அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

சிரிப்புப் பொங்க அலைபேசியில் பேசிக்கொண்டே வந்த கழுகார், பேசி முடித்ததும், ‘‘ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்... நீரும் சிரிப்பீர்’’ என்று பீடிகைபோட, ‘‘சொல்லும் சொல்லும்!’’ என்று உற்சாகம் காட்டினோம்.

‘‘கடந்த ஆண்டில் சென்னைக்குப் பிரதமர் வந்திருந்தபோது, தமிழக அமைச்சர்கள் வரிசையாக நின்று அவரை வரவேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும், ‘இவர் வேலுமணி, இவர் தங்கமணி, இவர் வீரமணி, இவர் மணிகண்டன்’ என்று சொல்லி அறிமுகப் படுத்தினார் ஓர் அதிகாரி. உடனே பிரதமர், ‘‘ஓ! ஆல் மணிஸ் ஆர் ஹியர்!’’ என்று சொல்லிக்கொண்டே சிரித்தபடிக் கடந்திருக்கிறார். இந்த கமென்ட், ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் அப்போது வைரலானது.’’

‘‘சரி, சிரிப்பு வருகிறது... அதற்கு என்ன இப்போது?’’

‘‘இப்போது அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்துவரும் நிலையில், இந்த ‘மணி’ மேட்டரைத்தான், முக்கிய ஆயுதமாகக் கையாள முடிவு செய்திருக்கிறது, தி.மு.க.’’

‘‘அதுதான் முதல்வர், வேலுமணி என்று பலர் மீது வழக்குப்போட்டு வைத்திருக்கிறார்களே?’’

‘‘இப்போது துறைவாரியாக பல விஷயங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே சத்துணவுத் திட்டத்தில் கிறிஸ்டி ஃபுட்ஸ் நிறுவனம், லஞ்சமாகவே 2,400 கோடி ரூபாய் கொடுத்திருப்பது, வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்களிலேயே தெரிந்துவிட்டது. அதன்பின், நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை டெண் டர்களில் நடந்துள்ள ஊழல்களுக்கு, பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தி.மு.க சமர்ப்பித்திருக்கிறது!’’

‘‘புதிதாக என்ன கண்டு பிடித்திருக்கிறார்கள்?’’

‘‘பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்–டாப், சைக்கிள், செருப்பு, ஸ்கூல் பேக் என 14 விதமான இலவசப் பொருள்களை அரசு வழங்குகிறது. லேப்–டாப்களை ஐ.டி துறையின் கீழ் வரும் ‘எல்காட்’ நிறுவனமும், சைக்கிளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், மற்ற பொருள்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் கொள்முதல் செய்து வழங்குகின்றன. இதில்தான், ஒவ்வொரு டெண்டரிலும் என்னென்ன முறைகேடு, எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என்று பல விஷயங்களைத் துருவி எடுத்திருக்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

‘‘பலே... பலே... ஒவ்வொன்றாகச் சொல்லும்!’’

‘‘இந்த ஆண்டில் மட்டும், 2300 கோடி ரூபாய் மதிப்பில் 15 லட்சத்து 66 ஆயிரம் லேப்–டாப்களை கொள்முதல் செய்கிறது தமிழக அரசு. இதற்கான டெண்டர் பட்டியலில் ஹெச்.பி மற்றும் லெனோவா நிறுவனங்கள் இருந்தன. கடைசியில் ‘லெனோவா’ நிறுவனத்தின் லேப்-டாப் வாங்குவதற்கு டெண்டர் உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு லேப்-டாப்புக்கும் அரசு, பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவிடுகிறது. ஆனால், கடந்த ஆண்டுகளைவிட தரமும், திறனும் குறைந்த லேப்-டாப்களை அரசு வாங்குவதாகச் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. தொழில்நுட்பம் அறிந்தவர்கள்,  ‘தற்போது வாங்கப்படவிருக்கும் லேப்டாப்கள் திறன் குறைவானவை. அவற்றின் பாகங்களும் தரம் குறைந்தவை’ என்று பட்டியலிடுகிறார்கள்.’’

‘‘முதல்வர் அதை மாற்றச் சொல்லியிருக்கிறார் என்று தகவல் வந்ததே?’’

‘‘எதுவும் மாற்றப்படவில்லை. நூறு ரூபாய் மட்டும் விலையைக் குறைத்திருக்கிறார்களாம். ஒரு லேப்-டாப்புக்கு 400 ரூபாய்வரை, துறையின் முக்கியப் புள்ளிக்கு கமிஷனாகப் போயிருக்கிறதாம். அதைத் தவிர்த்து, முடிவு செய்த அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் சேர்த்து, 1,500 ரூபாய் கமிஷன் என்று பேசப்பட்டிருக்கிறதாம். தி.மு.க தரப்பில், ‘பழைய லேப்-டாப்பைவிட இது திறன் குறைவு என்பதைத் தொழில்நுட்ப ரீதியாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கவும் தயார்’ என்று முஷ்டியை முறுக்குகிறார்கள்.’’

