அரசியல்
சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

@மா.உலகநாதன், திருநீலக்குடி.
‘எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவர் பிரதமர்’ என்கிறாரே அமித் ஷா?


‘டெரர் பார்ட்டி’ என்றுதான் நினைத்தேன். காமெடியும் நன்றாக வருகிறது அமித் ஷாவுக்கு. அதிலும், ‘ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர் பதவிக்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்’ என்று சொல்லியிருப்பது செம காமெடி!

எம்.டி. உமாபார்வதி, சென்னை.
கூட்டணிக்காகக் கடும் நெருக்கடி கொடுக்கிறதே பி.ஜே.பி. ‘முடியாது’ என்று சொல்லிவிட்டால், அ.தி.மு.க ஆட்சி அம்பேல்தானா?


‘முடியாது’ என்று சொல்லக்கூடிய இடத்திலா இருக்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!

@மு.மதிவாணன், காஞ்சிபுரம்.
வாக்குகளுக்காக இலவசங்களை அள்ளித்தர மாட்டோம் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது தாங்களும் அதேபாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்களே!


‘எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’தான் என்பதை பி.ஜே.பி-யும் உறுதிப்படுத்தியுள்ளது. மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் சரியானது. தொடர்ந்து மீனைக் கொடுத்துக்கொண்டே இருந்தால்தான், ஆட்சியைக் கையில் வைத்துக்கொண்டு கொள்ளை அடிக்க முடியும் என்பதுதான் கடந்தகால ஆட்சியாளர்களின் பாணியாக இருந்தது. ‘நாங்கள் வேறமாதிரி’ என்றுதான் கடந்த நான்கு ஆண்டு களுக்கும் மேலாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். இப்போது, ‘அதெல்லாம் கதைக்காகாது’ என்று பழைய பாதையில் தாங்களும் பயணிக்க ஆரம்பித்து விட்டனர். உதாரணத்துக்கு, விவசாயிகள் கேட்பது, விளைச்சலுக்குக் கட்டுப்படியான விலை. ஆனால், ஆறாயிரம் ரூபாயை வங்கியில் போடுகிறோம் என்று சொல்லி வாயை அடைக்கப் பார்க்கிறார்கள்.  

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஒரு மாதிரியாக முடக்கப்பட்டதை அடுத்து, ‘எதிர்காலத்தில் எந்தப் போராட்டமும் வெற்றிபெறாது’ என்று  வலைதளங்களில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனரே?


‘நான் தோற்றுப் போகலாம். அதன் பொருள், வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல’ என்று சொல்வார் சே குவேரா. வெற்றி என்பது, போராட்டத்தின் நோக்கத்தையும், அதற்கான தேவையையும் பொறுத்ததே. ஒரு போராட்டம் தோற்றுவிட்டால், எந்தப் போராட்டமும் வெற்றிபெறாது என்பதெல்லாம் வீண் விவாதங்களே. ஒட்டுமொத்தக் கூட்டமும் கொள்கைப் பிடிப்புடன் முன் நடந்தால், தோல்வி என்பதே கிடையாது. போர்க்குணம்தான் மக்களிடம் இருக்கும் பலமான ஆயுதம். அதை ஒரு காலத்திலும் விட்டுவிடக்கூடாது. ஆனால் பொது நலத்துக்காக அல்லாமல், சுயலாபத்துக்காகவோ, சுயவிளம்பரத் துக்காகவோ அல்லாது, பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய போராட்டங்கள் வெற்றிகாண்பதில்லை.  

கழுகார் பதில்கள்!

@செல்வி. பா.கவின், சென்னை-21.
போதுமான வகுப்பறைகள், கழிவறைகள், கரும்பலகைகள், ஆய்வக மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இவை எல்லாம் இல்லாமல்தான் பல பள்ளிகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதற்காகப் போராடாத ஆசிரியர் மற்றும் அரசுத் துறையினர், சுயநலத்துக்காக மட்டும் போராடுகிறார்களே?


நீங்கள் சொல்பவற்றில் ஒன்றிரண்டைப் பொத்தாம் பொதுவாகத் தங்களுடைய கோரிக்கைகளில் முன்வைத்துள்ளனர். ஆனால், அவற்றை முக்கியப்படுத்தத் தவறிவிட்டனர்.

@எ.ஜேம்ஸ் ராஜசேகரன், மதுரை.
பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி மீது, அவருக்குக்கீழ் பணிபுரிபவர்கள் புகார் கொடுப்பதைத் தமிழகக் காவல் துறை உயர் அதிகாரிகள் சிலரே உற்சாகப்படுத்துகிறார்கள். இதேபோல பிற அதிகாரிகள்மீது புகார் கொடுப்பதை உற்சாகப்படுத்தியது உண்டா?

புகாரா... வாயைத் திறந்தாலே காலி செய்துவிடுவார்கள். உயர் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, உயர் மட்ட அரசியல்வாதிகள், உயர்ந்த இடத்திலிருக்கும் பிரமுகர்கள் என்று பலருக்கும் குடைச்சல் கொடுக்கிறார் பொன்.மாணிக்கவேல். கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கப் போராடுகிறார். ஆனால், கொள்ளையர்களுடன் கூட்டணி போட்டுப் பணியாற்றுபவர்கள் விடுவார்களா? அவருக்கு எதிராகக் கைகோத்து விட்டனர். அதிகாரத்தைக் காட்டினார்கள்; சட்டத்தை நீட்டினார்கள்; விதிமுறைகளை எடுத்துவைத்து நீதிமன்றத்தையே நிலைகுலைய வைக்கப் பார்த்தனர்; உச்ச நீதிமன்றம் வரையிலும் போய் தோற்றுவிட்டனர். இப்போது, கீழ்மட்டத்தில் உள்ளவர்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காய ஆரம்பித்துவிட்டனர்.

