
பட்ஜெட் 2019: யாருக்கான பட்ஜெட் இது?
“எங்கள் அரசின் முயற்சியால் எப்போதும் இல்லாத அளவில் நாட்டில் ஏழ்மை குறைந்துள்ளது” - கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள் இவை. இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “திறமையற்ற ஆட்சியாலும் ஆணவத்தாலும் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் விவசாயிகளை இந்த அரசு அழித்துவிட்டது. ஒருநாளைக்கு விவசாயிகளுக்கு வெறும் 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமதிக்கும் செயல்” என்று விமர்சித்திருந்தார். சரி, இந்த பட்ஜெட் யாருக்கானது? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்
``பசு மாடுகளைப் பாதுகாக்க 750 கோடி ரூபாயை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், முறைசாராத் தொழிலாளர்களுக்கு 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார் கள். மாட்டைவிடக் கேவலமாகப் போய் விட்டார்கள் ஒடுக்கப்பட்ட மனிதர்கள். பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு 6,000 ரூபாயை அறிவித்திருக்கிறார்கள். விளைபொருள்களுக்கு உரிய விலையைக் கொடுத்திருந்தால், இந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது. புதியத் தொழில்களையோ வேலைவாய்ப்புகளையோ இந்த அரசு கொண்டு வரவே இல்லை. ‘11 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கிறோம்’ என அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சொல்கிறது. சி.எம்.ஐ.இ நடத்தியக் கூட்டத்திலும் இதே கருத்து வெளிப்பட்டிருக்கிறது.
கோவையில் ஐந்தாயிரம் லேத் பட்டறைகள் மூடப்பட்டுவிட்டன. பத்தாயிரம் பேர் வேலை இழந்துவிட்டார்கள். திருப்பூரிலும் இதே நிலைதான். சிவகாசியில், பட்டாசுத் தொழிலில் நேரடியாக மூன்றரை லட்சம் பேருக்கு வேலை போய்விட்டது. மறைமுகமாக நான்கு லட்சம் பேருக்கு வேலை போய்விட்டது. தமிழ்நாட்டில் இப்படி பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்திருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் இல்லை. ஜனவரி மாதக் கணக்கின்படி, ஜி.எஸ்.டி-யில் ஏற்கெனவே வர வேண்டியத் தொகையில் ஒரு லட்சம் கோடி குறைந்திருக்கிறது. இதனால் மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடியத் தொகையும் குறையும். சுருக்கமாகச் சொன்னால், விழுமியங்களையும் மரபுகளையும் அழித்து உருவாக்கப்பட்ட மோசடியான பட்ஜெட் இது. இதில் சொல்லப் பட்டிருப்பவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை”.

கே.டி.ராகவன், மாநிலச் செயலாளர், பி.ஜே.பி
“விவசாயிகளின் வருட வருமானமாக 6,000 ரூபாய் அறிவித்திருப்பது இந்த அரசின் சாதனை. முறைசாராத் தொழி லாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் என அனைத்துத் தரப்பு மக்களுக்கான பட்ஜெட்டாகத் திகழ்கிறது, இது. `2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவோம்’ எனப் பிரதமர் கூறியிருக்கிறார். அதற்கான அடிப்படை விஷயங்களை இப்போது செய்திருக்கிறோம். மக்களுக்காக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்குத் தோல்வி பயம் ஏற்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு தொடர்பாக இவர்கள் சொல்லும் அறிக்கை எதுவும் அரசுத் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. ஒரு பொய் யான அறிக்கையை வைத்துக்கொண்டு பேசுகிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.5 சதவிகிதத்துக்கு மேல் போகும்போது, வேலைவாய்ப்பு எப்படி இல்லாமல் போகும்? உலக அரங்கில் நமது பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. உலகளவில் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறோம். அப்படி இருக்கும்போது வேலைவாய்ப்பும் சேர்ந்துதானே பெருகும். முத்ரா திட்டத்தில் பல கோடிப் பேர் பலன் அடைந்துள்ளனர். போலியான அறிக்கைகளை வைத்துக் கொண்டு பேசுவதால் மக்கள் நம்பிவிட மாட்டார்கள். ஐந்து லட்சத்துக்கு வரி விலக்கு என்ற திட்டத்தை முன்னரே கொண்டு வந்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் அரசின் தவறான செயல்பாடுகளால் 2014-ம் ஆண்டு பொருளாதாரத்தில் வீழ்ந்துவிடும் நிலையில் இருந்தோம். அதைச் சரி செய்யவே நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் 2014-ம் ஆண்டு 6.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நேரடி வரி வருவாய், இப்போது 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. மறைமுக வரி வருவாயும் பெருகியிருக்கிறது.
வெங்கட்ராமன், வேளாண் பொருளாதார நிபுணர்
“விவசாயிகளுக்கான நிதியுதவி, ஏக்கருக்கு 24,000 ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஆனால், மத்திய அரசின் பட்ஜெட்டில் இரண்டு ஹெக்டேர்வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது ஏமாற்றமே. தவிர, இது ஒன்றும் சாதனையும் அல்ல. உலகம் முழுவதும் வழங்கப்படுவதுதான். இந்த நிதியுதவிக்கு ‘ஆம்பர் பாக்ஸ்’ என்று பெயர். அதாவது, விவசாயிகளுக்குப் பல்வேறு மானியங் கள் அளிக்கப்பட்டாலும், அவர்களது உற்பத்திப் பொருளுக்கான உரிய விலை இல்லாதது, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் உழைப்புப் போன்றவற்றுக்கு என ‘கொடுக்கப்படாத விலை’ ஒன்று இருக்கிறது. அதற்கான மாற்றுதான் இந்த நிதியுதவி. நம் நாட்டின் விவசாயச் சூழலை ஒப்பிட்டால் வருடத்துக்கு ஆறாயிரம் ரூபாய் என்பது விவசாயிகளின் ஏழ்மையையும் கேலி செய்வதுபோல உள்ளது. சொல்லப் போனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஓட்டுக்குக் கொடுக்கப்படும் லஞ்சம் இது.
- ஆ.விஜயானந்த், பா.முகிலன்,
படம்: வீ.சக்திஅருணகிரி