அரசியல்
சமூகம்
Published:Updated:

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

நியூட்ரினோ, மீத்தேன் என விவசாயத்தை அழிக்கும் திட்டங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டம். திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. இந்த நிலையில், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், பூமிக்கு அடியில் புதைக்கப்படும் கேபிள்கள் மூலம் உயர்அழுத்த மின்சாரம் கொண்டுசெல்வது சாத்தியம்’’ என்று சொல்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப்பொறியாளர்கள் சங்கத்தின் செயலாளர் வீரப்பன்.

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

இதுகுறித்து அவர் நம்மிடம், “வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களால் தற்போது பூமிக்கடியில் உயர் அழுத்த மின்சாரத்தை எவ்வளவுதூரம் வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும். கடந்த 1996 முதல் 2015 வரை மின் பகிர்மானத் துக்காக உலகம் முழுவதும் 5000 கிலோ மீட்டருக்கு மேல் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதற்காகப் பூமிக்கு அடியில் சுமார் 1.6 மீட்டர் ஆழம் தோண்டினாலே போதுமானது. தற்போது 220 கிலோ வாட், 345 கிலோ வாட், 500 கிலோ வாட் வரை கம்பிகள் பதிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருக்கின்றன. பிரான்ஸுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே 65 கி.மீ தொலைவுக்கு கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. நார்வேவுக்கும் ஜெர்மனுக்கும் இடையே 515 கி.மீ தூரம் மின்சாரம் கேபிளில் கொண்டு  செல்லப்படு கிறது. தற்போது, திருப்பூர் மாவட்டம் புகளூர் முதல் கேரள மாநிலம் திருச்சூர்வரை செல்லும் மின் பாதைத் திட்டத்தில் 30 கி.மீ தூரத்துக்கு 400 கிலோ வாட் மின்சாரத்தை கேபிள் அமைத்துத் தான் கொண்டு  செல்லவிருக்கிறார்கள். மதுரையிலிருந்து இலங்கை அனுராதாபுரத்துக்கு கடலில் கேபிள்கள் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்லவிருக்கிறார்கள். தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் பெருநகரங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் இதுபோன்ற உயர்மின் கோபுரத் திட்டங்களை கேபிள்களாக அமைத்துத்தான் செயல்படுத்தி வருகின்றன.

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

ஆனால், கிராமங்களின் வழியாகச் செல்லும்போது மட்டும் உயர்மின் கோபுரங்களாக விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு அரசுகள் சொல்லும் காரணம், கேபிள்களின் விலை. ஆனால், சீன கேபிள்களின் வரவுக்குப் பிறகு, கேபிள்களின் விலை இரண்டரை மடங்கு குறைந்துவிட்டது. எனவே, கேபிள்களின் வழியே மின்சாரத்தைக் கொண்டு செல்வதைத் தாராளமாக நடைமுறைப்படுத்தலாம். மின் கோபுரம் மூலமாக மின் பகிர்மானம் செய்யும்போது ஆண்டுதோறும் ஏற்படும் மின் இழப்பின் அளவு சுமார் 42,000 கோடி ரூபாய்க்கும் அதிகம். கேபிள்களைப் பொறுத்தவரை அதிகபட்ச மின்சார இழப்பு இரண்டு சதவிகிதம் மட்டுமே. தற்போது 30 சதவிகிதமாக இருக்கும் மின் இழப்பு இரண்டு சதவிகிதமாகக் குறையும். தவிர, கேபிள்களின் ஆயுள் காலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகும். மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் கேபிள்களை உற்பத்தி செய்யலாம். இதனால், பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் காப்பாற்றப்படும்” என்றார்.

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

இதுகுறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். “சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 800 கிலோ வாட் மின்சாரத்தை உயர்மின் கோபுரங்கள் வழியாகத்தான் தமிழகத்தின் மின் தேவைக்காகக் கொண்டு வருகிறோம். உலக அளவில் 800 கிலோ வாட் மின்சாரத்தைப் பூமிக்கடியில் கேபிள் மூலமாகக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் இருந்தால், சொல்லுங்கள் கண்டிப்பாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், அப்படியொரு தொழில்நுட்பம் இல்லை.” என்றவரிடம், “800 கிலோ வாட் மின்சாரத்தைப் பிரித்துக் கொண்டு செல்லலாம் என்கிறார்களே?” என்று கேட்டோம். “எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், அதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. சொல்லப்போனால் அது சாத்தியமே இல்லை” என்றார்.

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கங்களின் ஒருங்கிணைப் பாளரான ஈசன் ரவியிடம் பேசினோம். “தமிழகத்திலேயே 1,200 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது, சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் ஏன்? இந்தத் திட்டத்தில் 800, 750, 400, 350 கிலோ வாட் என 13 திட்டங்கள் இருக்கின்றன. 800 கிலோ வாட்  மின்சாரத்தை 400 கிலோ வாட் மின்சாரமாகப் பிரித்துக் கொண்டுவரலாம். ஆனால், அது சாத்தியமில்லை என்று முரண்டு பிடிக்கிறார் மின்துறை அமைச்சர். இங்கு 350, 400 கிலோ வாட் என்று பலப் பகுதிகளுக்கு மின் பகிர்மானம் செய்ய இருக்கிறது. அதையாவது கேபிள்கள் வழியாகக் கொண்டு செல்லுங்கள் என்று கேட்கிறோம். அதுவும் சாத்தியம் இல்லை என்கிறது அரசு. இப்படி எதுவும் சாத்தியமில்லை என்பதற்கான பின்னணியில் தமிழக மின்துறையின் வர்த்தக நோக்கங்களே காரணமாக நிற்கின்றன” என்றார்.

மின் துறை விவகாரங்களைத் தோண்டினால், நிறைய ‘ஷாக்’ அடிக்கும் போலிருக்கிறது!

- த.ஜெயகுமார்