மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)

என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)

“ரொம்ப நல்லவரு... ஆனா, வேலை மட்டும் நடக்கலை!”

#EnnaSeitharMP

#MyMPsScore

புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், ராதாகிருஷ்ணன். அதன்பின் காங்கிரஸில் சேர்ந்தார். அடுத்து, ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸில் சேர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி ஆனார். கட்சிகள் மாறி வந்ததாலோ என்னவோ கட்சி வித்தியாசம் இன்றி அனைத்துக் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் அதிகம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் முக்கியத் தலைவர்கள், ‘‘ராதாகிருஷ்ணனா... அவரு ரொம்ப நல்லவருங்க’’ என்கிறார்கள். நண்பர்களுக்கு நல்லவராக இருக்கட்டும். தம்மைத் தேர்ந்தெடுத்த புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகளைச் செய்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்?

காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான நமச்சிவாயத்திடம் பேசினோம். “ ‘மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று சொல்லித்தான் வெற்றிபெற்றார் ராதாகிருஷ்ணன். இத்தனைக்கும் அவரது கட்சியான என்.ஆர் காங்கிரஸ் மத்திய அரசுடன் கூட்டணியில் இருக்கிறது. இவர் நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைக் கேட்டு வாங்கியிருக்க முடியும். ‘மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தைத் தராமல் தடுத்தது. அதனால், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் மாநில அந்தஸ்தை வாங்கிவிடுவோம்’ என்று வாக்குறுதி கொடுத்துத்தான் எம்.பி-ஆனார், அவர். ஆனால், நாடாளுமன்றத்தில் மாநில அந்தஸ்துக்காக இவர் வாய் திறந்ததாகவே தெரியவில்லை” என்றார்.

என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், “நல்ல மனிதர். படித்தவர், பழகுவதற்கு இனிமையானவர். இவரை எம்.பி-யாகத் தேர்ந்தெடுத்தால் மாநிலத்தின் பிரச்னைகள் தீரும் என்று மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்தனர். ஆனால், அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என்று என்.ஆர் காங்கிரஸ் கட்சிதான் இந்தக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தது. இதற்காக இவர் ஒருமுறைகூட நாடாளுமன்றத்தில் குரலெழுப்பவில்லை. காலாப்பட்டு மத்தியப் பல்கலைக் கழகத்தில் 20 பாடப் பிரிவுகளுக்கு மட்டும்தான் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறதே தவிர, மீதமிருக்கும் பாடப்பிரிவுகளுக்கு இல்லை. ராதாகிருஷ்ணன் முயற்சி எடுத்து மத்திய அரசை அணுகியிருந்தால் அந்த இடஒதுக்கீட்டை மாணவர்களுக்குப் பெற்றுத் தந்திருக்க முடியும்” என்றார்.

அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவர் அன்பழகனிடம் பேசினோம். “மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. அதனால், எங்களுக்கு வந்துகொண்டிருந்த 75 சதவிகித மானியத் தொகை 27 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அத்துடன் மத்திய அரசின்மூலம் வர வேண்டிய வரித் தொகைகளும் முறையாகக் கிடைப்பதில்லை. அதேபோல புதுச்சேரி மாநிலத்துக்கு 8,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இப்படிக் கடனில் இருக்கும் சில மாநிலங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி செலுத்தாமல் இருப்பதற்குக் கால அவகாசம் வாங்கிவிடுகின்றன. இதற்காக புதுச்சேரி சார்பில் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை” என்றார்.

“காரைக்கால் மாவட்டத்தில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஓராண்டு முழுவதும் அரிசி வழங்குவதற்கு ரூ. 2.62 கோடி செலவாகும். ஆனால், அரசு தரப்பில் வாங்கியுள்ள கடனுக்கு ஒருநாளைக்கு மட்டும் 2.5 கோடி ரூபாய் வட்டி கட்டுகிறார்கள். நிதிப் பற்றாக்குறையால் தத்தளிக்கும் புதுவை அரசுக்கு, மத்திய அரசிடமிருந்து உதவியைப் பெற்றுத்தர எந்த முயற்சியையும் எம்.பி எடுக்கவிலை. ‘காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை அமைக்கப்படும். பொது மருத்துவமனையை ரூ.30 கோடிக்குச் சீரமைத்து, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் 50 பேருக்கு மருத்துவக் கல்வி அளிக்கப்படும்’ என்றார்கள். நிதி ஒதுக்கீடு செய்தும் மருத்துவமனை கட்டுமான பணியை இதுவரை ஆரம்பிக்கவில்லை. அதுபோல், ‘காரைக்கால் -  பேரளம் இடையே இயங்கி வந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் இயக்குவேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார், ராதாகிருஷ்ணன். அதையும் கண்டுகொள்ளவில்லை” என்கிறார் ம.தி.மு.க-வின் காரை மாவட்டச் செயலாளர் அம்பலவாணன்.

நெடுங்காடு தொகுதியின் என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திர பிரியங்காவோ, “எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வான என் தொகுதிக்குப் புதுவை அரசிடமிருந்து எந்த உதவிகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் எம்.பி நிதியிலிருந்து உதவிக் கேட்டவுடனேயே ஒருமுறை ரூ. 50 லட்சமும் மறுமுறை ரூ. 28 லட்சமும் ஒதுக்கித் தந்தார். அதேபோல மத்திய அரசின் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து காரைக்கால் மாவட்டத்துக்கு ரூ.25 கோடி கிடைப்பதற்கும் அவர் உதவியாக இருந்தார். காரைக்கால் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து, எம்.பி. குறைகளைக் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் தொகுதிக்காக நான் கேட்ட போதெல்லாம் உதவி செய்திருக்கிறார்” என்றார்.

ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற காரைக்கால் மாநில தி.மு.க அமைப்பாளர் நாஜிமிடம் பேசினோம், “தேர்தலின்போது ‘விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வோம்’ என வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார் ராதாகிருஷ்ணன். ஒரு பைசா கடன்கூடத்  தள்ளுபடி செய்யவில்லை. பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகித்தும், நிதிக் கமிஷனில் புதுவை மாநிலத்தை உறுப்பினராக இடம்பெறச் செய்யக்கூட இவரால் முடியவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்த மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்குக்  கிடைக்கும் வருவாயில் 32 சதவிகித நிதி பெறலாம். அதனைக் கொண்டு எவ்வளவோ மாநில வளர்ச்சிப் பணிகளைச் செய்யலாம். குறைந்தபட்சம் புதுவைக்கு ஓர் ஐ.ஐ.டி கொண்டு வந்திருக்கலாம். ரயில்வே திட்டங்களை வலியுறுத்தியிருக்கலாம். எதுவும் செய்யவில்லை” என்றார்.

எம்.பி தத்தெடுத்த கிராமங்களில் ஒன்றான கரையாம்புத்தூர் மக்களிடம் பேசினோம், “எங்க ஊரிலும், பனையடிக்குப்பத்திலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிக் கொடுத்தார். எங்க ஊர்ல இருந்து பாகூர் போகுற பாலத்தை விரிவாக்கம் செஞ்சாரு. சின்னக்கரையாம்புத்தூர்ல கொஞ்சம் ரோடு போட்டுக் குடுத்தாரு. ஆனா, சமுதாயக்கூடம், ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, 24 மணி நேர ஆரம்பச் சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம்னு எங்கள் ஊருக்கு நிறையத் தேவைகள் இருக்குது. அவரும் செஞ்சித் தர்றேனுதான் சொன்னாரு. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்காததால, அதுக்குமேல ஒண்ணும் பண்ண முடியலைனு சொல்லிட்டாரு” என்கின்றனர்.

எம்.பி ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “தனி ஒரு எம்.பி-யாக மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியாது. மாநில அரசின் ஒத்துழைபபுடன்தான் நிறைவேற்ற முடியும்.

எம்.பி நிதியைச் செலவு செய்யக்கூட மாநில அரசின் தயவு தேவை. என்னால் முடிந்தவரை மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக் கிளைக்கு என் முயற்சியால் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தற்போது அங்கு மூன்றாம் ஆண்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ‘உதான்’ திட்டத்தில் புதுச்சேரியிலிருந்து இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏனாமில் ஜிப்மர் மருத்துவமனைக் கிளையை அமைக்க 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சேதராப்பட்டு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் 1,400 கோடி ரூபாய் செலவில் ஜிப்மர் மூலம் உறுப்பு மாற்றுச் சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு முதல்கட்டமாக 564 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாஹேயில் புறவழிச் சாலைக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காத பிரச்னை 32 ஆண்டுகளாக நீடித்துவந்தது. அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதைச் சரி செய்திருக்கிறேன்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நிறைய நிதியுதவி செய்யப்பட்டிருக்கிறது.

காரைக்கால் விவசாயிகளுக்குப் பயிர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஏழு கோடி ரூபாய் பெற்றுத் தந்திருக்கிறேன். புதுச்சேரியில் மத்திய அரசின் திட்ட மதிப்பீடு முந்தைய காலங்களில் அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் வரைதான் இருந்தது. நடப்பு ஆண்டுகளில் சுமார் 1,500 கோடி ரூபாய்வரை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். சுற்றுலாத் துறைக்கு மட்டும் 185 கோடி ரூபாய்வரை பெற்றுக் கொடுத்திருக்கிறேன். தனி மாநில அந்தஸ்து மற்றும் கடன் தள்ளுபடி இரண்டுமே சாத்தியமில்லை என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்தும்போதே தங்களுக்கான நிதியை உயர்த்திக் கேட்க மாநில அரசு தவறிவிட்டது. தற்போதைய நிதிச் சிக்கலுக்குக் காரணம் அதுதான். மத்தியப் பல்கலைக்கழக இடஒதுக்கீட்டிலும் இதே நிலைதான். ஒவ்வொரு முறையும் கூடுதல் பாடப் பிரிவுகள் தொடங்கும்போது நாம் கேட்டிருக்க வேண்டும். நிதிக்கமிஷனில் சேர்ப்பது குறித்து கடந்தகாலங்களில் அவர்களின் கோரிக்கையை வலுவாக வைக்கவில்லை. புதுச்சேரிக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை அடிக்கடி நேரில் சந்தித்து வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார். உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஜெ.முருகன், மு.ராகவன்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

ரெட்டியார்பாளையத்திலுள்ள எம்.பி-யின் வீட்டிலேயே அவரது அலுவலகம் செயல்படுகிறது. உதவியாளர்கள் இருக்கிறார்கள். புதிய பேருந்து நிலையத்தில் இடிக்கப்பட்ட இலவசக் கழிப்பிடக் கட்டடம் பல ஆண்டுகளாகக் கட்டப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில், பயணிகள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிக்கிறார்கள். ‘புதிய பேருந்து நிலையம், நேரு வீதி, சண்டே மார்க்கெட் நடக்கும் காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் இலவசக் கழிவறையை ஏற்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கோகுல்காந்தி மூலம் மனு ஒன்றை எம்.பி அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தோம். இதுவரை நோ ரெஸ்பான்ஸ்.

என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)
என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)
என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)
என்ன செய்தார் எம்.பி? - ராதாகிருஷ்ணன் (புதுச்சேரி)