Published:Updated:

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?
பிரீமியம் ஸ்டோரி
News
அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?

‘ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்’ என்ற அதிரடியான வாக்குறுதியை அறிவித்து, தங்களின் எதிர்தரப்பான பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி. இந்த அறிவிப்பு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும் என காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் இருக்க, பி.ஜே.பி-யினரோ இதன் மீது கடும் விமர்சனங்களை எழுப்புகிறார்கள்.

ராய்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஏழை மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும். இதனால் ஏழை மக்களின் வறுமையையும், பசியையும் போக்க முடியும்” என்று அறிவித்தார். அவர் பேசிய சில மணிநேரத்தில் இந்தியா முழுவதும் சமூகவலைதளங்களில் இது பற்றிய விவாதங்கள் தீவிரமாக நடைபெற்றன.

ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டம் கிராமப்புற மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரத்தில், இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றதாக, பல மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் என்கிற இந்தத் திட்டம், ‘இந்தியாவில் சாத்தியப்படுமா?’ என்பது போன்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் என்பது உலக அளவில் அதிகமாகப் பேசப்படும் திட்டங்களில் ஒன்று. புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையே உள்ள பொருளாதார இடைவெளி அதிகரித்துள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இந்த இடைவெளியின் தாக்கம், சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த ஏற்றத்தாழ்வால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில்கூட மிகப்பெரும் புரட்சிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தச் சூழ்நிலையில்தான், மகத்தான இந்தத் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இந்திய மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் அளவுக்கு இருக்கும் பெரும் பணக்காரர்களின் கையில்தான் இந்தியாவின் 60 சதவிகிதப் பொருளாதாரம் சிக்கியுள்ளது. இயற்கை வளங்கள், கனிமவளங்கள் உள்ளிட்டவை அவர்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையை விற்றுப் பொருளாதாரத்தைத் திரட்டும் சக்தியாகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் ஏழைகளுக்கும் பங்களிக்கவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை.

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?

இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்குப் பங்கீடு என்பது பிச்சை அல்ல. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமை. ஓர் ஏழைக்கு வருடத்துக்கு எவ்வளவு கொடுப்பது என்பது பற்றிய ஆலோசனைகள் நடை பெற்றுள்ளன. மாதம் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை தரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஏழைகள் என்றால் யார், அவர்களை எந்த அளவீட்டின் கீழ் குறிப்பிட முடியும் எனப் பலகட்ட ஆய்வுகளும் பொருளாதாரத் தரவுகளும் எங்கள் வசம் உள்ளன. எனவே, இந்தத் திட்டம் செயலுக்கு வரும்போது முழுமையாக எந்தக் குறைபாடும் இல்லாமல் செயல் படுத்த முடியும். ‘ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடப்படும்’ என்று மோடி சொன்னது போன்ற அறிவிப்பாக இது இருக்காது.

அதேசமயம் இந்தத் திட்டத்தைக் கொண்டுவர கார்ப்பரேட் முதலாளிகள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள் என்பதையும் அறிந்தே இருக்கிறது காங்கிரஸ். அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் செலவு செய்யவே முதலாளிகள் விரும்புவார்கள். அதனால், இந்தத் திட்டத்துக்கு எதிராக மீடியாக்கள் வழியாகவும், இது தவறு என்ற பிம்பத்தை நடுத்தர வர்க்கத்தின் மத்தியிலும் ஏற்படுத்தி, திட்டத்தை எதிர்க்கவே பெரும் முதலாளிகள் துணிவார்கள். அதுபோன்ற கார்ப்பரேட் வலைக்குள் சிக்காத தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். எனவே, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவார்” என்றார் உறுதியுடன்.

அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?

இது குறித்து பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவனிடம் கேட்டோம். “இந்திய நாட்டை 55 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிக்க என்ன செய்தது? இதற்குமுன் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ‘வறுமையை ஒழிப்போம்’ என்ற கோஷத்தை முன்வைத்தார். அது கடைசிவரை வெற்று கோஷமாகவே போனது. அதேபோல், ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பும் வெற்று கோஷம்தான். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பல லட்சம் கோடி ரூபாய் செலவாகும். அந்தத் தொகையைத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்தால், அனைவருக்குமே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு கோஷத்தை முன்மொழிவது காங்கிரஸின் வழக்கம். இப்போது இந்தத் திட்டத்தைச் சொல்கிறார்கள். நிறைவேற்ற முடியாத திட்டத்தைச் சொல்லி மக்களை ஏமாற்றும் தந்திரத்தை ராகுல் கையில் எடுத்துள்ளார். நாங்கள் வளர்ச்சியை வைத்து தேர்தலை எதிர்நோக்க உள்ளோம்”என்றார்.

- அ.சையது அபுதாஹிர்