
சாதி அமைப்பு நடத்திய மாநாடு... சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!
கோவையில் நடைபெற்ற கம்மநாயுடு எழுச்சிப் பேரவை நடத்திய மாநாட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ம.தி.மு.க நிர்வாகி தனமணி வெங்கடபதி ஆகியோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடம்பூர் ராஜூவுக்கு எதிராக அ.தி.மு.க கோவை மாநகர மாவட்டச் செயலாளரும், கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார், “இந்த மாநாட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சிப் பேரவை மாநாடு’ ஜனவரி 27-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. இதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “முதல்வரிடம் நம் கம்மநாயுடு மாநாடு குறித்த அழைப்பிதழைக் காண்பித்து, சிறப்பு அனுமதி வாங்கிக் கலந்துகொண்டிருக்கிறேன். நம்மிடம் எழுச்சி உள்ளது. இதைப் பயன்படுத்திப் புரட்சி செய்ய வேண்டும். உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன். காலம் மாறுகிறதுதான். அதற்காக, பழைமையை மறக்கக் கூடாது. அனைத்துச் சமுதாயத்தையும் அரவணைத்துச் செல்வதே நம் சமுதாயத்தின் சிறப்பு. மதுரையில், மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த தினத்தை அரசு விழாவாக நடத்த முயற்சி எடுத்துள்ளேன். உழவர் பெரும் தலைவர் நாராயணசாமிக்கு 2.30 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசுபவர்தான். அவருக்கு கயத்தாறில் மணி மண்டபம் கட்ட முயற்சி செய்துவருகிறோம். நம் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காகக் குழு அமைத்துச் செயல்படுங்கள். உங்களது தேவைகளுக்கு, அரசு தரப்பில் இருந்து என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன்” என்று முடித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது அவரது கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பேசிய கோவை அ.தி.மு.க-வின் மாநகர, மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், “கம்மநாயுடு பேரவை எதிர்க்கட்சிகளின் முகாமான தி.மு.க மற்றும் ம.தி.மு.க பிரமுகர்களால் இயக்கப்படுகிறது. தேர்தலை மையமாகவைத்தே இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதனால், கோவை அ.தி.மு.க-வினர் இந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தனர். அப்படியிருக்கும்போது, மாவட்டத் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் அமைச்சர் கடம்பூர் ராஜூ இதில் கலந்து கொண்டிருக்கிறார். இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இனிமேல் அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது” என்று பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேச அமைச்சர் கடம்பூர் ராஜூவை பலமுறை தொடர்புகொண்டோம். அவரது உதவியாளர் காளிமுத்துவிடம் விஷயத்தைச் சொன்னோம். “சார் மீட்டிங்கில் இருக்கிறார் கூப்பிடுகிறோம்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டதாகவும் புகார் எழுந்தது. நாம் அவரைத் தொடர்புகொண்டபோது, “நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேயில்லை. என் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர்” என்றார்.
- இரா.குருபிரசாத்
படம் தி.விஜய்
சர்ச்சை பேச்சு
மாநாட்டில் தெலுங்கில் பேசிய ம.தி.மு.க பிரமுகரான தனமணி வெங்கடபதி, “வீரம், புத்தி எல்லாம் சேர்ந்தவர்கள் தான் கம்மர்கள். நாயக்கன் என்றால் ஒப்பற்ற தலைவன் என்று அர்த்தம். தமிழ்நாட்டை கட்டமைத்ததே கம்மர்கள்தான். இதை நான் தைரியமாகச் சொல்கிறேன். யாராவது நம்மை வந்தேறிகள் என்று சொன்னால், ‘நீதான் லெமுரியா கண்டத்தில் இருந்து இங்கே வந்துள்ள வந்தேறி. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்’ என்று தைரியமாகச் சொல்லுங்கள்” என்று பேசிச் சர்ச்சையைக் கிளப்பினார். இதற்குக் கடுமையான கண்டனங்கள் எழவே... தனமணி வெங்கடபதி, ம.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சமூக வலைதளங்களிலும் கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்களுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.