Published:Updated:

பா.ம.க.வினரின் வன்முறை: பட்டியலிட்டார் ஜெயலலிதா

பா.ம.க.வினரின் வன்முறை: பட்டியலிட்டார் ஜெயலலிதா
பா.ம.க.வினரின் வன்முறை: பட்டியலிட்டார் ஜெயலலிதா
பா.ம.க.வினரின் வன்முறை: பட்டியலிட்டார் ஜெயலலிதா

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பா.ம.க.வினர் நடத்திய வன்முறை சம்பவங்களை முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார்.

வட மாவட்டங்களில்  கடந்த   சில    நாட்களாக   நடைபெற்று   வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை அளித்து பேசியதாவது:

பாட்டாளி மக்கள் கட்சியினர் பல இடங்களில் சாலைகளை மறித்து, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து வருகின்றனர்.  வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், கற்களை வீசி வாகனங்களைச் சேதப்படுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி, இக்கட்சியினர் கும்பலாகச் சேர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை வழி மறித்து, அப்பாவி பயணிகள் கண் எதிரிலேயே பீதியை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களைத் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் வழி மறித்து ஓட்டுநர்களை தாக்கி, அவ்வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

இதற்கிடையில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, ராமதாஸை அரசு கைது செய்து சிறையில் அடைத்து, அரசியல் பழிவாங்கும் படலத்தை தொடங்கிவிட்டதாகவும்; ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் அலைக்கழிக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டதாகவும்; கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிக்கை வெளியிட்டார்.  அன்புமணியின் இந்த அறிக்கை "எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் போல்" என்ற பழமொழிக்கேற்ப வன்முறையை தூண்டும் விதமாக அமைந்தது. 
இதனையடுத்து, அக்கட்சியினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சட்ட விரோதச் செயல்களிலும், வன்முறையிலும் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, காஞ்சிபுரம் மாவட்டம் தாமல், உவேரிசத்திரம், வதியூர், வேலூர் மாவட்டம் மருதாலம், கோணலம், பெருங்களத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம், மேல்பூதேரி, சிந்தனைக்கால், திருவள்ளூர் மாவட்டம் புஜ்ஜிரெட்டிப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கும், தனியார் பேருந்துகளுக்கும், லாரிகளுக்கும் தீ வைத்ததில்  வாகனங்கள் சேதமடைந்தன. இத்தகைய ஈவு இரக்கமற்ற சம்பவங்களால், ஓட்டுநர்களும் பயணிகளும் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் முதலில் வாகனங்களை நிறுத்தி பயணிகள் இறங்கிய பின் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தனர். பின்னர் தீவிரவாத இயக்கங்களைப் போல ஓடும் வண்டிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி பயணிகளை பெரும் பீதிக்கும் ஆபத்துக்கும்  உள்ளாக்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமம் அருகே இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சரக்கு லாரியையும், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாரியையும் வழி மறித்துப் பெட்ரோல் எரியூட்டப்பட்ட பாட்டில்களை வீசியதில் அந்த லாரிகள் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில், வட மாநில லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சர்கார் கான் என்பவர் பலத்த தீக் காயம் அடைந்து மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இக்கட்சியினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் பேருந்துகள் மீது கற்களை வீசியதில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இக்கல் வீச்சு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளது மட்டுமின்றி மரணங்களும் நடந்துள்ளன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் முருக்கேறி கிராமம் அருகே ஒரு லாரியை வழி  மறித்து, கல் வீசி தாக்கிய சம்பவத்தில் மரக்காணத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற ஒட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

அது மட்டுமின்றி ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர் சிதம்பரத்தில் இருந்து சேலம் சென்ற அரசு பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது, அப்பேருந்தின் மீது கல் வீசியதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிழக்குக் கடற்கரைச் சாலை கடும்பாடி அருகில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்றின் மீது கல் வீசியதில், அப்பேருந்தில் பயணம் செய்த சென்னை மணலியைச் சேர்ந்த சுதர்சனம் என்பவர் படுகாயம் அடைந்து, சுயநினைவின்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தருமபுரி மாவட்டம், மோட்டான்குறிச்சி அருகே சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வண்டியின் மீது இக்கட்சியினர் எரியூட்டப்பட்ட மண்ணெண்ணெய் பாட்டிலை வீசியதில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை நகராட்சி திருமண மண்டபம் அருகே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் பேருந்து ஒன்றின் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் எரியும் தீப் பந்தத்தை வீசியுள்ளனர். இதில் ஓட்டுநர் காவலர் ராஜகணபதி என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காவல் வாகனமும் தீக்கிரையானது.

