அரசியல்
சமூகம்
Published:Updated:

ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?

ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?

ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?

“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும்” என்று ‘தர்மயுத்தம்‘ நடத்திய ஓ.பன்னீர் செல்வத்துக்கு இப்போது அதே ஆறுமுகசாமி ஆணையத்தால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது ஆணையத்தில் ஆஜராகும்பட்சத்தில், மோடியை இழுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார் பன்னீர்செல்வம். பல்வேறு வகைகளில் பி.ஜே.பி தரப்புடன் நெருக்கம் காட்டி வரும் பன்னீர்செல்வம், மோடிக்கு எதிராகப் பேசுவதைத் தவிர்க்கவே, ஆணைய விசாரணைக்கு ஆஜராவதைத் தவிர்த்து வந்தார். ஆனால், க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. இனி என்ன செய்யப் போகிறார் பன்னீர்செல்வம்?

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப் பட்டுள்ளனர். ஆனால், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் நான்கு முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. கடந்த 2018, டிசம்பர், 20-ம் தேதி முதல்முறையாக ஆணையத் திலிருந்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது ஆஜராக முடியாததால், ஜனவரி மாதம் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஜனவரி 23-, பிப்ரவரி முதல் வாரம் எனத் தொடர்ந்து தள்ளி வைத்துக்கொண்டே இருந்தார் பன்னீர்செல்வம்.

இதுகுறித்து ஆணையத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்துவரும் சிலர், “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் தர்ம யுத்தத்தின்போது பன்னீர்செல்வம் வைத்த முக்கியமான கோரிக்கை. அதைவைத்தே அணிகள் இணைப்புக்கும் ஒப்புக்கொண்டார். அணிகள் இணைந்தவுடனே ஆணையம் அமைக்கப்பட, சசிகலா தரப்புக்கு நெருக்கடி உருவாகும் என்று எதிர்பார்த்தது பன்னீர் செல்வம் தரப்பு. ஆரம்பத்தில் நெருக்கடி போலத் தோன்றினாலும், நாள்கள் செல்லச்செல்ல சசிகலா தரப்புக்குச் சாதகமாகவே மாறியது ஆணைய விசாரணை. இதுதான் இப்போது பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?

‘அப்போலோவில் சிகிச்சையிலிருந்த ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி எனக்குச் சொல்லப்படவும் இல்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டுச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதை யார் தடுத்தார்கள் என்பது தெரியவேண்டும்?’ ஆகிய சந்தேகங்களை எல்லாம் பன்னீர்செல்வம் எழுப்பியிருந்தார். ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சசிகலாவின் முழுக்கட்டுப்பாட்டிலேயே இருந்தார் என்கிற ரீதியில் அவரது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரிடம் சசிகலா தரப்பின் குறுக்கு விசாரணையில் வெளியான தகவல்களோ வேறு மாதிரியாக இருந்தன. 

ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணையின்போது, ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தான் முதல்வராகப் பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று எப்போதாவது உங்களிடம் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறாரா பன்னீர்செல்வம்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘இல்லை’ என்றே பதில் வந்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த சாட்சியத்தில், ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்த அமைச்சரவைக்கூட்டம் அல்லது தனிப்பட்ட முறையிலான சந்திப்புகளில் ஒ.பி.எஸ் சிலமுறை பங்கேற்றுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ட்ரைக்யாஷ்டமி சிகிச்சைக்கு ஜெயலலிதாவை அழைத்துச் செல்லும்போது, மருத்துவமனை வளாகத்தில் பன்னீர்செல்வம் இருந்ததாக அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்களே?’ என்ற கேள்விக்கு, ‘அப்படி என்றால் அது சரியாகத்தான் இருக்கும்’ என்று சொல்லியுள்ளார் விஜயபாஸ்கர்.

பொன்னையனிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் வெளியான தகவல்களிலும் பல முரண்பாடுகள் இருந்தன. அதேபோல், ‘2016, டிசம்பர் 4-ம் தேதியே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால்தான் (அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மரணதேதி டிசம்பர் 5) கவர்னராக இருந்த வித்யா சாகராவ், மேல்தளத்துக்குச் செல்லாமல் கீழேயே இருந்துவிட்டாரா?’ என்ற கேள்வியும் ஆணையம் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, மத்திய அமைச்சராக இருந்த வெங்கைய்யா நாயுடு, அப்போலோவில்தான் இருந்தார்’ என்று பலரும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்தெல்லாம் அப்போது பொறுப்பு முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் பதில் சொல்லவேண்டியுள்ளது. முக்கியமாக, ‘ஜெயலலிதாவை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்வதைத் தடுத்தது யார்?’ என்று ஏற்கெனவே அவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும். அவருக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக சில உண்மைகள் ஏற்கெனவே தெரிந்திருக்கின்றன. அதனால்தான் அப்படியொரு கேள்வியை அப்போது எழுப்பினார். அது சசிகலாவுக்கு எதிராகப் போகும் என்று நினைத்தார். ஆனால், அவர் எழுப்பிய கேள்வி அப்படியேதான் இருக்கிறது. அந்தக் கேள்வியில் தொடர்புடைய வர்கள் யார் யார் என்கிற விவரங்கள் வெளியில் வந்தே ஆகவேண்டும்” என்றவர்கள், ஆணையத்தின் விசாரணையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் எப்படி அடிபடும் என்பது குறித்தும் தகவல்களைப் பகிர்ந்தனர்.

ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?

“ஆணையத்தின் தரப்பில், ‘எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு வந்து, எம்.ஜி.ஆரை வெளிநாட்டுக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தது தெரியுமா?’ என்ற கேள்வியை பலரிடமும் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் சிகிச்சை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் தமிழக கவர்னர் அனுப்பி வைத்த அறிக்கைகளில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை அறிந்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டியது ஆணையம். இந்த விஷயங்களையெல்லாம் வைத்துதான் தற்போது பலவாறான சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. ‘கவர்னரின் அறிக்கையில் என்னவோ இருக்கிறது. அது மத்திய அரசுக்கும் கவர்னருக்கும் இடையேயான ரகசியமாகவே இருக்கிறது. அந்த அறிக்கையில் இருந்தது என்ன என்பது தெரிந்தால்தான், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்களுக்கு விடை கிடைக்கும்’ என்று சசிகலா தரப்பிலிருந்து பேச ஆரம்பித்துள்ளனர். இதையெல்லாம் மோப்பம் பிடித்துத்தான், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பகீர் கிளப்பியிருக்கிறார்.

ஜெயலலிதாவை வெளிநாட்டு சிசிக்சைக்குக் கொண்டுசெல்வதற்கு உதவ மத்திய அரசுத் தயாராக இருந்ததா, இல்லையா என்று நேரடியாக இதுவரை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை. அதனால் அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திடம், ‘இதுகுறித்து மத்திய அரசின் பிரதிநிதியாகப் பிரதமர் நரேந்திர மோடி பேசினாரா?’ என்ற கேள்வியை சசிகலா தரப்பு எழுப்பும். இதற்கு பன்னீர்செல்வம் தரவிருக்கும் பதில்களில்தான் இருக்கிறது க்ளைமாக்ஸ். பொதுவாகவே ராதாகிருஷ்ணன் முதல் விஜயபாஸ்கர் வரை இந்த விஷயத்தில் மத்திய அரசுக்குச் சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற வகையிலேயே பதில் தந்துள்ளனர். ஒரு முதலமைச்சரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்துக் கொண்ட அக்கறையை, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி எடுக்கவில்லையா என்பதைத்தான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறது ஆணையம். ‘மோடி சொல்லித்தான், எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தேன்’ என்று மோடிக்கு நம்பிக்கைக்குரிய நபராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் பன்னீர்செல்வம், இதற்கு என்ன பதில் சொல்வார் என்பதுதான் சஸ்பென்ஸ்” என்றார்கள்.

‘பன்னீர்செல்வத்தின் வாக்குமூலத்தில் மோடிக்கு எதிராகவோ அல்லது மோடி குறித்த ஏதாவது தகவல்களைப் பதிவு செய்தாலோ, மோடிக்கு சம்மன் அளித்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளது’ என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். பன்னீர்செல்வத்திடம் சசிகலா தரப்பில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்திலும், அதற்குப் பிறகும் அவர் அளித்த பேட்டிகள் குறித்து 28 கேள்விகளை எழுப்ப உள்ளார்கள். இந்தக் கேள்விகளுக்குப் பன்னீர் செல்வம் விடை அளித்தாலே ஆணையத்தின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிடும். அதன் பிறகே மோடியை விசாரணைக்கு அழைப்பது குறித்து முடிவு செய்ய இயலும் என்கிறார்கள் ஆணையத்துடன் தொடர்பில் இருக்கும் வக்கீல்கள் சிலர்.

- அ.சையது அபுதாஹிர்
அட்டைப்படம்: வீ.சக்தி அருணகிரி

ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?

ஸ்டாலினிடம் விசாரணை!

சிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் பேசினோம். “ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களைக் குறுக்கு விசாரணை மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளோம். குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சரும், துறையின் செயலாளருமே ‘சிகிச்சையில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள். ‘ஆணையம் அமைக்கவேண்டும்’ என்று வலியுறுத்திய பன்னீர்செல்வத்திடம் சில கேள்விகளை வைக்க உள்ளோம். அதற்கு அவர் தரும் பதிலை பொறுத்துதான், அடுத்த கட்டமாக யாரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று ஆணையத்திடம் கோரிக்கையாக வைக்க உள்ளோம். ஜெயலலிதா மரணம் குறித்து, ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளதால் அவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.