‘‘சைக்கிளில் என்ன பிரச்னை?’’

‘‘டெண்டரில் நிறுவனங்கள் பங்கேற்பதற்கான விதிமுறைகளிலேயே, பலரைக் கழற்றி விடுவதற்கான வேலைகள் நடந்துள்ளன. குறைந்தபட்சம் இரண்டு லட்சம் சைக்கிள்களை, அரசுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார்கள். இதனால், மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் மட்டுமே, டெண்டரில் பங்கேற்க முடிகிறது. இதையே ஒரு லட்சம் சைக்கிள் சப்ளை செய்திருந்தால் போதும் என்று குறைத்திருந்தால், இன்னும் பல கம்பெனிகள் பங்கேற்று இருக்கும். விலையும் குறைந்திருக்கும். தரமும் அதிகரித்து இருக்கும். ஒரு சைக்கிளுக்கு 600 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரை கமிஷனாக தரப்பட வேண்டும் என்பது உத்தரவாம். இந்த ஆண்டில், 438 கோடி ரூபாய்க்கு, 11.78 லட்சம் சைக்கிள்களை கொள்முதல் செய்யும்போது, எவ்வளவு கமிஷன் போகும் என்று கணக்குப் போட்டுக்கொள்ளும்!’’

‘‘தலை சுற்றுகிறது... சரி, செருப்பு விவகாரம்?’’

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

‘‘ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரை படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு இலவசச் செருப்பு தருவதற்கு, ஆண்டுதோறும் டெண்டர் விடப்படுகிறது. இதில் கலந்துகொள்வது எல்லாமே, டெல்லியைச் சேர்ந்த நிறுவனங்கள் தான். கடந்த ஆண்டில் பாட்டா உள்ளிட்ட ஏழு கம்பெனிகளுக்கு இந்த டெண்டர் கொடுக்கப் பட்டது. இந்த ஆண்டில், சிண்டிகேட் போட்டு மூன்று நிறுவனங்களை மட்டும் வரவைத்து, டெண்டரை இறுதி செய்திருக்கிறார்கள். இதில் டெஸ்டிங் ஏஜென்சியை வைத்தே பல நிறுவனங்களைக் கழற்றிவிட்டு, தாங்கள் நினைக்கும் நிறுவனத்தின் தயாரிப்பை மட்டும் வாங்க ஏற்பாடு செய்கிறார்களாம்.’’

‘‘விளக்கமாகச் சொல்லும்!’’

‘‘பள்ளி மாணவர்களுக்குத் தரப்படும் செருப்புகள் அனைத்தும், பி.வி.சி ரகத்தைச் சேர்ந் தவை. டெல்லியிலுள்ள காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாடு மையம்தான், இந்தச் செருப்பு களின் தரத்தை ஆய்வு செய்வதற்கு, தகுதியான அமைப்பு. ஆனால், சென்னையிலுள்ள மத்தியத் தோல் ஆராய்ச்சி மையத்தை (சி.எல்.ஆர்.ஐ) இதற்கான டெஸ்ட்டிங் ஏஜென்சியாக நியமித் திருக்கிறார்கள். ‘தோல் பொருள்களின் தரத்தை ஆய்வு செய்யும் சி.எல்.ஆர்.ஐ-யிடம், பி.வி.சி செருப்புகளை ஆய்வு செய்யச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?’ என்கிறது தி.மு.க தரப்பு. இந்த வகையில், ஒரு ஜோடி செருப்புக்கு 20 ரூபாய் வரை கமிஷன் போகிறதாம். 70 லட்சம் ஜோடிகளுக்கு கமிஷன் எவ்வளவு என்பதைக் கணக்குப் போட்டுப் பாரும்!’’

‘‘ஸ்கூல் பேக்?’’

‘‘அவை எல்லாமே பிளாஸ்டிக் சம்பந்தப் பட்டவை. அவற்றின் தரத்தை ஆய்வு செய்வதற்கு, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ‘சிப்பெட்’தான் சரியான நிறுவனம். ஆனால், அதையும்கூட தோல்நிறுவனமான சி.எல்.ஆர்.ஐ-யில்தான் தரப்பரிசோதனை செய்யப் போகிறார்களாம். இதிலும் ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கே டெண்டரை இறுதி செய்வதாகச் சொல்கிறார்கள்.’’

‘‘இதை எல்லாம் தோண்டி என்ன செய்யப் போகிறதாம் தி.மு.க?’’

‘‘சத்துணவுத் திட்டத்தில் பருப்பு ஊழல் தொடங்கிச் செருப்பு ஊழல் வரை விலாவாரியாக விவரித்து, ‘செருப்பு முதல் பருப்பு வரை... ஊழலின் ஊர்வலம்’ என்கிற தலைப்பில் புத்தகம் போட்டு, தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் விநியோகிக்கும் திட்டம் இருக்கிறதாம். இதில், சில அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களின் பட்டியலும் இடம் பெறுமாம்.’’

‘‘இதற்கெல்லாம் அமைச்சர்கள் பயப்படுவார் களா என்ன?’’

