Published:Updated:

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது `அரசு முடக்கம்’ - ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது `அரசு முடக்கம்’ -  ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது `அரசு முடக்கம்’ - ட்ரம்ப் அறிவிப்பு

35 நாள்களாக அமெரிக்க அரசாங்கத்தை முடக்கி வைத்திருந்த ‘அரசு முடக்கம் ’ விலக்கப்படுவதாக அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது `அரசு முடக்கம்’ -  ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதை கனவாகக் கொண்டுள்ளார் ட்ரம்ப். அதன் மூலம், “சட்டவிரோத குடியேறிகள் வருவதைத் தடுத்து குற்றங்களைத் தடுப்பேன்” என்று பேசி வருகிறார். அதற்காக, `5.7 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க வேண்டும்’ என்று, காங்கிரஸ் மற்றும் செனட் சபையிடம் கோரிக்கை விடுத்தார். ``நீங்களும் காசு போட வேண்டும்” என்று, மெக்சிகோ அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுத்தார். ஆனால், ``அந்தச் சுவர் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்” என்று கூறி, காங்கிரஸ் மற்றும் செனட் சபை தலைவர்கள் நிதி ஒதுக்க மறுத்துவிட்டனர். மெக்சிகோவும், “இது உங்களின் உள்நாட்டுப் பிரச்னை” என்று கைவிரித்துவிட்டது. ஆனாலும், ‘சுவர் கட்டியே தீருவேன்’ என்று அடம்பிடித்த ட்ரம்ப், அமெரிக்க அரசாங்கத்துக்குப் பூட்டுபோட்டார். அதாவது, `அரசு முடக்கம்’ செய்தார். இதனால், ஊதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்களும் அரசு சேவைகளைப் பெற முடியாமல் குடிமக்களும் அவதிப்பட்டனர். ஆனாலும், ட்ரம்ப் அவரது முடிவில் உறுதியாக இருந்தார். ‘பணத்தைக் கொடுங்கள்... அரசு முடக்கத்தை திரும்பப் பெறுகிறேன்” என்று விடாப்பிடியாக நின்றார். 

இப்போது 35 நாள்களுக்குப் பிறகு, கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார் ட்ரம்ப். காங்கிரஸ், செனட் சபை தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், அரசு முடக்கத்தைத் திரும்பப் பெற, ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளார். 

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது `அரசு முடக்கம்’ -  ட்ரம்ப் அறிவிப்பு

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், “நாங்கள் நல்ல உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம். அதனால், அரசு முடக்கத்தைத் திரும்பப் பெறுகிறேன். அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியப் பணம் விரைவில் வந்துசேரும்” என்று அறிவித்தார். 

ஆனால், இது தற்காலிகமானதுதான். ``சுவர் கட்ட நிதி வழங்கவில்லை என்றால், பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு, மீண்டும் அரசை முடக்குவேன் அல்லது எனது அதிகாரங்களைப் பயன்படுத்தி அவசர நிலையை அறிவிப்பேன்” என்றும் எச்சரித்திருக்கிறார் ட்ரம்ப். “நமக்கு வேறு வழியில்லை. அந்தச் சுவர் மிக அவசியம் அமெரிக்காவுக்கு” என்று சொல்லி பேட்டியை முடித்திருக்கிறார். 

ஆக, தற்காலிகமாக மட்டுமே தப்பித்திருக்கிறது அமெரிக்கா.