Published:Updated:

சித்தராமையா கடந்து வந்த பாதை!

சித்தராமையா கடந்து வந்த பாதை!
சித்தராமையா கடந்து வந்த பாதை!

பெங்களூரு: குக்கிராமத்தில்  ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு மகனாக‌ பிறந்த சித்தராமையா, இன்று கர்நாடகா முதல்வராக அரியணை ஏறி இருக்கிறார்.

சித்தராமையா கடந்து வந்த பாதை!

அவர் கடந்து வந்த பாதை இதோ...

காடு மேடு மலையென தொடர்ந்து பாய்ந்து,பெரும் மடைகளை பிளந்து,தடைகளை உடைத்து,பெரும் படையுடன் முதல் முறையாக அரியணை எனும் கடலில் சங்கமித்து இருக்கிறார் சித்தராமையா. மைசூர் பக்கத்தில் இருக்கும் 'சித்திரமன‌ ஹூண்டி'எனும் குக்கிராமத்தில்  ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு மகனாக‌ பிறந்த சித்தராமையா, விதான் சவுதாவில் கொடியேற்றப் போகிறார் என்பது எத்தனை பெரிய சாதனை. அவர் கடந்து வந்த கல்லும் முள்ளும் நிறைந்த பாதையை திரும்பி பார்த்தால் மலைப்பாக இருக்கிறது!

கடலில் மூழ்கி முத்தெடுப்பது எவ்வளவு கஷ்டமோ, அதை விட கஷ்டமானது காங்கிரசில் முடிசூடுவது. அதுவும் 6 ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சியில் இருந்து வந்த ஒருவர், காங்கிரஸில் இணைந்து முதல்வராகி இருப்பது இதுவே முதல்முறை. கர்நாடக அரசியல் வரலாற்றில் 'குருபா' சமூகத்தை சேர்ந்தவர் முதல்வர் நாற்காலியை அலங்கரிப்பதும் இதுவே முதல் முறை!

சித்தராமையா கடந்து வந்த பாதை!

1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பிறந்த சித்தராமையா,தொடக்க கல்வியை சொந்த ஊரில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். மதிய உணர்விற்காகவே உயர்நிலைப் பள்ளியில் சேரும் சூழலில் தான் அவரது குடும்பம் இருந்தது. படிப்படியாக கஷ்டப்பட்டு படித்து மைசூரில் இளங்கலை அறிவியல் பயின்றார். சமூகத்தின் மீது கொண்டிருந்த அக்கறையால் சட்டமும் பயின்றார். சட்டக் கல்லூரியில் படித்த காலக் கட்டத்தில் சோசலிச கருத்துகளில் ஈர்க்கப்பட்டு, மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்.

'சமூக நீதியே நம் சமூகத்திற்கு அவசியம்' என சோசலிச கோட்பாடுகளை உள்வாங்கியதால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் 1977ல் 'லோக் தள' கட்சியில் சேர்ந்தார். 1983ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மைசூர் சாமூண்டிஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

சித்தராமையா கடந்து வந்த பாதை!

அப்போது கர்நாடக முதல்வராக‌ ராமகிருஷ்ண ஹெக்டேவின் சமதர்ம கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவரின் 'ஜனதா கட்சி'யில் இணைந்தார். சித்தராமையாவின் போராட்ட குணமும், சமூக அக்கறையையும் கண்டு வியந்த ராமகிருஷ்ண ஹெக்டே, அவருக்கு போக்குவரத்து அமைச்சர், கால்நடை நலத் துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வழங்கினார்.

1985 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற‌த்திற்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு நிதி அமைச்சர் பதவி தரப்பட்டது. கட்சியிலும், ஆட்சியிலும் சிறப்பாக செயல்பட்டதால் சித்தராமையா 1992ஆம் ஆண்டு கர்நாடக மாநில ஜனதா கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். 1994ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதால்,தேவகவுடாவின் அமைச்சரவையில் துணை முதல்வர் பதவிக்கு முன்னேறினார்.

1999ல் ஜனதா தளம் இரண்டாக உடைந்த போது தேவகவுடாவுடன் இணைந்து வெளியேறி, 'மதசார்பற்ற ஜனதா தளம்' என்ற கட்சியை தொடங்கினர். தேவகவுடா அக்கட்சியின் தலைவராகவும், சித்தராமையா மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த மதசார்பற்ற ஜனதா தள ஆட்சியில் மீண்டும் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டு பிஜேபியுடன் கைகோர்த்து 'நாடக அரசியல்' நடத்தி குமாரசாமி ஆட்சி அமைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி, 'மக்களுக்கான சமூக நீதி இயக்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களை சந்தித்து போராட்டங்களை முன்னெடுத்தார்.

அப்போது சித்தராமையா செல்லும் இடம் எல்லாம் கூட்டம். அதனால் சோனியா காந்தி சித்தராமையாவிற்கு காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுக்க, காங்கிரசில் ஐக்கியமானார் சித்தராமையா.
 

