
“நாடாளுமன்றத்தில் என்னைப்போல பேசியவர் எவருமில்லை!”ஓவியம்: கார்த்திகேயன் மேடி
#EnnaSeitharMP
#MyMPsScore
‘மாற்றம்... முன்னேற்றம்’ என்ற வாசகத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை முன்னிறுத்தியபோது, பா.ம.க முன்வைத்த வாசகம் இது. மாநிலத்துக்கு முதல்வராகும் அவரது கனவு நிறைவேறவில்லை. ஆனால், தர்மபுரிக்கு எம்.பி ஆகிவிட்டார். தனது தொகுதியில் என்னென்ன மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் அவர் செய்துள்ளார்?
‘‘ ‘நான் வெற்றிபெற்றால் தர்மபுரியிலேயே வீடு எடுத்து, குடும்பத்துடன் தங்குவேன். தர்மபுரிதான் என் தாய்வீடு’ என்று அவர் கொடுத்த முக்கியமான வாக்குறுதியையே நிறைவேற்றவில்லை. கட்சிக் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்வுகளுக்கு ஒரு விருந்தாளிபோலத்தான் வருகிறார். எளிய மக்கள் அவரை அணுக முடிவதில்லை’’ என்று புலம்புகிறார்கள் தர்மபுரிவாசிகள்.
சி.பி.எம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரான சிசுபாலன், “கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் பின்தங்கிய மாவட்டம் தர்மபுரி. ‘நான் வெற்றிபெற்றால் தொகுதியை தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டுவருவேன்’ என்று சொன்னார் அன்புமணி. ஆனால், மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் அடிப்படையில், தமிழகத்தின் கடைசி ஐந்து இடங்களில் இருக்கிறது தர்மபுரி. இங்கு வேலைவாய்ப்பு இல்லாததால் சுமார் மூன்று லட்சம் பேர் திருப்பூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு வேலைக்காகச் செல்கிறார்கள். இதைத் தடுக்க, ‘தர்மபுரிக்கு புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவருவேன்’ என்றார். அப்படி எந்தத் தொழிற்சாலையும் வரவில்லை. தர்மபுரி முழுவதுமே சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மலைவாழ் மக்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் எம்.பி செய்யவில்லை” என்றார் வேதனையுடன்.

தர்மபுரி தி.மு.க மாவட்ட வர்த்தக அணியின் அமைப்பாளர் தங்கமணி, “தர்மபுரியிலிருந்து புளி, மாங்காய், தேங்காய் உள்ளிட்டவை இந்தியா முழுவதும் செல்கிறது. ஆனால், இதில் இடைத்தரகர்கள்தான் பணம் பார்க்கிறார்கள். இந்தப் பொருள்களை இங்கேயே மதிப்புக்கூட்டப்பட்டப் பொருள்களாக மாற்றக்கூடிய தொழிற்சாலைகளைக் கொண்டுவந்திருந்தால் தர்மபுரி விவசாயிகள் பயன்பெறுவர். ‘கோவை - பெங்களூரூ இ்ன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை பாலக்கோட்டில் நிறுத்திச்செல்ல ஏற்பாடு செய்வேன்’, ‘தர்மபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவேன்’ என்றார் எம்.பி. ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தடங்கம் - அதகப்பாடி, கம்பையநல்லூரிலும், பர்வதனஅள்ளியிலும் சிட்கோ அமைக்கப்படும் என்றார். அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள்கூட இன்னும் முடியவில்லை. நாகமரை - பண்ணவாடி அல்லது ஒட்டனூர் - கோட்டையூர் வரை பாலம் அமைத்தால் கோவை, திருப்பூரிலிருந்து பெங்களூரூ சாலையில் 70 கி.மீ சுற்றிக்கொண்டு செல்வது குறையும். இந்தக் கோரிக்கையை அன்புமணி கண்டுகொள்ளவில்லை” என்றார்.