கழுகார் பதில்கள்!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.
நாஞ்சில் சம்பத், ‘கழகங்கள் கைவிட்டா லும், கம்பன் தன்னைக் கைவிடவில்லை’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரே!


உண்மைதான்... கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா, தினகரன் என்று மாறிமாறி ஒரு காலத்தில் நம்பிக் கொண்டிருந்தவரை, திருவள்ளுவர், கம்பர், ஔவையார், இளங்கோ போன்றவர்கள்தான் இன்றைக்கு ஒருசேர வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை முன்கூட்டியே உணர்ந்திருந்தால், தமிழ்கூறு நல்லுலகில் தமிழுக்கு மட்டுமான சிறப்புப் பேச்சாளர்களின் வரிசையில் நீண்டகாலத்துக்கு முன்பாகவே நாஞ்சிலும் இணைந் திருப்பார்.

எம்.மரியஏசுதாஸ், மாடத்தட்டுவிளை, கன்னியாகுமரி.
தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி உருவாகுமா?


மீண்டும் அல்ல, எப்போதுமே மக்கள் நலக் கூட்டணிதான் தேவை. ஆமாம், நீங்கள் எந்தக் கூட்டணியைப் பற்றிக் கேட்டீர்கள்?

பி.சாந்தா, மதுரை-14.
தமிழகப் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா தமிழில் நடத்தப்படுவதில்லை. தமிழக அரசு இதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாமே?

இதைப் பற்றிப் பேசினால், ‘மொழி வெறியன்’ என்கிற முத்திரை குத்தி விடுவார்களே! ‘தமிழன்னையின் ஒரே வாரிசு நாங்கள்தான்’ என்றபடி ஆட்சி செய்த கருணாநிதியும், இதே வசனத்தைக் கொஞ்சம்போல மசாலா தூவி ஆட்சி செய்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும், பட்டமளிப்பு உள்ளிட்ட விஷயங்களில் எதையுமே சாதிக்கவில்லையே.

@கருமாரி கணபதி, மடிப்பாக்கம்.
விதியின் மீது நம்பிக்கை இருக்கிறதா கழுகாரே?


ஒரு விதி மீதல்ல, பலவிதமான விதிகளின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டவைதானே விதிகள். அவற்றை நாமே நம்பாவிட்டால் எப்படி? அதே சமயம், ஒருசில விதிகள் காலத்துக்கு ஒவ்வாதவையாகவும், காலாவதியாகிப் போனவையாகவும் உள்ளன. அதை எல்லாம் மாற்றினால், நூறு சதவிகிதம் விதியின் மீது நம்பிக்கை வந்துவிடும்.

@ராஜ்குமார் வெங்கட்ராமன்.
‘கோட்டை அமீர்’ விருது நிறுத்தப்பட்டுள்ளதே?


‘கோட்சே’ பெயரில் ஒரு விருது இருந்திருந்தால் நிறுத்தும் தைரியம் வந்திருக்காது. சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டு வந்த அந்த விருதை நிறுத்தி வைத்ததில் இருந்தே, தங்களின் முதலாளி யார் என்பதை எடப்பாடி பழனிசாமி காட்டிவிட்டார்.

கழுகார் பதில்கள்!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
மகாத்மா காந்தி நினைவு தினத்தன்று அவருடைய உருவபொம்மையைத் துப்பாக்கியால் சுட்டு, ‘கோட்சே வாழ்க’ என்று கோஷமிட்ட இந்து அமைப்பினரின் செயல்பாடு?


காஷ்மீரில் துப்பாக்கி தூக்கியிருப்பவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

@ஆர். சுப்ரமணியன், சென்னை.
வருமானவரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது, உயர்த்தப்படவில்லை என இரண்டுவிதமான கருத்துகள் உலவிக்கொண்டிருக்கின்றனவே?


உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை என்பதுதான் உண்மை. அதே 2.5 லட்ச ரூபாய்தான் இப்போதும் உச்சவரம்பு. ஆனால், ஐந்து லட்சம்வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும், வரித் தள்ளுபடி என்று சலுகையை அறிவித்துள்ளனர். அதாவது, அவர்கள் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. ‘இதற்கு உச்சவரம்பையே உயர்த்தியிருக்கலாமே’ என்று கேட்கத் தோன்றுகிறதுதானே. உச்சவரம்பை உயர்த்தினால், ஒட்டுமொத்தமாக வருமானவரி செலுத்தும் அனைவருக்குமே இந்தச் சலுகை சென்றடைந்துவிடும். அதாவது, ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு யாருக்குமே வரி இருக்காது. அதற்கு மேலான தொகைக்கு மட்டும்தான் வரி. உதாரணத்துக்கு எட்டு லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர், இப்போதைய உச்சவரம்பின்படி, 2.5 லட்சம் போக மீதமுள்ள 5.5 லட்ச ரூபாய்க்கு வரி கட்டியாக வேண்டும். இந்த வரம்பை ஐந்து லட்சம் என்று உயர்த்திவிட்டால், மூன்று லட்சத்துக்கு மட்டுமே வரி கட்டினால் போதும் என்றாகிவிடும். அதனால்தான் வரம்பை உயர்த்தாமல், வரிச்சலுகை என்று யோசித்துள்ளனர்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை,
சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!