சித்தராமையா கடந்து வந்த பாதை!

2009 ஆம் ஆண்டு பிஜேபி ஆட்சியை பிடித்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் சித்தராமையா. பிஜேபி அமைச்சர்களின் வரலாறு காணாத ஊழல், மோசமான நிர்வாகம், பல முறை அமைச்சரவை மாற்றம், மூன்று முறை முதல்வர் மாற்றம் என அனைத்து விஷயங்களையும் கையிலெடுத்து திறம்பட செயல்பட்டார். கர்நாடக மக்களுக்கு ஓரளவுக்கு பிஜேபி மீது கோபம் வந்திருக்கிறது என்றால், அதற்கு எதிர்கட்சி தலைவரான சித்தராமையாவின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என ஊடகங்கள் கொண்டாடின.

##~~##
''போராட்ட குணத்தையும்,சமூக நீதி கொள்கையையும் இரட்டை குழல் துப்பாக்கி போல கொண்டு செயல்படும் 64 வயதான  சித்தராமையா, கர்நாடகத்தின் முதல்வராக வேண்டும்'' என வேட்பாளரை அறிவிப்பதத‌ற்கு முன்பே மின்னணு ஊடகங்களும்,அச்சி ஊடகங்களும் வரிந்து கட்டி கொண்டு வேலை பார்த்தன.

இதனால் மக்கள் மத்தியிலும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் சித்தராமையாவின் பேர் ஆழமாக வேரூன்றியது. அவருக்கு போட்டியாக கருதப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஷ்வர் தேர்தலில் துரதிஷ்டவசமாக தோற்றதால், பழம் நழுவி சித்தராமையாவின் கிண்ணத்தில் விழுந்தது.

121 இடங்களை காங்கிரஸ் பிடித்த போது வழக்கம் போல 'நான் தான் முதல்வர்'என பலரும் போட்டி போட்டனர். காங்கிரஸ் மேலிடமும் சித்தராமையாவை விட மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு முதல்வர் பதவி வழங்க ஆசைப்பட்டது. அதற்காக காங்கிரசின் மூத்த தலைவர் அந்தோணி தலைமையில் விவாதித்த போது '80 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவிற்கே' கிடைத்தது. இதனாலே சித்தராமையா முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல்வராக அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி துளிகளிலேயே சித்தராமையா, முந்தைய முதல்வர்களைப் போல கோயில்களுக்கும் கோட்டைக்கும் முதலில் போகாமல், எழுத்தாளர்களை தேடிப் போனார். மடாதிபதிகளை தேடிப் போய் காலில் விழவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்து ஆட்சி குறித்து கலந்து ஆலோசித்தார்.

முதலில் கன்னட தேசிய கவிஞர் சிவருத்ரப்பாவை சந்தித்த போது,''அரசியலில் சமரசங்களுக்கு அடிபணிந்து நேர்மையை இழந்து விடக்கூடாது''என அறிவுரை கூறினார். அதன் பிறகு ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரா வீட்டுக்கு போனார். ''கன்னட இலக்கிய வளர்ச்சிக்காக, கன்னட யூனிகோட் எழுத்துருவை அரசு முதலில் அங்கீகரிக்க வேண்டும்'' என வேண்டுகோள் வைத்தார் கம்பாரா.

அதனை தொடர்ந்து ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான யூ.ஆர்.அனந்தமூர்த்தியை தேடிப் போனார். ''இனம், மொழி, மதம் என பேதங்களை கடந்து எல்லாருக்கும் நல்லாட்சி.உழைக்கும் மக்களுக்கு நண்பனாக செயல்பட வேண்டும்''என அடுக்கடுக்காய் நிறைய ஆலோசனைகளை வழங்கினார் அனந்தமூர்த்தி.

இதனைத் தொடர்ந்து அன்றிரவே பெங்களூருவில் இருக்கும் சில முக்கியமான பத்திரிகையாளர்களையும், ஐஏஎஸ் அதிகாரிகளையும் வீட்டுக்கு அழைத்து,''ஆட்சி எப்படி இருக்க வேண்டும்?அமைச்சரவை எப்படி இருக்க வேண்டும்? உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?'' என விவாதித்திருக்கிறார்.

இதனையெல்லாம் முடித்த பிறகே பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்றார். ''எனது இரண்டு மகன்களும் எக்காரணம் கொண்டும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் தலையிட மாட்டார்கள். இதுவரை அரசியலில் இல்லை. இனிமேலும் நுழைய மாட்டார்கள்''என அறிவித்து இருப்பதால் சித்தராமையாவை கட்சிகளின் எல்லைகளை கடந்து அனைவரும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கன்ன‌ட மக்களால் நல்லவர், வல்லவர் என கொண்டாடப்பட்டாலும் தமிழர்கள் பிரச்னையிலும், காவிரி விவகாரத்திலும் எப்படி செயல்படப் போகிறார் என்பது போக போக தான் தெரியும்!

இரா.வினோத்

படங்கள்:
வசந்தகுமார்