அ.தி.மு.க-வின் மாநில விவசாயப் பிரிவுத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், “மற்ற மாவட்டங்களைவிட தர்மபுரியில் சிறுதானியங்கள் விளைச்சல் அதிகம். அவற்றை சந்தைப்படுத்தவும், மதிப்புக்கூட்டவும் விவசாயிகளுக்கு உதவும் திட்டங்களை அன்புமணி கொண்டுவரவில்லை. ‘வளர்ச்சித் திட்டங்கள் சார்ந்த அரசியலை முன்னெடுக்கிறேன்’ என்று பேசும் அன்புமணி, தர்மபுரியில் அதைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
தி.மு.க முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், “எதுவாக இருந்தாலும் தர்மபுரிக்கு நாங்கள்தான் செய்தோம் எனக் காட்டிக்கொள்வதுதான் அன்புமணியின் வேலை. ‘மத்திய அமைச்சராக இருந்தபோது அதைக்கொண்டு வந்தேன், இதைக்கொண்டு வந்தேன்... ஐ.நா சபையே சிறந்த அமைச்சர் என்று என்னைப் பாராட்டியது’ என்று பழைய பஞ்சாங்கத்தையே பாடிவருகிறார் அன்புமணி. தொகுதி மேம்பாட்டு நிதியில், அவரது சமூக மக்கள் அதிகம் வாழக்கூடிய இண்டூர், ஏரியூர் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டுமே பேருந்து நிலையங்கள் அமைத்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை அவர் கண்டுகொள்வதே இல்லை.
பென்னாகரம் அருகே நெற்குந்தியில் 900 கோடி மதிப்பில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மையத்துக்கான பணி தி.மு.க ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு, பாதியில் நின்றுபோனது. அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஊத்தங்கரை - சேலம் நான்கு வழித் திட்டம் கொண்டுவந்திருந்தால், சேலம் - சென்னை பயண நேரம் குறையும். தர்மபுரி பேருந்து நிலையம் நகரத்துக்குள்ளே இருக்க வேண்டுமா, அல்லது அதை வெளியே மாற்ற வேண்டுமா என்ற பிரச்னையில் பா.ம.க எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. தர்மபுரி, மொரப்பூர் ரயில் நிலையங்களைப் புதுப்பிக்க நடவடிக்கை இல்லை. ‘மொரப்பூர் ரயில்வே நிலையம் எதிரே ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. ‘பாலக்கோடு மருத்துவமனையை மத்திய அரசின் நிதி உதவியோடு தரம் உயர்த்துவேன்’ என்றார். அதையும் செய்யவில்லை. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பஞ்சாயத்து நிர்வாகத்தின்கீழ் இருக்கிறது. அதைச் சுற்றுலாத் துறையின் கீழ் கொண்டுவந்து மேம்படுத்தக் கவனம் செலுத்தவில்லை. மாற்றமும் முன்னேற்றமும் அவருக்குத்தானே ஒழிய, மக்களுக்கு இல்லை” என்றார் கொதிப்போடு.
தர்மபுரியை அடுத்த மோடாங்குறிச்சி பஞ்சாயத்தை அன்புமணி தத்தெடுத்திருக்கிறார். அங்கே சென்றோம் “நத்தமேட்டில் நூலகம் கட்டப்பட்டுவருகிறது. பெத்தானூர், மோட்டாங்குறிச்சியில் ஹைமாஸ் லைட் போட்டுள்ளார். அதைத்தவிர வேறு எதுவும் செய்யவில்லை’’ என்றார்கள் கிராம மக்கள். நத்தமேட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், “தத்தெடுப்பு விழா நடைபெற்றபோது ‘பஞ்சு குடோன், 40 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஏ.டி.எம் வசதியுடன் வங்கி என நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்தார். ஆனால், எதையுமே செய்யவில்லை” என்றார்.