‘‘இதுவரை எப்படியோ... இப்போது கொஞ்சம் பயப்படுகிறார்கள் என்கிறார்கள். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சருக்குச் சொந்தமாக 52 பினாமி கம்பெனிகள் இருக்கிறதாம். அந்த அமைச்சர், தனது ஊரைச் சேர்ந்த ஒரு வருமானவரித் துறை அதிகாரியைப் பிடித்து, ரெய்டு விவரங்களை முன்கூட்டியே தகவல் தரச் சொல்லி கேட்டுக்கொண்டாராம். அதற்கு அந்த அதிகாரி, ‘என்னையும் உளவுத்துறை கண்காணிக்கிறது. உங்களுக்கு உதவினால் சிக்கிக் கொள்வேன்’ என்று கையை விரித்துவிட்டாராம்.’’

“ ‘நாடாளுமன்றத் தேர்தல்வரை நான்தான் தலைவர்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சொன்ன ஒரே வாரத்தில் பதவி பறிபோய்விட்டதே?”

“ராகுல் காந்தி இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று திருநாவுக்கரசரே நினைக்கவில்லையாம். அவருடைய முன்னாள் நண்பர் கே.ஆர்.ராமசாமி கொடுத்த கடிதம்தான் பதவி பறிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.”
“என்ன அது?”

மிஸ்டர் கழுகு: நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!

திருநாவுக்கரசரை மாற்றுவதற்கு தமிழகத் தலைவர்கள் பலரும் டெல்லிக்குப் படையெடுத்து, பலன் கிடைக்காத நிலையில், சில கோஷ்டி தலைவர்கள் ராமசாமி தரப்பை அணுகி, ‘உங்கள் தரப்பில் கடிதம் கொடுத்தால்தான் கதை நடக்கும்’ என்று தூபம் போட்டுள்ளார்கள். சமீபத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ராமசாமிக்கும் திருநாவுக்கரசருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம். அதன்பிறகு இருவருக்கும் ஒத்துப் போகாத நிலையில்தான் நீண்ட யோசனைக்குப் பிறகு அவர் தரப்பிலிருந்து கடிதத்தை அனுப்பினாராம். அந்தக் கடிதத்தில் இருந்த விவரங்கள் இன்னும் வெளியே தெரியவில்லை. அதுதான் பதவி பறிப்புக்குக் காரணமாகிவிட்டது என்கிறார்கள்.”

“பதவி பறிப்புக்குப் பிறகு ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளா ராமே திருநாவுக்கரசர்?”

“அவருடைய பதவி பறிபோகும் விஷயம் ஜனவரி 30-ம் தேதியே தெரியுமாம். அன்றே டெல்லியிலிருந்து தொடர்பு கொண்டு, விஸ்வநாதன் மூலம் தகவலைச் சொல்லியுள்ளார் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக். இந்தத் தகவல் திருநாவுக்கரசருக்குத் தெரிந்ததும், டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்திக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆனால், நேரம் கொடுக்கப்படவில்லையாம். பிப்ரவரி 2-ம் தேதி மாலை அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால், திருநாவுக்கரசரைத் தொடர்பு கொண்டு, ‘இன்று அறிவிப்பு வரப் போகிறது’ என்று சொல்லியுள்ளார்.

“ஒகோ!”

“அறிவிப்பு வந்த பிறகுதான் ராகுல் காந்தி சந்திப்புக்கு அனுமதி கிடைத் துள்ளது. சில நெருக்கடிகளை அப்போது திருநாவுக்கரசர் சொல்லி யுள்ளார். தனக்குத் தேசியச் செயலாளர் பதவி வேண்டும் என்று சொல்லியுள்ளார். ராகுல் காந்தி தரப்பில் பாஸிட்டிவான பதில் வந்துள்ளது. பதவி பறிக்கப்பட்ட ஒருவரை ராகுல் சந்திப்பது வழக்கத்துக்கு மாறானது. அந்த வகையில் திருநாவுக்கரசர்மீது ராகுல் நல்ல மரியாதை வைத்திருக் கிறார் என்கிறார்கள். அதேநேரம் கே.எஸ்.அழகிரியை தலைவராக்கி தமிழக காங்கிரஸ் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார் ப.சிதம்பரம் என்ற பேச்சும் பலமாக உள்ளது.”

“அது உண்மைதானே?”

“ஆமாம். அழகிரிக்கு அடையாளம் கொடுத்ததில் ப.சிதம்பரம் முக்கிய மானவர். ஏற்கெனவே தலைவர் மாற்றம் குறித்த சர்ச்சைகள் எழுந்த போது, ப.சிதம்பரத்திடம் ஆலோசனை நடத்தியிருந்தார் ராகுல் காந்தி. இப்போது தன்னுடைய ஆதரவாளரான ராமசாமியை கடிதம் எழுதவைத்து, தன்னுடைய ஆதரவாளர் அழகிரியை தலைவர் பதவிக்கும் கொண்டுவந்துவிட்டார்” என்ற கழுகார், சிறகை விரித்துப் பறந்தார்.

படம்: எம்.விஜயகுமார்