##~~##
தருமபுரி மாவட்டம், கராத்தான்  குளம் அருகில், உள்ள ஒரு பாலத்தை பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த இருவர் வெடி பொருட்களை வைத்து தகர்க்க முற்பட்டபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதே போன்று, பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் நாமக்கல் மாவட்டம், ஆத்தூர்-ராசிபுரம் சாலையில் ஒரு பாலத்தை வெடி பொருட்கள் வைத்து தகர்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்து, இரு சக்கர வாகனத்தையும், வாகனத்தில் இருந்த டெட்டோனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றினர்.
விழுப்புரம் மாவட்டம், மோட்டான்குளம் அருகே உள்ள ஒரு வாய்க்கால் பாலத்தை வெடி பொருட்கள் வைத்தும்; காஞ்சிபுரம் மாவட்டம், ஓரத்தி தொழுப்பேடு சாலையில் மின்னல் சித்தாமூர் கிராமத்திற்கு அருகே பாலத்தில் இருந்த சிமெண்ட் பலகைகளைப் பெயர்த்தும் அப்பாலங்கள் சேதப்படுத்தப்பட்டன. தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர்-ஓடசல்பட்டி சாலையில் வேதரம்பட்டி கிராமம் அருகில் சிமெண்ட்டினால் ஆன குழாய் பாலம் ஒன்றை பாட்டாளி மக்கள் கட்சியினர் வெடி பொருட்கள் வைத்து வெடிக்க செய்து சேதப்படுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் சாவடிபுதூர் கிராமத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குழாயினையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெடி பொருட்கள் வைத்துத் தகர்த்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அன்னசாகரம் மற்றும் சேலம் மாவட்டம், சந்தைப்பேட்டை, கருங்காலூர் ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகளின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை எறிந்ததில் ஏற்பட்ட தீயினால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், வேட்டி சேலைகள் ஆகியவை சேதம் அடைந்தன. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஒரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு உர கிடங்கையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தீ வைத்துச் சேதப்படுத்தினர். இச்சம்பவத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உர மூட்டைகள் சேதம் அடைந்தன.
பாட்டாளி மக்கள் கட்சியினர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைகளை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தீ வைத்து கொளுத்தியதோடு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கன்னிகாபுரத்தில் உள்ள சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், எண்டியூரில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து  அவமரியாதையை இழைத்துள்ளனர்.  தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து சென்று செருப்பு மாலையை அகற்றியுள்ளனர்.
விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 22 அரசு மதுபானக் கடைகள் மீது எரியூட்டப்பட்ட தீப்பந்தங்கள் மற்றும் பெட்ரோல் பாட்டில்களை ஜன்னல் வழியாக வீசியும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.  சில மதுபான கடைகளின் பின் சுவற்றில் துளை போட்டு அதன் வழியாக எரியூட்டப்பட்ட பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசி கடைகளுக்குத் தீ வைத்துள்ளனர். இச்சம்பவங்களில் பல லட்சம் மதிப்புள்ள அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டம், கொல்லஹள்ளி என்ற கிராமத்தில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் பட்டாளி மக்கள் கட்சியினர் தீப் பந்தத்தை எறிந்ததில் அலுவலகத்தில் இருந்த பல ஆவணங்கள், அலுவலகப் பொருட்கள் மற்றும் மரச் சாமான்கள் சேதம் அடைந்தன. 17 குடிசை வீடுகள், பெட்டிக் கடைகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றையும் பட்டாளி மக்கள் கட்சியினர் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், நெமிலி அருகே கல் வீச்சு சம்பவம் தொடர்பாக பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்களை நெமிலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர்.  அப்போது, காவல் துறையினரை முற்றுகையிட்டு சட்டவிரோதமாக நிறுத்தி வைத்து பட்டாளி மக்கள் கட்சியினர் தகராறு செய்தனர். தகவல் கிடைத்த அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மற்றும் நெமிலி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, பட்டாளி மக்கள் கட்சியினர் காவல் வாகனங்களை கல் வீசி தாக்கி சேதப்படுத்தியதோடு, பெண் ஆய்வாளரையும் தாக்க முயன்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலைய சரகம், அண்ணா மடுவில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.ரமணிதரன் அவர்களது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சைக்கிள் டயரில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து விஷமிகள் உள்ளே வீசியதில், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், குளிர் சாதன இயந்திரம், மரப் பொருட்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்துள்ளன. இது தொடர்பாக, 5.5.2013 அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, அந்தியூர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய முன்னாள் அமைப்பாளர் திரு. குருசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் இத்தீ வைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்தது தெரிய வந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் திரு. குருசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
3.5.2013 அன்று இரவு காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் காவல் நிலைய சரகம், பவுஞ்சூரில், செய்யூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.எஸ்.ராஜு அவர்களது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரின் மீது எரியூட்டப்பட்ட மண்ணெண்ணை நிரப்பிய பாட்டிலை வீசி காரை தீக்கிரையாக்க விஷமிகள் முயன்றுள்ளனர். விஷமிகள் வீசிய பாட்டில் காரின் பின்புறம் பட்டு கீழே விழுந்து உடைந்து நெருப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளது. தீ வைப்பு சம்பவங்கள் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் வாகனங்களை மறித்து, அவர்களை பணி செய்யவிடாமல் பட்டாளி மக்கள் கட்சியினர் தடுத்துள்ளனர். இதனால், அத்துறையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று தீயணைப்புப் பணிகளில் ஈடுபட இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
30.4.2013 அன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ராமதாஸ் உள்ளிட்டோர் அன்று சட்டவிரோதமாக தடையை மீறி கூடிய போது அவர்களை காவல் துறையினர் கைது செய்த காரணத்திற்காக, அக்கட்சியினர் மாநிலத்தில் பல இடங்களில் தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு, பேருந்துகள்  மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தீ வைத்தல், பேருந்துகள் மீது கல் வீசி பயணிகளுக்கு காயம் விளைவித்தல், நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களை வெடி பொருட்கள் வைத்து சேதப்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து சாலைகளில் தடைகள் ஏற்படுத்துதல், மரங்களை தீ வைத்து கொளுத்துதல், ஓடுகிற ரயில் வண்டி மீது தீப் பந்தத்தை எறிதல், அரசு அலுவலகங்கள், அரசு கிடங்குகள், நியாய விலைக் கடைகள், பேருந்துப் பணிமனைகள் ஆகிவற்றைத் தீ வைத்து சேதப்படுத்துதல், காவல் துறை வாகனங்களைத் தாக்கியும், தீ வைத்தும் சேதப்படுத்துதல், பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயை சேதப்படுத்துதல், இத்தகைய மக்கள் விரோத செயல்களைத் தடுக்க முயன்ற காவலர்களை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்துத் தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.