Published:Updated:

`ஜெ,.வுக்கு அஞ்சலி; வேகமெடுத்த கூட்டணிப் பேச்சு!' - மோடி வருகையால் உற்சாகமான பா.ஜ.க. 

``தமிழகத்தில் வெற்றிகரமான கூட்டணியை உருவாக்குவோம். இந்தப் பேச்சுவார்த்தையில் நாள் கணக்கு, வாரக் கணக்கு என எதுவும் கிடையாது. கால வரையறை செய்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது."

`ஜெ,.வுக்கு அஞ்சலி; வேகமெடுத்த கூட்டணிப் பேச்சு!' - மோடி வருகையால் உற்சாகமான பா.ஜ.க. 
`ஜெ,.வுக்கு அஞ்சலி; வேகமெடுத்த கூட்டணிப் பேச்சு!' - மோடி வருகையால் உற்சாகமான பா.ஜ.க. 

பிரதமர் மோடியின் தமிழக வருகை, பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவோடு, கூட்டணி தொடர்பான விஷயங்களையும் அலசி ஆராயத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.க-வினர். `நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க-வோடு கூட்டணி அமையக் கூடாது' என அ.தி.மு.க-வின் முன்னணி நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமரின் வருகையை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

`முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும் அஞ்சலி செலுத்திவிட்டு உரையைத் தொடங்கினார் மோடி. இதை எப்படி எடுத்துக் கொள்வது?' எனத் தமிழக பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டோம். 

``இதை ஏன் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும். அவரவர் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இறந்தபோது, இருவருக்குமே நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார் பிரதமர் மோடி. ஒருவரை மட்டும் பார்த்துவிட்டு மற்றவரைப் பார்க்காமல் அவர் செல்லவில்லை. இதற்குள் அரசியலைத் தேட வேண்டிய அவசியம் இல்லை". 

`பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்?' என்கிறார் தம்பிதுரை. கூட்டணி விஷயத்தில் உண்மையில் என்னதான் நடக்கிறது? 

`` அ.தி.மு.க-வின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்". 

சரி...அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைவதற்கு வாய்ப்பிருக்கிறதா? 

``கூட்டணிகளைப் பொறுத்தவரையில் சொந்தக் கருத்துகளை வெளியிடுவதும் அது தொடர்பாக விவாதங்கள் நடப்பதும் இயல்பான ஒன்று. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணிகள் முடிவாகும். எங்களைப் பொறுத்தவரையில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறோம்". 

`தேவேந்திரகுல வேளாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்' என நேற்று பிரதமர் பேசியிருக்கிறாரே? 

``மதுரையில் தாமரை சங்க மாநாடு நடந்தபோது, தேவேந்திரகுல வேளாளர் பிரச்னை தொடர்பாக முதன் முதலில் நாங்கள்தான் தீர்மானத்தைக் கொண்டு வந்தோம். அந்தத் தீர்மானத்தைத்தான் பிரதமர் நேற்று சுட்டிக் காட்டினார். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இதைப் பற்றி அந்த மக்களிடம் பேசிக் கொண்டு வருகிறார்''. 

தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்குப் பிரதமர் கொடுத்த ஆலோசனை என்ன? 

``கட்சி நிர்வாகிகளுக்கு எனத் தனியாக எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை. ஆனால், தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுக்குப் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. தென்மாவட்டத்தைச் சேர்ந்த பத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான கூட்டம் என்பதால், அங்குள்ள நிர்வாகிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அவர்கள் அந்தப் பணியில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். நேற்று பிரதமர் நிகழ்ச்சிக்காக வந்த மக்கள் கூட்டம், பாராட்டுக்குரியதாக இருந்தது". 

தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கான கூட்டணி முடிவாகிவிட்டதா? 

``பா.ஜ.க-வை ஏற்றுக் கொள்கிற, பிரதமர் நரேந்திரமோடியை ஏற்றுக்கொள்கின்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருக்கின்றன. தமிழகத்தில் வெற்றிகரமான கூட்டணியை உருவாக்குவோம். இந்தப் பேச்சுவார்த்தையில் நாள் கணக்கு, வாரக் கணக்கு என எதுவும் கிடையாது. கால வரையறை செய்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது. அதிகப்படியான கட்சிகள் இருக்கின்ற மாநிலம் தமிழகம். அதனால் எந்தக் கட்சிகள் எந்த நேரத்தில் கூட்டணிக்குள் வரும் என்று சொல்ல முடியாது. நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல். அடுத்த பிரதமர் யார் என்பதை அடையாளம் காட்டக் கூடிய சிக்கல், அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கின்றன. நாட்டை வழிநடத்திக்கொண்டிருக்கும் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ளக் கூடிய கட்சிகள், எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். கூட்டணி விஷயங்கள் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் பிரமாண்ட கூட்டணியை அறிவிப்போம்".