
வேட்டையாடப்படும் வெனிசூலா... அமெரிக்காவின் சதி பலிக்குமா?
பத்து வருடங்களுக்கு முன் லத்தின் அமெரிக்காவின் அதிக எண்ணெய் வளமுள்ள ஒரு பணக்கார நாடாகத் திகழ்ந்த வெனிசூலா இன்று வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியால் சீரழிந்து, அரசியல் ஸ்திரத்தன்மை இழந்து கலவர பூமியாகியுள்ளது. மக்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவாய்டோ, அமெரிக்காவின் ஆசியுடன் வெனிசூலாவின் இடைக்கால அதிபராகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். அதிபர் மடூரோ தன் அதிகாரத்தை நிலைநாட்டவும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஒடுக்கவும் ராணுவத்தைப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளார். ரத்தம் சிந்த தயாராகி வருகிறது வெனிசூலா.
ஒருகாலத்தில் வளம் மிக்க நாடாக இருந்த வெனிசூலா, சோஷலிச சித்தாந்தங்களின் இதயத்துடிப்பாக மாறி, 1998-ல் சோஷலிச கொள்கைகளை முன்னிறுத்தியது. அப்போது ஆட்சியைப் பிடித்த ஹூகோ சாவேஸின் ஆட்சிக்காலம் வெனிசூலாவுக்கு ஒரு பொற்காலம். அவர் காலத்தில் அந்நியச் சக்திகள் வெளியேற்றப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படையான எண்ணெய் வளங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. அன்னிய முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நிலங்கள் அரசு உடைமையாக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டன. கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் வருவாயைக் கொண்டு, சாவேஸ் பல சமூக, நலவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தினார். மேற்கு நாடுகளின் தடைகளற்ற வர்த்தகத்துக்குச் சிறந்த மாற்றாகவும், வளர்ச்சிக்கு உதாரணமாகவும் விளங்கியது வெனிசூலா.

ஆனால், சும்மா இருக்குமா அமெரிக்கா? கூடுதலாக ரஷ்யாவிடம் சாவேஸ் காட்டிய நெருக்கம், அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டியது. சாவேஸின் ஆட்சியைக் கவிழ்க்க, கடந்த 2002-ல் எடுக்கப்பட்ட அமெரிக்காவின் முயற்சி, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. அதன் பின்பும் ஆட்சியைக் கவிழ்க்கப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது அமெரிக்கா. இந்த நிலையில்தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாவேஸ், கடந்த 2013-ல் மரணமடைந்தார். அவரால் கைகாட்டப்பட்ட நிக்கோலஸ் மடூரோ அதிபரானார். அவரும் சாவேஸைப் பின்பற்றியதால் அமெரிக்காவின் கோபம் பன்மடங்கு எகிறியது. சாவேஸ் மறைவுக்குப் பின், கச்சா எண்ணெய் வருவாய் குறைந்ததால் வெனிசூலா நிதி நெருக்கடியைச் சந்தித்தது. கடந்த 2014-ல் கச்சா எண்ணெய் விலை சரிந்ததும், வெனிசூலாவின் பொருளாதாரம் மேலும் சீர்குலைந்தது. நிதிப் பற்றாக்குறை அரசின் நல்வாழ்வுத் திட்டங்களை முடக்கியது. இதற்கிடையே அமெரிக்கா, வெனிசூலாமீது பொருளாதாரத் தடை விதித்து, வெளிநாடுகளிலிருந்து கடன் பெறும் அனைத்து வழிகளையும் மூடியது. அதனால் பணவீக்கம் பலமடங்கு உயர்ந்தது. நாணய மதிப்பைக் குறைத்தும் பொருளாதாரம் சீரடையவில்லை.

அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகளின் விலை பலமடங்கு உயர்ந்தன. நாட்டின் 33 சதவிகித மக்கள் வேலை இழந்தனர். மூன்று மில்லியன் மக்கள், வாழ்வாதாரம் தேடிப் புலம் பெயர்ந்தனர். 90 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் தள்ளப்பட்டனர். போராட்டம் வெடித்தது; போராட்டத்துக்கு எதிரான அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியது போன்ற அரசின் பல தவறுகள், மக்களை ஆத்திரமூட்டியதால், போராட்டம் தீவிரமடைந்தது. இதைப் பயன்படுத்திக் கடந்த ஜனவரி 23-ம் தேதி, ‘பாப்புலர் வில்’ கட்சியின் தலைவர் குவான் குவாய்டோ தன்னைத் தற்காலிக அதிபராக அறிவித்துக்கொண்டார். மடூரோவை ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றக் காத்துக்கொண்டிருந்த அமெரிக்கா, விரைவாகக் காய்களை நகர்த்தத் தொடங்கியது. அறிவிப்பு வந்தவுடன் ட்ரம்ப், குவாய்டோவை அதிபராக அங்கீகரித்தார். மடூரோ அரசு சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டது. நிலைமையைச் சீர்செய்ய, 20 மில்லியன் டாலர் நிதி உடனடியாக வழங்கப்பட்டது. பிரிட்டன், கனடா உள்பட 20 மேற்கு நாடுகள் குவாய்டோவுக்கு ஆதரவாக நிற்கின்றன. சீனா, ரஷ்யா, மெக்ஸிகோ, துருக்கி மட்டும் அந்நிய தலையீட்டை வன்மையாகக் கண்டித்தன.

அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த மடூரோ, அமெரிக்க உறவு முறிந்ததாக அறிவித்து, அமெரிக்கத் தூதரகத்தை மூடினார். பல லத்தீன் அமெரிக்க நாடுகள் நடுநிலை வகித்ததால், மடுரோவைத் தனிமைப் படுத்தும், அமெரிக்காவின் சதித்திட்டம் தோல்வியடைந்தது. ஆனால், அரசின் நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்க, அமெரிக்கா மற்றொரு பொருளாதாரத் தடையை அரசு எண்ணெய் நிறுவனம் மீது விதித்தது.
இதற்கிடையே, வெனிசுலா விமானப் படையின் ஜெனரல் பிரான்சிஸ்கோ யேனெஸ் எதிரக்கட்சித் தலைவருக்கு ஆதரவு தெரிவித் துள்ளார். இன்னொருபுறம், வெனிசுலா நிலைமையைச் சரி செய்ய அமெரிக்க ராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.
- கே.ராஜு