிடக்கின்றன. ஆனால் இதுவரையில் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய நிலத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு மீட்டுக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

இதுபற்றி கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் கேட்டபோது, "எங்களுக்கு வந்த புகார்களிடம் அடிப்படையில் பார்த்தால், மொத்தம் 900 ஏக்கர் விவசாய நிலங்களை பி.ஆர்.பி. நிறுவத்தினர் அபகரித்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. முதலில் பி.ஆர்.பி. நிறுவனம் கற்களை வெட்டி எடுப்பதை நிறுத்தினோம். பிறகு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். அடுத்த கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட கற்களை ஏலம் விட இருக்கிறோம். அதன் பிறகு கண்டிப்பாக விவசாய நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

 

முடிந்து போனதா கிரானைட் நாடகம்?-மினி தொடர்: பாகம் - 6

ஆனால், நாங்கள் மீட்டுக் கொடுத்தாலும் அந்த இடத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா? என்பது சந்தேகமே. காரணம், பெரும்பாலான விவசாய நிலங்கள் குவாரிகளாகிவிட்டன. எஞ்சிய இடங்களும் சீர்படுத்தவே முடியாத அளவுக்கு சிதைந்து போய்க்கிடக்கிறது. இருந்தாலும், இயன்ற வரையில் விவசாயிகளின் இடத்தை மீட்டுக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.

விவசாய நிலத்தை இழந்தவர்களில் பலர் பி.ஆர்.பி.யின் சொந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் கதியே இப்படியென்றால்... தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்றே ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் கதி என்னவாகி இருக்கும்? நாளை பார்க்கலாம்...