Published:Updated:

வீர தீர செயல், கமிஷனர் கொடுத்த வேலை, உதறிய சூர்யா... இப்போது வீர தீர செயல் விருது!

"விருது வாங்கப் போகும்போது நான் சம்பாதிச்ச காசுலதான் புது டிரெஸ் வாங்கிப் போட்டுக்கிட்டுப் போனேன். அங்கே வெச்சு அதிகாரிங்ககிட்டகூட எனக்கு கவர்மென்ட் வேல வாங்கிக் கொடுங்கன்னு கேட்டேன்!"

வீர தீர செயல், கமிஷனர் கொடுத்த வேலை, உதறிய சூர்யா... இப்போது வீர தீர செயல் விருது!
வீர தீர செயல், கமிஷனர் கொடுத்த வேலை, உதறிய சூர்யா... இப்போது வீர தீர செயல் விருது!

ந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் குடியரசு தின விழா தமிழ்நாட்டிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் பெருமைகள், சாதனைகளை அனைவரும் அறியச் செய்திடும் அந்நிகழ்ச்சியில் எல்லோரும் எதிர்பார்க்கும் விருதென்றால் அது `வீர தீரச் செயல் விருது', `காந்தி விருது', `கோட்டை அமீர் விருது' என மூன்று பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகளில் இந்த முறை வீர தீரச் செயல் விருதினைப் பெறுபவர்களில் அண்ணா நகரைச் சேர்ந்த சூர்யாவும் ஒருவர். 

சூர்யாவைப் பற்றிய அறிமுகம் விகடன் வாசகர்களுக்குத் தேவையில்லை. தமிழகம் முழுவதிலுமுள்ளவர்கள் சூர்யாவின் வீரமிக்க செயலை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். சூர்யா பற்றி சின்ன ஃப்ளாஷ்பேக்...

சென்னை அண்ணா நகர், சிந்தாமணியைச் சேர்ந்த மருத்துவர் அமுதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற திருடனை விரட்டிப்பிடித்தவர் சூர்யா. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சூர்யாவின் இந்தத் துணிச்சலைப் பாராட்டி, சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அவருக்குத் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கிக்கொடுத்திருந்தார். தற்போது குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரிடமிருந்து வீர தீரச் செயல்மிக்க விருது பெற்றிருப்பது குறித்து சூர்யாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். 

``எனக்குப் பெருசா என்ன சொல்றதுன்னே தெரியலைங்க. நான் எட்டாவது வரைதான் படிச்சிருக்கேன். குடியரசு தினத்தன்னிக்கு ஸ்கூலுக்கே போக மாட்டேன். ஆனா, நாலு நாளைக்கு முன்னாடி ரெண்டு ஆபீஸருங்க என் வீட்டுக்கு வந்து, `நாளைக்கு மறுநாள் கோட்டைக்கு வந்துடு தம்பி. உனக்கு முதலமைச்சர் விருது கொடுக்கப்போறாங்க'ன்னு சொன்னாங்க. சார், எனக்கு விருதெல்லாம் வேணாமுங்க. எனக்கு செட் ஆகிற மாதிரி எதனா வேல வாங்கிக் கொடுங்கன்னு சொன்னேன். `நீ அங்க வாப்பா. உனக்கு எல்லாமே பாத்துப் பண்ணுவோம்' ன்னு சொல்லிட்டுப் போனாங்க. நானும் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் என் ஃப்ரெண்டோட பைக்ல கிளம்பிப் போனேன். அங்க போனதும் கமிஷனர் சார் என்னைப் பாத்து, `நல்லா இருக்கியா தம்பி. வேலையெல்லாம் நல்லா பாக்குறியா' ன்னு கேட்டாரு. நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்கன்னு பதிலுக்குக் கேட்டேன். சிரிச்சிட்டு என்னைய உள்ள கூட்டிட்டுப் போனாரு. அங்க கொடி ஏத்துனாங்க. கலை நிகழ்ச்சிகள்லாம் நடத்துனாங்க. ரொம்ப நேரம் அதையெல்லாம் ஆச்சர்யமாப் பாத்துட்டு இருந்தேன். அப்புறம் முதலமைச்சர் என் கையில ஒரு விருதைக் கொடுத்து வாழ்த்தினாங்க. விருதோட இருபத்து ஐந்தாயிரம் ரூபாயும் கொடுத்து எனக்கு சாப்பாடுலாம் போட்டு நல்லா பாத்துக்கிட்டாங்கணா” என்ற சூர்யா தொடர்ந்து,

``அண்ணா, எனக்கு கமிஷனர் சார் டி.வி.எஸ் ல வேல வாங்கிக் கொடுத்திருந்தாங்க. ஆனா, அங்கே எனக்குப் போக முடியலை. எனக்கு அந்த வேலையும் செட் ஆகல. அதனால அங்க இருந்து வெளிய வந்துட்டேன். அப்புறமா நானே சொந்தமா ஏ.சி, வாஷிங் மெஷின்லாம் ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஒரு நாளைக்கு 400 ரூவா கிடைக்குது. இப்போதைக்கு அதை வெச்சுதான் சமாளிக்குறேன். அன்னிக்குகூட விருது வாங்கப் போகும்போது நான் சம்பாதிச்ச காசுலதான் புது டிரெஸ் வாங்கிப் போட்டுக்கிட்டுப் போனேன். அங்கே வெச்சு அதிகாரிங்ககிட்டகூட எனக்கு கவர்மென்ட் வேல வாங்கிக் கொடுங்கன்னு கேட்டேன். இன்னிக்கு பாரிஸ் கார்னர்ல இருக்கிற கலெக்டர் ஆபீஸுக்கு வான்னு சொல்லியிருந்தாங்க. காலைலதான் அங்க போயி மனு கொடுத்திட்டு வந்திருக்கேன். விருது கொடுத்த மாதிரி எனக்கு செட் ஆகுற வகையில எதனா வேலையும் கொடுத்தா நல்லா இருக்கும்ணா” என்கிறார் சூர்யா.