Published:Updated:

பாரத ரத்னா விருதை விமர்சிக்கும் வகையில் பாடல்? - அஸ்ஸாம் பாடகர் மீது வழக்குப்பதிவு

பாரத ரத்னா விருதை விமர்சிக்கும் வகையில் பாடல்? - அஸ்ஸாம் பாடகர் மீது வழக்குப்பதிவு
பாரத ரத்னா விருதை விமர்சிக்கும் வகையில் பாடல்? - அஸ்ஸாம் பாடகர் மீது வழக்குப்பதிவு

மத்திய அரசின் ‘குடியுரிமை திருத்தச் சட்டம்’, வடகிழக்கு மாநிலங்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்க, அந்தச் சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. இதுவே போராட்டங்களுக்கு காரணம்.

குறிப்பாக, அஸ்ஸாம், மிசோரோம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், அதிகளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த மாநில முதல்வர்களும் சட்டத்திருத்தத்துக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர். மிசோரோம் முதல்வர் சோரம் தங்கா, “குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். அந்த மாநிலங்களில், ஆளுநர்கள் பங்கேற்ற குடியரசுதின விழா அரங்குகள் பார்வையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடும் அளவுக்கு, விவகாரம் பற்றியெரிகிறது. 

இந்த சூழலில், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் குரலெழுப்பி வந்த, அஸ்ஸாமைச் சேர்ந்த இளம் பாடகர் ஜூபின் கார்க் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பி.ஜே.பி பிரமுகர் சத்ய ரஞ்சன் போரா என்பவர் அளித்த புகாரின் பேரில், அந்த வழக்கைப் பதவு செய்துள்ளனர் அஸ்ஸாம் போலீசார். 

என்ன காரணம்?

அஸ்ஸாமின் புகழ்பெற்ற பாடகர் பூபன் ஹசாரிகாவுக்கு, நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவையும் குறிப்பிட்டு, புதிய பாடல் ஒன்றைத் தயாரித்துள்ளார் ஜூபின் கார்க். “அரசியல் செய்யாதீர்கள்...” என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலின் ஆடியோ கிளிப்பிங், வாட்ஸப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் பாடலில், பாரத ரத்னா விருதை விமர்சிக்கும் வரிகள் இருப்பதாக, அவர் மீது குற்றச் சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாகவே, ஜூபின் கார்க் மீது இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விமர்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது” என்று, அவர் மீது புகார் கொடுத்த சத்ய ரஞ்சன் போரா தெரிவித்துள்ளார்.

ஜூபின் கார்க் விரைவில் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.