Published:Updated:

“90 சதவிகிதம் வெல்வோம்!”

“90 சதவிகிதம் வெல்வோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“90 சதவிகிதம் வெல்வோம்!”

“90 சதவிகிதம் வெல்வோம்!”

“90 சதவிகிதம் வெல்வோம்!”

“90 சதவிகிதம் வெல்வோம்!”

Published:Updated:
“90 சதவிகிதம் வெல்வோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“90 சதவிகிதம் வெல்வோம்!”

மிழக அமைச்சர்களில் நல்ல பெயர் உள்ள மிகச்சிலரில் ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். ஆசிரியர்கள் போராட்டம், கல்வித்தரம், அ.தி.மு.க.வின் இன்றைய நிலை என்று பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசியதில்..... 

“90 சதவிகிதம் வெல்வோம்!”

இன்று அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படையான தேவையாக அரசு எதைக் கருதுகிறது, அதற்காக என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறது?

``பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு தனிக் கவனம் செலுத்திவருகிறது. புதிதாக சயின்ஸ் லேப் உள்ளிட்ட வசதிகளும் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன. வளர்கிற தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பாட முறைகளும் மாற்றியமைக்கப்பட இருக்கின்றன. ‘Skill based courses’ என்று சொல்லப்படக்கூடிய டூரிசம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்களும் வருகிற ஆண்டு +2 பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. வகுப்புகள் இணைய வசதியுடன் கணினிமயப்படுத்தப்பட உள்ளன. கல்விக்கென்ற புதிய தொலைக்காட்சி மற்றும் ஸ்டுடியோ விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. விளையாட்டிற்குக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்படும்.’’

ஜீடிபி-யில் கல்விக்கு இந்தியா 6% செலவிட வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. ஆனால், மத்திய அரசின் கல்விக்கான ஒட்டுமொத்த முதலீடு என்பது 3% தான் இருக்கிறது. இது அதிகரிக்க வேண்டாமா?

``தமிழகத்தைப் பொறுத்தவரை அதைவிடக் கூடுதலாக ஐந்தில் ஒரு பங்கு நிதி கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் 29,207 கோடி ரூபாய் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் கல்விக்கு இந்த அளவு நிதி ஒதுக்கப்படவில்லை.’’

கல்வி முழுவதும் தனியார்மயமாகிவிட்ட சூழலில் அரசுப் பள்ளிகளைப் பற்றித் தமிழக மக்களிடம் எதிர்மறையான பிம்பம்தானே இருக்கிறது? ஏழைகள்கூட தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கத்தானே விரும்புகின்றனர்?

 ``அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மாற்றங்களுக்கு மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு உள்ளது. வரும் கல்வியாண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இது ஒரே ஆண்டில் நடைபெற்றுவிடுகிற மாபெரும் புரட்சி அல்ல. அதற்கான தொடக்கப் பணிகளைத்தான் அரசு செய்யத் தொடங்கியிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுக்காலத்தில் நல்ல மாற்றங்களைக் காண முடியும். மலேசியா, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துத் தொழில்நுட்பங்களையும் கற்றுத்தர 2,500 கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 35,000 அரசுப் பள்ளிகள் பயனடையும். மத்திய அமைச்சர்களே இந்தத் திட்டங்களைப் பாராட்டியுள்ளனர்.’’

“90 சதவிகிதம் வெல்வோம்!”

புதிய பாடத்திட்டத்தில் ஏராளமான பாடங்கள் உள்ளதால் திட்டமிட்ட கால அளவில் பாடத்தை முடிப்பதில் சிரமம் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

``பாடத்திட்டம் கூடுதலாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நீட், பொறியியல் உள்ளிட்ட தேசிய அளவிலான பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்கிற நோக்கில்தான் பாடத்திட்டங்கள் விரிவாக வடிவமைக்கப் பட்டுள்ளன, அதனால் ஆரம்பத்தில் சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் முடிவெடுக்கப்படும்.’’

ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைப் படிப்பதற்குக்கூட சிரமப்படுவதாகச் சில ஆய்வுகள் வந்துள்ளன? இதைத் தீர்ப்பதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?


“அரசுப்பள்ளிகளில் பொதுவாகவே வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குழந்தைகள்தான் அதிகம் சேர்கின்றனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கப்பட்டாலும் சமூகச் சூழலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் இதுபோன்ற சிறு குறைகள் இருக்கவே செய்கின்றன. அதைப் போக்குவதற்கான முயற்சிகளையும் அரசு ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளும்.”

“ஒருபுறம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தப்போவதாகச் சொல்கிறீர்கள். இன்னொருபுறம் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக அல்லது அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?”


“ஒரு பள்ளியைக்கூட மூடுகின்ற நோக்கம் அரசுக்கு இல்லை. இரண்டு மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகள்கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் அது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்.”

“90 சதவிகிதம் வெல்வோம்!”

“ஆசிரியர்கள் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் ஒன்று. என்ன செய்யப்போகிறீர்கள்?”

“30.05.2009-க்குப் பின்னர் பணிகளில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னர் பணியில் உள்ளவர்களுக்கும் ஊதிய வேறுபாடு பெருமளவு உள்ளது என்கிற குற்றச்சாட்டைத்தான் வைத்தார்கள். அவர்கள் பணியில் அமர்த்தப்படும் போதே ஊதியம் குறைவு என்பது ஒப்புதல் பெறப்பட்டே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில்தான் துறையை நடத்த முடியும். அன்றைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டுதான் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது, அதை ஒப்புக்கொண்டுதான் இவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.”

“மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீட் விலக்கு மசோதா எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை என்று கூறுகிறார். நீட் என்பது நிரந்தரமாகிவிட்டதா, நீட் விலக்கு மசோதா எந்த நிலையில் உள்ளது?”


“தமிழக அரசைப் பொறுத்தவரையில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். இதற்கிடையில் மாணவர்கள் மருத்துவர் ஆகும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காகத்தான் தற்காலிகமாக அரசின் சார்பிலேயே நீட் தேர்வுக்கான பயிற்சி அளித்துவருகிறோம். முதல்வர், துணை முதல்வர் இருவருமே பிரதமரை நேரில் சந்தித்து இதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அ.தி.மு.க-வின் 49 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சென்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.”

நீண்ட நாள் கோரிக்கையான கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் பற்றி அரசு என்ன நிலைப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் ராகுல் காந்திகூட காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்று பேசியுள்ளாரே?

“தேர்தல் நேரங்களில் சொல்வது வேறு, ஆட்சியில் இருக்கிறபோது சொல்வது வேறு. அதிகாரத்தில் இருப்பவர்கள்தான் அதைச் செயல்படுத்த முடியும். என்னைப் பொறுத்த வரையில் கல்வியில் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். நம்முடைய மாநிலத்திற்கு ஏற்ப, மொழிக்கு ஏற்ப தீர்மானித்துக்கொள்கிற சுதந்திரம் வேண்டும்.”

‘`பொதுப்பிரிவில் முன்னேறிய சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவாகத்தான், அ.தி.மு.க எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ததா?”

“10% இட ஒதுக்கீட்டிற்கு கொள்கை ரீதியாக எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை முடிவு இருக்கும். அதைப்போலத்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் பேசி இந்த முடிவை எடுத்துள்ளனர்.”

``நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறியுள்ளாரே?’’


“எங்களைப் பொறுத்தவரையில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமல்ல, 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 90% இடங்களை அ.தி.மு.க வெல்லும். மக்களுக்கு எங்கள்மீது எந்தவிதமான வருத்தமும் இல்லை. அதனால் நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆட்சி மாற்றம் என்பது எந்தக் காலத்திலும் ஏற்படப் போவதில்லை.”

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிப் பணிகளில் அ.தி.மு.க ஈடுபடத் தொடங்கியுள்ளது, 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முடிவெடுத்ததைப்போல், இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

“அ.தி.மு.க-வின் உயர்மட்டக் குழு கூடியிருக்கிறது. தேர்தல் கூட்டணிகள், வியூகங்களைப் பற்றி 15 நாள்களுக்குள் முடிவு செய்வார்கள். அந்த முடிவுகள் என்பது சீக்ரெட். வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாது. தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வந்ததற்குப் பிறகு கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கூடி அந்த முடிவைத் தெரிவிப்பார்கள்.”

பா.ஜ.க உடனான கூட்டணி பற்றி கட்சிக்குள் மாற்றுக் கருத்துகள் நிலவிவருகிறதே?

``எங்களைப் பொறுத்தவரையில் செயற்குழு, பொதுக்குழுதான் முக்கியமான முடிவுகளை எடுக்கும். திராவிட இயக்கத்தின் வழிவந்த அனைத்துக் கட்சிகளிலும் இதுதான் நடைமுறை. தனிநபர்களின் கருத்துகள் கட்சியின் முடிவாகாது.’’

கொடநாட்டுக் கொலை தொடர்பான சர்ச்சைகள் பூதாகரமாகக் கிளம்பியுள்ளதே?

``அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தள்ளுபடியும் செய்யப்பட்டி ருக்கிறது. எந்தத் தவறும் நடைபெறவில்லை என்பதுதான் அதன் பொருள்.’’

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான சர்ச்சையில்  இன்னமும் தெளிவான நிலை எட்டப்படவில்லையே?

``ஆறுமுகசாமி ஆணையம் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது மேலும் கால அவகாசம் கோரியிருக்கிறார்கள். அது முழுவதும் நிறைவடைந்த பிறகுதான் எதுவும் கூற முடியும்.’’

`பெண்பிள்ளைகள் கொலுசு அணிந்து பள்ளிக்குச் சென்றால் மாணவர்களின் கவனம் திசை திரும்பும்’ என்று நீங்கள் கூறியது பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தது. அதைப்பற்றி?


``தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என்ன கட்டுப்பாட்டை வைத்துள்ளார்களோ அதைத்தான் நாங்கள் சொன்னோம். மதத்தின் அடிப்படையிலான அடையாளத்துடன் வருவதில் எந்தத் தடையும் இல்லை. கொலுசு என்பது சத்தம் தரும். அப்படி நடந்து வருகிறபோது சத்தம் ஏற்பட்டால் கவனம் சிதறும் என்பதால்தான் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். எங்கேயும் கட்டாயப் படுத்தவில்லை.’’

மோகன்.இ - படங்கள்: வள்ளிசௌத்ரி.ஆ - ஓவியம்: பிரேம் டாவின்ஸி