Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

டி.சி. இமானுவேல், மயிலாடுதுறை.
‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறிவருகிறாரே. இந்தப் பகல் கனவு எப்போது கலையும்?


அவரிடம் மாற்றம் வந்தால்!

@காட்டாவூர் இலக்கியன், செங்குன்றம், சென்னை 52.
பணம் சம்பாதிப்பதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கல்வி முறையை மாற்றி, சமூகம் சார்ந்த கல்வியைக் கொண்டுவந்தால் நல்ல சமூகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதுதானே?


நிச்சயமாக! கண்முன்னே இருந்த வாய்ப்புதானே அது. பல ஆயிரம் ஆண்டுகளாக முன்னோர்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியும் அதுதானே. திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்கள்போல, உலக அளவிலான நீதி நூல்களும் நல்ல சமூகம் அமைவதை நோக்கி நம்மை வழிநடத்தத்தானே எழுதப்பட்டன. ஆனால், ‘வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதை’யாக கடந்த 40, 50 ஆண்டுகளில் அனைத்தையும் குட்டிச்சுவராக்கிவிட்டோம். புற்றீசல்களாக முளைத்து நிற்கும் இன்றைய கல்வி நிறுவனங்களால், சமூக அநீதிதான் பெருகிக் கொண்டே இருக்கிறது. நீதிபோதனை, கதையாடல், விளையாட்டு, ஓவியம், கைத்திறன் பயிற்சி போன்ற எல்லா வகுப்புகளையும் காலி செய்துவிட்டு, புத்தகப் புழுக்களாக மட்டுமே அல்லவா உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!

கழுகார் பதில்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

@க.சேகர், வடகோவனூர்.
‘தாமரை மலர மலர, சூரியன் மறைந்துபோய்விடும்’ என்று முழங்கியிருக்கிறாரே தமிழிசை. சூரியன் உதித்தால்தானே தாமரையே மலரும் என்பது அந்த அம்மையாருக்குத் தெரியாதோ?


அதெல்லாம் கூட்டத்தைக் கலகலப்பாக்கவும், கவர்வதற்காகவும் பேசுவது. சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சூரியன் உதித்தால் இலை கருகிவிடும், தாமரை வாடிவிடும் என்கிற அரசியல்வாதிகளின் பேச்சுகளுக்கு எல்லாம் பொழிப்புரை காண்பது அறிவீனம்.

@எல்.சேவுகபாண்டியன், ராதாபுரம்.
நூலகர் ‘பாலம்’ கல்யாணசுந்தரத்தின் சேவைகளைப் பட்டியலிட்டு, அவர் எந்த மாதிரியான விருதுக்குத் தகுதியானவர் என்பதைக் கொஞ்சம் எடுத்துரையுங்கள்?


அரசு நூலகராகப் பணியாற்றி, தான் சம்பாதித்ததை மட்டுமல்ல, விருது உள்ளிட்ட வகைகளில் தனக்குக் கிடைத்த தொகை அனைத்தையுமே ஏழைகளுக்காகச் செலவிட்டவர் ‘பாலம்’ கல்யாணசுந்தரம். அவரை ‘நூலகர்’ கல்யாணசுந்தரம், ‘பாலம்’ கல்யாணசுந்தரம் என்று அன்போடு அழைக்கிறோமே அதைவிடவா... விருதுகள் பெரிது. ஆனாலும், இப்படிப்பட்ட அரிய மனிதர்களை அரசாங்கமும் உரிய வகையில் கௌரவிப்பதுதான் மரியாதை.  ‘காலம் கனியும் பால’த்துக்கு என்றே காத்திருப்போம்!

கழுகார் பதில்கள்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சை-6.
லஞ்சத்துக்கு எதிரான கதையுடன் பெரும் வெற்றிபெற்ற ‘இந்தியன்’ படம் வந்து 20 ஆண்டுக்கு மேலாகிறது. ஆனாலும், ஒரு துளிகூட லஞ்சம் குறைந்ததாகத் தெரியவில்லை. இதில் இந்தியன்-2 வந்து என்னவாகப் போகிறது!


ம்... தமிழ்நாட்டில் ஏன் சினிமாக்காரர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது.

கழுகார் பதில்கள்!

@பொன் சிவா, நல்லூர், திருப்பூர்.
அரசு ஊழியர்களின் வாக்குகளை முதல்வர் எடப்பாடியார் பெரிதாகக் கருதவில்லையா?


அவர், ‘வாக்கு வங்கி அரசியல் வேண்டாம்’ என்றோ... ‘மறுபடியும் ஆட்சிக்கு வந்தே தீரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை’ என்றோகூட நினைக்கலாம் அல்லவா!

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.
ஒருவர் கொள்ளையடிக்கத் தூண்டுகிறார். போன இடத்தில் ஒரு கொலையும் விழுந்துவிடுகிறது. தூண்டியவர் மீதும் கொலைப்பழி வருமா?