இதற்கெல்லாம் அன்புமணியிடம் விளக்கம் கேட்டோம். “தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கும் கமிட்டி கூட்டத்தை, தொடர்ந்து நடத்திவருகிறேன். கூட்டத்தில் கலெக்டர் முதல் தாசில்தார் வரை பங்கேற்க வேண்டும். ஆனால், மாவட்ட நிர்வாகம் எனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. இந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு நிகழ்ச்சியில்கூட கலெக்டர் பங்கேற்கவில்லை. பாஸ்போர்ட் சேவை முகாம், வேலைவாய்ப்பு முகாம் ஆகியவற்றை நடத்தியிருக்கிறேன். மொரப்பூர் - தர்மபுரி ரயில்வே திட்டத்தில் நில ஆர்ஜிதப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அடிக்கல் நாட்டு விழா மட்டுமே பாக்கி. எண்ணேகோல் புதூர் தும்பலஹள்ளி அணைக்கட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தினால் 70 ஏரிகள் 20 தடுப்பணைகளுக்குத் தண்ணீர் கிடைக்கும். இதற்காக மூன்று போராட்டங்களை நடத்திய பிறகுதான், அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. சேனேகால் திட்டத்துக்கு, நான் கருத்துக் கேட்ட பிறகுதான், முதல்வர் அறிவித்தார். ஜெகன்நாதன் கோம்பை அணைக்கட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனைமடு, பொதியின் பள்ளம், தொப்பையாறு, வள்ளிமதுரை அணை, பஞ்சப்பள்ளி ஆகிய திட்டங்கள் தொடர்பாக ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். மேட்டூர் உபரிநீர்த் திட்டம் செயல்படுத்த 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினேன். அதன் பிறகுதான் 400 கோடி ரூபாய் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.
தொகுதியில் மக்களைச் சந்தித்து 30,000 மனுக்களை வாங்கி, அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்கிறேன். மக்களின் கோரிக்கைகளை, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்துகொடுத்துள்ளேன். மலைவாழ் மக்களை அடிக்கடி சந்திக்கிறேன். சித்தேரி மலைவாழ் மக்களோடு பொங்கல் விழாவில் பங்கேற்றேன். சாதிப் பாகுபாடு பார்க்கிறேன் என்று சொல்வது தவறு. அனைத்து தரப்பிடமும் நான் பேசிவருவதால்தான், இந்த நான்கரை ஆண்டு காலத்தில் தர்மபுரியில் சாதி ரீதியான எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்பெஷலிஸ்ட் வார்டுகள் அமைக்க முயற்சி செய்துவருகிறேன். ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைச் சுற்றுலாத்தலமாக ஆக்குவதற்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறேன்.
சிப்காட் திட்டத்துக்கு மூன்று போராட்டங்களை நடத்தினேன். சிப்காட்டில் தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்காக டெல்லியிலுள்ள ‘இன்வெஸ்ட் இந்தியா’ அமைப்பு மூலம் முயற்சிகள் எடுத்தேன். நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்காக என் அளவுக்குப் பேசியவர்கள் யாரும் கிடையாது. நீட், காவிரி, மீனவர், ஒக்கி புயல், ரயில்வே, மேக்கேதாட்டூ, நெடுஞ்சாலை மதுக்கடை விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறேன். மத்திய அமைச்சர்களைச் சந்தித்தும் கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். ஜனாதிபதியையும், பிரதமரையும் மூன்று முறை சந்தித்திருக்கிறேன். ஜல்லிக்கட்டுக்காக, பிரதமர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியவன் நான்’’ என்றார் அன்புமணி.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- எம்.புண்ணியமூர்த்தி, எம்.வடிவேல்

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
தர்மபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் எம்.பி அலுவலகம் இருக்கிறது. அன்புமணியின் உதவியாளர் சொல்லின்செல்வம், தினமும் அங்கு வருகிறார். பொதுமக்கள் இங்கு மனுக் கொடுக்கின்றனர். தர்மபுரியை அடுத்து மொன்னையன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வத்துக்கு, இரு சிறுநீரகங்களும் முழுமையாகச் செயலிழந்துவிட்டன. பிரதமர் நிவாரண நிதியிலிருந்து அவருக்கு உதவி பெற்றுத்தரக்கோரி அன்புமணியின் அலுவலகத்தில் கடந்த மே 21-ம் தேதி, செல்வத்தின் மனைவி பச்சியம்மாளை விண்ணப்பிக்க வைத்தோம். மருத்துவ ஆவணங்களை வாங்கிக்கொண்ட சொல்லின்செல்வம், சில நாள்களுக்குப் பிறகு, 2.25 லட்சம் ரூபாய் மருத்துவ உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் கொடுத்தார். அந்த உதவியால், செல்வத்துக்கு கோவையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.



