Published:Updated:

மேக்கேதாட்டூ அணை விவகாரம் - 'பெயருக்குச் செயல்படுகிறாரா, எடப்பாடி?

கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் பா.ஜ.க. சரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்று பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்திருந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ''மேக்கேதாட்டூ விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு இருந்தும் அதை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. தமிழக அரசின் ஒத்துழைப்போடு அணை கட்டப்படும்'' என்கிறார்.

மேக்கேதாட்டூ அணை விவகாரம் - 'பெயருக்குச் செயல்படுகிறாரா, எடப்பாடி?
மேக்கேதாட்டூ அணை விவகாரம் - 'பெயருக்குச் செயல்படுகிறாரா, எடப்பாடி?

மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரித்து உத்தரவிட வேண்டும் எனத்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “தமிழக அரசின் ஒத்துழைப்போடு மேக்கேதாட்டூ அணை கட்டப்படும்” என்று அறிவித்துள்ளார்.

 கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா,  “காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூ அணை கட்டப்படுவது உறுதி” எனச் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு காவிரி விவகாரத்தில் மேலும் சர்ச்சையை உருவாக்கினார். இதையடுத்து, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, “கர்நாடகம் மேக்கேதாட்டூ அணை கட்டுவது தொடர்பாக, நம்முடைய சட்டமன்றத்தில் இரண்டு தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்'' என 110 விதியின்கீழ் அறிவித்தார். இதையடுத்து,   “காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு மாறாக மேக்கேதாட்டூ அணை கட்டும் பணிகளையோ அல்லது வேறு எந்தப் புதிய திட்டங்களையோ கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும்; மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என்றும் ஆணை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை, தமிழ்நாடு அரசு  தாக்கல் செய்தது. 

இந்த நிலையில், ``அணை கட்ட தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. காவிரி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதைத் தடுக்கவே மேக்கேதாட்டூ அணை கட்டவுள்ளோம். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத் துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். எங்களின் முடிவு குறித்து நீர்வளத் துறையே இறுதி முடிவு செய்ய வேண்டும்'' எனக் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து, மேக்கேதாட்டூ அணை கட்ட வேண்டும் என கர்நாடக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அணையை சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் செலவில்  கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்கான முதற்கட்ட  வேலைகளைத் தொடங்கியது. ஆனால், காவிரிநீர்ப் பங்கீட்டில் பிரச்னை வரும் என மேக்கேதாட்டூ அணைக்குத் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு மத்திய அரசு எந்தவித பதிலையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மேக்கேதாட்டூ அணை தொடர்பாக, கர்நாடக அரசு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

 “இந்தத் திட்ட அறிக்கையை நிராகரிக்கும்படி, மத்திய நீர்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி மீண்டும்  கடிதம் எழுதியுள்ளார்.  ''கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டூவில் அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர்வளத் துறை அனுமதியளித்தது. அதை, திரும்பப் பெற வலியுறுத்தி, 2018 நவ., 27, டிச., 6-ம் தேதிகளில் கடிதம் எழுதியுள்ளேன். காவிரியில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதியளித்தது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. தற்போது கர்நாடக அரசு, திட்ட அறிக்கையைத் தயாரித்து, மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாகும். மத்திய நீர்வளத் துறை அளித்த அனுமதியை, திரும்பப் பெறக்கோரி,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால்,  காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போகும். எனவே, நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள, மேக்கேதாட்டூஅணைக் திட்ட அறிக்கையை நிராகரிக்கும்படி, மத்திய நீர்வளத்  துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 “கர்நாடக அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில், பி.ஜே.பி. சரியான நிலைப்பாட்டை எடுக்கும்” என்றார், பி.ஜே.பி. தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ். இப்படி அவர் தெரிவித்திருந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், ''மேக்கேதாட்டூ விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு இருந்தும் அதைவைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. தமிழக அரசின் ஒத்துழைப்போடு அணை கட்டப்படும்'' என்றார்.

இதுவரையிலும் மேக்கேதாட்டூ அணையில் தமிழக அரசு சரியான நகர்வைக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே முதல்வர் அனுப்பிய கடிதத்துக்கு, இதுவரை மத்தியில் இருந்து பதில் வரவில்லை. இந்த நிலையில், இரண்டாவது கடிதத்தை அனுப்பியிருப்பது, கர்நாடகத்துக்கே வலு சேர்க்கும் என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். உச்ச நீதிமன்றம்தான் மேக்கேதாட்டூ விவகாரத்தில், தமிழகத்துக்கு இருக்கும் ஒரே தீர்வு, அங்கேயும் அரசு நியமிக்கும் வழக்கறிஞர்கள் செயல்பாட்டைப் பொறுத்தே தமிழகம் இதற்கு ஒரு தீர்வு காணும்.