ஒரு குற்றத்தைச் செய்தவரைவிட, அதைச் செய்யச் சொல்லித் தூண்டியவரே கடும் குற்றவாளி. கொள்ளயடிக்கச் சென்றபோதுதான், கொலையும் நடந்திருக்கிறது என்கிறீர்கள். ஆக, கொள்ளைக்குத் தூண்டியவர்மீதும் கொலைப்பழி விழவே செய்யும். கொள்ளையடிக்கச் செல்லவில்லை என்றால், அந்தக் கொலையே நடந்திருக்காதே!

 @இரா.கணேசன், பாலக்கோடு.
‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யவே முடியாது. அது முடியுமென்றால் நிரூபித்துக்காட்டலாம்’ எனத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே சவால் விட்டது. அதை ஏற்காதவர்கள் அடிக்கடி சந்தேகத்தைக் கிளப்பி, குழப்பிக்கொண்டே இருக்கிறார்களே?

இந்த டிஜிட்டல் உலகத்தில் ஹேக் செய்யவே முடியாது என்று எதுவுமே இல்லை. கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்பதாகத்தான் எல்லாமே மாறி மாறி கடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக எல்லாவற்றிலும் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு, வேடிக்கைப் பார்ப்பது தவறு. சந்தேகத்தை எழுப்புபவர்கள், கண்டிப்பாக நிரூபித்துக் காட்டித்தான் ஆகவேண்டும். அதைவிடுத்துக் குழப்பிக் கொண்டே இருந்தால், பின்னணியில் அரசியல் கட்சிகளின் சதி என்பதாகவே புரிந்துகொள்ளப்படும். ஆனால், காகித வாக்குப்பதிவை விட, டிஜிட்டல் வாக்குப்பதிவில் குறைகள் கம்மிதான்.

@வாசுவாசு.

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கும்போது, அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தேவையா?


நிச்சயமாகக் கூடாதுதான். அரசாங்க ஊழியர்கள் என்பவர்கள், அரசாங்கத்தின் ஓர் அங்கமே. எனவே, அவர்களுக்குத்தான் மக்களைவிட பொறுப்பு உணர்வு அதிகமாக இருக்க வேண்டும். நிதி நிலைமைக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். இதைவிட கூடுதல் பொறுப்பு உணர்வு, ஆட்சியாளர்களுக்கும் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவிட வேண்டிய பணத்தையெல்லாம் நூற்றாண்டு விழாக்கள், மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள், தோரண வளைவுகள், தேவையற்ற இலவசங்கள் என்று சூறைத்தேங்காய் உடைத்துக் கொண்டிருக்கக் கூடாது.

கழுகார் பதில்கள்!

@பாலமுருகன், மதுரை.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க நிலை என்னவாகும்?  


இப்போதைய நிலையே புரியவில்லையே!

@பிச்சைராமன்.ஜி.
ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த் இவர்களெல்லாம் திரைப்படங்களில் நடித்து, கறுப்பு வெள்ளையில் சம்பாதித்ததைத் தவிர, தமிழக மக்களுக்கு அப்படி எதைச் சாதித்துவிட்டார்கள்?


திரைப்படத்தில் நடிப்பது என்பது அவர்களின் தொழில். நாட்டின் குடிமகன் என்கிற வகையில் அவர்கள் அரசியலுக்கு வருவதை யாருமே கேள்வி கேட்க முடியாது. ரசிகர்கள் என்கிற போர்வையில் உசுப்பேற்றிவிடுவது நம் ஆட்கள்தான். திரைத்துறையினராவது, ஏற்கெனவே ஒரு தொழிலில் இருந்துகொண்டு அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான அரசியல்வாதிகள், இங்கே வந்த பிறகல்லவா... ‘தொழிலதிபர்கள்’ ஆகிறார்கள், புதிது புதிதாகத் ‘தொழில்’களையும் உருவாக்குகிறார்கள். இவர்களை எல்லாம் நாம் கேள்வி கேட்பதே இல்லையே!

@மல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை-33
இறுதித் தீர்ப்புக் கொடுத்துவிட்டால் விவகாரம் முடிந்தது என்றுதானே அர்த்தம். ஆனால், அரசியல்வாதிகளுக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பழைய வழக்குகளைத் தூசுதட்டி எடுக்கிறார்களே. இது நியாயம் இல்லாத செயலும்கூடத்தானே?


‘தேவைப்பட்டபோதெல்லாம்’ என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே. பிறகு நியாயம், அநியாயம் பற்றிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது!

பாலசுப்பிரமணியன், மதுரவாயல், சென்னை-95.
கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இரண்டும் வேறு வேறா?


உங்களை நம்புவது, அடுத்தவரை நம்புவது இரண்டும் எப்படியோ... அப்படியே!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!