Published:Updated:

`சர்ச்சை வளையத்தில் ஜெயலலிதா சொத்துகள்?’ நினைவு இல்ல முட்டுக்கட்டை!

ஜெயலலிதா தன்னுடைய சொத்துகளுக்கான வாரிசுகளை அறிவிக்காத நிலையில், போயஸ் கார்டன் நினைவு இல்லமாக மாற்றப்பட்டால், வாரிசுகளுக்குச் சென்று சேர வேண்டியத் தொகை யாருக்குச் செல்லும்? அதேபோல், மர்மங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிற கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட மற்ற சொத்துகள் யார் கைகளுக்குச் சென்று சேரும் என்பதுதான் பலருடைய கேள்விகளாக இருக்கின்றன.

`சர்ச்சை வளையத்தில் ஜெயலலிதா சொத்துகள்?’ நினைவு இல்ல முட்டுக்கட்டை!
`சர்ச்சை வளையத்தில் ஜெயலலிதா சொத்துகள்?’ நினைவு இல்ல முட்டுக்கட்டை!

மிழக அரசியலின் கூட்டணிகளையும் தேர்தல் வெற்றிகளையும் தீர்மானிக்கும் இடமாக, கால் நூற்றாண்டுக்கும் மேலாகக்  காட்சியளித்து வந்த இடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடான, போயஸ் கார்டன். இன்று அந்த இடம்தான் அனைவரும் உச்சரிக்கும் செய்தியாக மாறியிருக்கிறது. குறிப்பாக, ஒருபுறம் அந்தச் சொத்துக்கு வாரிசு உரிமைகோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் போராடி வருகின்றனர். மற்றொரு புறம், சசிகலாவின் சொந்தக்காரர்கள் மறைமுகமான சதிவேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள். இந்த நிலையில், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்புள்ளது எனச் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூ புதிய சர்ச்சையை உருவாக்கினார். இந்தச் சூழலில், வருமானவரி பாக்கியுள்ளதால் போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட 16.75 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர்.

ஏற்கெனவே சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி என்பவர், ``எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருவதைப்போல, ஜெயலலிதாவின் சொத்துகளையும் நிர்வகிக்க ஒருவரை நிர்ணயிக்க வேண்டும்" எனச் சென்னை கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்யப்பட்ட சொத்துகளா அல்லது சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துகளா? எந்தச் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்? ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் சொத்துகள் உள்ளதா?" என வருமானவரித் துறையினரிடம் கேள்வி எழுப்பினர். மேலும், ஏற்கெனவே ஜெயலலிதாவின் சொத்துகளுக்கான வாரிசு உரிமைகளைக் கூறி தீபா, தீபக் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்துள்ளதால், அவர்களின் தரப்பில் பதில்பெற வேண்டும் எனவும் சொல்லி இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது. அதனடிப்படையில், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்றும் பணியைத் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தொடங்கின. ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படுவதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், “ஜெயலலிதா ஏற்கெனவே சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்தவர். அவருக்கு அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து நினைவு இல்லம் அமைப்பது என்பது அரசின் பணத்தை வீணாக்கும் செயலாகும்” என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு வருமானவரி தாக்கல் செய்யாமல் ஏதேனும் இருக்கின்றனவா என வருமான வரித் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக வருமானவரித்துறை துணை ஆணையர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், “கடந்த 1990-91 நிதியாண்டு முதல் 2011-12 நிதியாண்டு வரை செல்வ வரியாகக் 10.12 கோடி ரூபாயும், 2005-06 நிதியாண்டு முதல் 2011-12 வரை வருமானவரியாகக் 6.67 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது. இதைச் செலுத்திவிட்டால் நினைவு இல்லம் அமைப்பதில் எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ``ஜெயலலிதாவின் வீடுகள் நினைவு இல்லமாக மாற்றப்படும்போது சொத்துகளுக்கு வழங்கும் தொகை வாரிசுகளுக்கு அளிக்கப்படும். அதன்மூலம் வருமானவரியைச் செலுத்தலாம்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள டிராஃபிக் ராமசாமி, “சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி, சிறைச் சென்றவருக்கு எப்படி அரசின் செலவில் நினைவு இல்லம் அமைக்க முடியும்? இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றை எதிர்த்துதான், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். ஜெயலலிதா செய்த வரி ஏய்ப்புகளைப் பற்றி ஆராயத்தான் நீதிமன்றம் வருமானவரித் துறையினரிடம் கருத்து கேட்டுள்ளது. இந்த வழக்கு, அடுத்த மாதம் 13-ம் தேதிக்குள் மீண்டும் நீதிமன்றத்துக்கு வரவுள்ளது. ஒருபோதும் நினைவு இல்லம் அமைக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

ஜெயலலிதா தன்னுடைய சொத்துகளுக்கான வாரிசுகளை அறிவிக்காத நிலையில், போயஸ் கார்டன் நினைவு இல்லமாக மாற்றப்பட்டால், வாரிசுகளுக்குச் சென்று சேர வேண்டியத் தொகை யாருக்குச் செல்லும்? அதேபோல், மர்மங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிற கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட மற்ற சொத்துகள் யார் கைகளுக்குச் சென்று சேரும் என்பதுதான் பலருடைய கேள்விகளாக இருக்கின்றன.