Published:Updated:

“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை!”

“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை!”

பற்றவைக்கிறார் பதர் சயீத்

மேடைதோறும் அமைச்சர்கள், ‘இது அம்மாவின் ஆட்சி’ என்கிறார்கள். ஆனால், ‘அம்மா’வுக்கு நெருக்கமாக இருந்த யாரும் இப்போது கட்சிக்குள் செல்வாக்காக இருப்பதாகத் தெரியவில்லை. அந்த வரிசையில், ஜெயலலிதாவின் நெருங்கியத் தோழியாக அறியப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-வான பதர் சயீத், அ.தி.மு.க-விலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்துள்ளார். அங்கு சேர்ந்தவுடனேயே செய்தித் தொடர்பாளர் பதவி அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது. பதர் சயீத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அ.தி.மு.க-விலிருந்த நீங்கள், திடீரென காங்கிரஸில் இணையக் காரணம் என்ன?”

‘‘திருவல்லிக்கேணி தொகுதியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன். தற்போது எம்.எல்.ஏ-வாக இல்லாவிட்டாலும், அந்தத் தொகுதி மக்களின் பிரச்னைகளை என்னிடம் கூறுகிறார்கள். ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது எல்லோருக்கும் தேவையான உதவிகளைச் செய்துவந்தேன். அவர் மறைந்தபின், ஒன்றரை ஆண்டுகாலம் முடங்கிவிட்டேன். தொகுதி மக்களுக்கு உதவலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தேன். அவரோ, ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பாருங்கள்’ என்றார். முதல்வரைச் சந்திக்க, பலமுறை கேட்டும் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, நானாகத்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். எந்தப் பதவியையும் எதிர்பார்த்துப் போகவில்லை. அந்த இயக்கத்தின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை ஜெயலலிதா இறந்ததும் போய்விட்டது. இனி அங்கே இருக்க முடியாது என்றுதான் வெளியேறிவிட்டேன்.’’

“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை!”

“ஜெயலலிதா இருந்தபோதே நீங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும், இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும், உங்களுக்கு வாய்ப்பு  அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?

“தவறான தகவல். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகத்தான் நான் இருந்தேன். ஆனால், நான் ஜெயலலிதாவைப் பார்ப்பதைச் சிலர் விரும்பவில்லை. அவரைச் சுற்றி இருந்தவர்கள், என்னை அவரிடம் நெருங்கவிடாமல் செய்ததால், நானே 2011-ல் ஒதுங்கிவிட்டேன். ஜெயலலிதா என்னை ஒருபோதும் ஒதுக்கிவைக்க நினைத்ததில்லை.”

“ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஜெயலலிதா இருந்தபோது, அவர் மட்டும்தான் கட்சியின் தலைவராக இருந்தார். கட்சியைக் கட்டுக்கோப்பாகவும் சிறப்பாகவும் வழிநடத்தினார். முடிவெடுக்கும் அதிகாரம், அவரிடம் மட்டுமே இருந்தது. இப்போது, கட்சியில் ஆயிரம் தலைவர்கள் முளைத்துவிட்டார்கள். யார் தலைவர், யார் முடிவு எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.”  

“மற்றொரு திராவிடக் கட்சியான தி.மு.க-வைத் தவிர்த்துவிட்டு, காங்கிரஸைத் தேர்வு செய்தது ஏன்?”

“காங்கிரஸ், ஒரு தேசியக் கட்சி. தேசத்துக்காக உழைத்த கட்சி. அதன் மூலமாகப் பரவலான மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று நம்புகிறேன். மேலும், எனக்கு இந்தி தெரியும். கட்சி மேலிடம், எங்கே பிரசாரத்துக்கு அனுப்பினாலும் செல்வதற்குத் தயாராக இருக்கிறேன்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அ.தி.மு.க-வில் யார் தலைவர் என்றே தெரியவில்லை!”

“மூன்று மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததும்தான் இந்த முடிவு எடுத்தீர்களா?”

“அந்தளவுக்கு நான் சுயநலவாதி இல்லை. என்னை நம்பியுள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கென்று சில திறமைகள் இருக்கின்றன. அவற்றை வைத்து கட்சிக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய விரும்புகிறேன். நிச்சயமாகச் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்.’’

நம்பிக்கையுடன் ‘கை’ உயர்த்துகிறார் பதர் சயீத்.

- கா.புவனேஸ்வரி