
மம்தாவா? மோடியா? - உச்சம் தொட்ட நிழல் யுத்தம்!
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு அருகில் மம்தா பானர்ஜியின் பிரமாண்ட கட் அவுட் ஒன்று கம்பீரமாக நிற்கிறது. ‘இந்த முறை ஒரு வங்காளி பிரதமர் ஆவார். அந்தப் பெருமையை அடையப் போகிறவர் மம்தா பானர்ஜி’ என்று அதன் கீழே வாசகங்கள் ஒளிர்கின்றன. தன்னை வருங்காலப் பிரதமராகவே கற்பனை செய்துகொண்டிருக்கும் மம்தா பானர்ஜிக்கும், பிரதமராக இருக்கும் மோடிக்குமான நிழல் யுத்தத்தில், மேற்கு வங்காள போலீஸாரும் சி.பி.ஐ அதிகாரிகளும் நேரடியாக மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் நிகழும் இந்த மோதலுக்கான ஆரம்பப் புள்ளி உத்தரப் பிரதேசத்தில் தொடங்குகிறது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிவிடும் வலுவுடன் இருக்கிறது. ‘உ.பி-யில் சுமார் 50 எம்.பி தொகுதிகளை பி.ஜே.பி இழக்கும்’ என்கின்றன கணிப்புகள். ‘இந்த இழப்பை எங்கு ஈடு செய்வது?’ என்ற பி.ஜே.பி-யின் தேடலில் முதலிடத்தில் வந்து நிற்பது மேற்கு வங்காளம்தான். ஏனெனில், உ.பி மற்றும் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பது மேற்கு வங்காளத்தில்தான். மொத்தம் 42 தொகுதிகள். கடந்த தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களை வென்றது. காங்கிரஸ் நான்கு இடங்களைப் பிடிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பி.ஜே.பி-யும் தலா இரண்டு தொகுதிகளில் திருப்தி அடைந்தன. இடைப்பட்ட இந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு பி.ஜே.பி கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா, ‘இம்முறை மேற்கு வங்காளத்தில் குறைந்தது 22 தொகுதிகளில் ஜெயிப்போம்’ என்று முழங்கியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸில் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் சிலரை ஈர்த்து, கட்சி தாவச் செய்தார். இதை எல்லாம் தாண்டி மம்தாவை வீழ்த்த பி.ஜே.பி கையில் எடுத்திருக்கும் ஆயுதம், சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு.

பல அரசியல் தலைவர்களைச் சிறைக்கு அனுப்பிய இந்த வழக்கு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ விசாரணையில் உள்ளது. இந்த மோசடியில் மம்தாவை நேரடியாகக் குற்றம்சாட்டுகிறது பி.ஜே.பி. மம்தா பானர்ஜி வரைந்த சில ஓவியங்கள் பொது ஏலம் விடப்பட்டு, நிதி திரட்டப்பட்டது. ‘இந்த ஓவியங்களைக் கோடிகளைக் கொடுத்து விலைக்கு வாங்கியது சாரதா சிட் பண்ட் அதிபர்கள்தான். மம்தாவுக்கு இந்த மோசடியில் நேரடித் தொடர்பு இருக்கிறது’ என அமித் ஷா பொதுக்கூட்டங்களில் பேசினார். ‘ஓவியங்களை ஏலம் விட்டதில் ஒரு பைசா என் கணக்குக்கு வந்ததாக நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன்’ என மம்தா பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் மம்தாவின் ஓவியங்களை விற்க உதவி செய்த மாணிக் மஜும்தார் என்பவரை ஜனவரி 31-ம் தேதி சி.பி.ஐ விசாரித்தது. இதே விவகாரத்தில் மம்தா கட்சியின் அடுத்தகட்டத் தலைவர்களில் ஒருவரான டெரெக் ஓ பிரையனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பிப்ரவரி 2-ம் தேதி மேற்கு வங்காளத்துக்கு வந்த பிரதமர் மோடி, கட்சிக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அடுத்த நாளே கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரின் அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் புகுந்தார்கள். அவர்களில் ஐந்து பேர் மாநில போலீஸாரால் பிடித்து வைக்கப்பட்டனர். (சாரதா சிட் பண்ட் மோசடியை முன்பு விசாரணை செய்த தனிப்படைக்குத் தலைவராக இருந்தவர் ராஜீவ் குமார். ‘முக்கியமான ஆதாரங்களை அவர் அழித்துவிட்டார்’ எனக் குற்றம்சாட்டுகிறது சி.பி.ஐ.) உடனடியாக வீதிக்கு வந்த மம்தா, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற தர்ணா இருப்பதாக அறிவித்தார். இது மாநிலத்தைத் தாண்டித் தேசம் முழுக்கப் பதற்ற அலைகளைப் பரவவிட்டது.

28 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிக்கும் மேற்கு வங்காளத்தில் ரத யாத்திரைகளை நடத்தி, தன் வாக்கு வங்கியை வலிமைப்படுத்த முயற்சி செய்கிறது பி.ஜே.பி. இந்த ரத யாத்திரைக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியது மம்தாவின் காவல் துறை. உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை மாநிலத்தில் அனுமதிக்க மறுத்தார் மம்தா. ‘இந்த இரண்டு விஷயங்களுக்காக சி.பி.ஐ மூலம் பதிலடி கொடுக்க பி.ஜே.பி நினைக்கிறது’ என்பது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் வாதம்.
சி.பி.ஐ எதிர்ப்பு விவகாரத்தால் கலவரம் நடந்தாலோ, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானாலோ, மம்தாவின் பெயர் கெடும். ‘ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிறார்’ என்ற பிரசாரத்துக்கும் அது உதவும். ஒருவேளை போராட்டத்தால் நல்ல பெயர் வாங்கினால், காங்கிரஸுடன் இருக்கும் பல எதிர்க்கட்சிகளை மம்தா தன் பக்கம் இழுப்பார். அது காங்கிரஸுக்குப் பாதகமாக அமையும். ‘இந்த இரண்டில் எது நடந்தாலும் நமக்கு நல்லது’ எனக் காத்திருக்கிறது பி.ஜே.பி.
- தி.முருகன்